No menu items!

79 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்த மகாத்மா காந்தி!

79 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்த மகாத்மா காந்தி!

ராகுல் காந்தி, அண்ணாமலை போன்ற தலைவர்கள் நடைப்பயணம் செல்வதைப் பற்றிய செய்திகளை இப்போது தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அடிக்கடி பார்க்க முடிகிறது. இந்தியாவில் இந்த நடைபயணங்களுக்கு முதலில் வித்திட்டவர் நம் மகாத்மா காந்தி.

இப்போது இருக்கும் தலைவர்கள் எல்லாம் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நடக்கிறார்கள். இதில் ராகுல் காந்தியாவது பரவாயில்லை. தினமும் தொடர்ச்சியாக நடக்கிறார். முன்பு இதே போன்றதொரு நடைப்பயணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மேற்கொண்டிருந்தார். ஆனால் அண்ணாமலையின் நடைப்பயணத்தை நடைப்பயணம் என்றே சொல்ல முடியாது. இன்ஸ்டால்மெண்டில் நடந்துகொண்டு இருக்கிறார்.

ஆனால் காந்தியின் நடைப்பயணங்கள் அப்படியல்ல. அவர் மக்களின் வாக்குகளுக்காக நடக்கவில்லை. மாறாக மக்களுக்காக நடந்தார். நாட்டு மக்களின் சுதந்திரத்துக்காக நடந்தார். இந்த வகையில் அவர் நடந்தது கொஞ்சநஞ்ச தூரமல்ல… 1914-ம் ஆண்டுமுதல் 1948-ம் ஆண்டுவரை அவர் மொத்தம் 79,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறார் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்த கணக்குப்படி பார்த்தால் இந்த உலகத்தையே அவர் 2 முறை வலம் வந்திருக்கலாம். இந்த நடையெல்லாம் அவர் நடந்தது நாட்டுக்காக. நாட்டு மக்களுக்காக.

பொதுவாகவே மகாத்மா காந்திக்கு நடப்பதென்றால் மிகவும் பிடிக்கும். இங்கிலாந்தில் படிக்கச் சென்ற காலகட்டத்தில் மகாத்மா காந்திக்கு நடைப்பயணத்தின் மீதான ஈர்ப்பு வந்துள்ளது. அதற்கு அவரது பொருளாதார நிலையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

1888 முதல் 1891 வரை இங்கிலாந்தில் சட்டப் படிப்பு படித்த காலத்தில் ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துடன் காந்தி தங்கியுள்ளார். இந்த காலகட்டத்தில் செலவைக் குறைப்பதற்காக, தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து கல்லூரிக்கு தினமும் 10 மைல் தூரம் நடந்தே சென்றிருக்கிறார் காந்தி.

லண்டனில் இருந்து மும்பை திரும்பிய பிறகும், அவரது நடைப் பயணத்தில் மாற்றம் வரவில்லை. தான் தங்கியிருந்த இடத்தில் இருந்து மும்பை உயர் நீதிமன்றத்துக்கு தினமும் 45 நிமிட நேரம் நடந்தே சென்றுள்ளார் காந்தி.

“இதுபற்றி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள மகாத்மா காந்தி, “மும்பையிலும் லண்டனிலும் நடப்பதற்கு ஒரு வித்தியாசம்தான் இருந்தது. லண்டனில் சீதோஷண நிலை மிகவும் குளுமையாக இருக்கும். அதனால் எளிதாக நடக்கலாம். ஆனால் மும்பை வெயிலில் நடப்பது கடினமாக இருந்தது” என்கிறார்.

பின்னர் மும்பையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சென்ற பிறகும் நடைப்பயிற்சியை அவர் விடவில்லை. பிற்காலத்தில் இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட காலத்திலும் நடைப் பயிற்சியை அவர் விடாமல் பற்றிக்கொண்டிருந்தார்.

சபர்மதி மற்றும் சேவாகிராம் ஆசிரமத்தில் தனது தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக நடைப் பயிற்சியையும் அவர் சேர்த்திருந்தார். மும்பையில் 1924-ம் ஆண்டு குடல் அழற்சிக்காக அறுவை சிகிச்சை செய்த காலத்திலும் அவர் நடைப்பயிற்சியை விடவில்லை. இந்த காலகட்டத்திலும் தன் உதவியாளர்களுடன் ஜுஹூ கடற்கரையில் தினமும் 40 நிமிடங்கள் அவர் நடந்துள்ளார்.

1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் சென்றிருந்த சமயத்தில், தினமும் காலை 4 மணிக்கே எழுந்து, ஆளில்லாத தெருக்களில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

1931-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்துக்காக மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டபோது அவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகியிருந்தது.

இந்த காலகட்டத்திலும் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரை 386 கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் காந்தியடிகள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடிப்படையையே ஆட்டம் காண வைத்த நடைப்பயணம் அது.

காந்தியடிகள் அன்று நாட்டுக்காக நடையாய் நடந்ததால்தான் நாம் இன்றைக்கு சுதந்திரமாக எந்தக் கவலையும் இல்லாமல் மார்னிங் வாக் போகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...