அமித்ஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்துக் கொண்டிருக்கின்றன. மகாரஷ்டிராவில் உதவ் தாக்கரே அரசைக் கவிழ்த்து மீண்டும் சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வந்ததற்கு மட்டுமல்ல, சிவசேனாவின் கலகத் தலைவர் ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தற்கும். அமித்ஷாவின் ராஜதந்திரம், சாமர்த்தியம், அரசியல் ஞானி என்றெல்லாம் அமித்ஷா புகழப்படுகிறார்.
என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?
சிவசேனா கட்சியின் தலைமையின் மீது அதிருப்தி கொண்ட அந்தக் கட்சியின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டே எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார். அவருக்கு 38 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். சில சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவும் கிடைக்கிறது. மகாராஷ்டிராவில் நடந்துக் கொண்டிருந்த உதவ் தாக்கரேயின் ஆட்சி கவிழ்கிறது.
பாஜகவும் ஷிண்டேயும் இணைகிறார்கள். மகாராஷ்டிரா ஆளுநரை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திக்கிறார். அவர்தான் அடுத்த முதல்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 38 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை மட்டும் வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்கிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாஜகவுக்கு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 105 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இத்தனை உறுப்பினர்களின் பலத்தை வைத்துக் கொண்டு ஃபட்னாவிஸ் முதல்வராகியிருக்கலாம். ஆனால் பாஜக முதல்வர் பதவியை ஷிண்டேக்கு விட்டுக் கொடுத்துவிட்டது.
இதற்கு காரணங்கள் இருக்கின்றன.
2019ல் நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி மெஜாரிட்டியை பெறுகிறது. பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களில் வென்றன. 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 145 இடங்கள் இருந்தால் மெஜாரிட்டி. ஆட்சி அமைக்கலாம். ஆனால் மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களை வென்றும் பாஜக-சிவசேனா கூட்டணியால் ஆட்சி அமைக்க இயலவில்லை. காரணம் யார் முதல்வராவது என்பதில் போட்டி. பாஜக ஃபட்னாவிசை முதல்வராக்க விரும்பியது. சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே, தான் முதல்வராக விரும்பினார். இந்த சண்டை நடந்துக் கொண்டிருந்தபோது சிவசேனாவை கழற்றிவிட்டு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸை உடைத்து அங்கிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயன்றார் ஃபட்னாவிஸ். முதல்வராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆனால் மூன்று நாட்கள்கூட அவரால் முதல்வராக நீடிக்க இயலவில்லை. பிரிந்து வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் சரத்பவாருடன் இணைந்துவிட ஃபட்னாவிஸ் அசிங்கப்பட்டு ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் உதவ்தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்சினை. ஆனால் மீண்டும் ஃபட்னாவிஸ்னால் முதல்வர் பொறுப்பேற்க முடியவில்லை.
இந்த முறை ஃபட்னாவிஸ்தான் முதல்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஃபட்னாவிஸே தான் தான் முதல்வர் என்று நினைத்திருந்தார். ஷிண்டேக்கு விட்டுக் கொடுங்கள் என்று பாஜக மேலிடம் கேட்டபோது முரண்டு பிடித்தார் என்று செய்திகள் வந்திருக்கின்றன.
பிரதமர் மோடி பேசியிருக்கிறார், அமித்ஷா பேசியிருக்கிறார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். ‘ஃபட்னாவிஸ் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று பாஜக தலைவர் நட்டா வெளிப்படையாக தெரிவித்தார். அதன்பிறகே ஃபட்னாவிஸ் இறங்கி வந்திருக்கிறார், வேறு வழியில்லாமல்.2019ல் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக் கொடுக்க முன்வராத பாஜக இன்று விட்டுக் கொடுத்திருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.
ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியதன் மூலம் பாஜக பல காய்களை ஒரே கல்லில் அடித்திருக்கிறது.
சிவசேனாவுக்கு முதல்வர் வாய்ப்பு கொடுத்ததன் மூலம் அதிகாரத்துக்கு பாஜக அலையவில்லை என்ற பிம்பத்தை உருவாக்கியிருக்கிறது.
சிவசேனாவின் ஷிண்டே முதல்வராகியிருப்பது உதவ் தாக்கரேயுடன் இருக்கும் சிவசேனா உறுப்பினர்களை இழுக்கும் முயற்சிகளுக்கு உதவும். சிவசேனா ஏக்நாத்தின் கட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மராத்தா சமூகத்தை சார்ந்த ஷிண்டே முதல்வராக்கியது அந்த சமூகத்தினரை பாஜகவின் பக்கம் திருப்பும்.
ஃபட்னாவிஸை துணை முதல்வராக்கியதன் மூலம் கூட்டணிக்காக தாங்கள் இறங்கிப் போகவும் தயார் என்பதை மற்றக் கட்சிகளுக்கு உணர்த்தும்.
இவையெல்லாம் வெளி அரசியலுக்காக. வெளிப்புறத் தோற்றத்துக்காக.
ஆனால் பாஜகவின் உள் அரசியலும் இதில் விளையாடியிருக்கிறது.
ஃபட்னாவிஸ்க்கு பாஜகவின் ஆதார அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதரவு இருக்கிறது. இதை மோடியும் அமித்ஷாவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஃபட்னாவிஸ் பாஜகவின் பிரதமர் வேட்பாளாராக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது என்று பாஜகவின் மேலிடத்தில் பேச்சு இருக்கிறது.
அடுத்த இரண்டரை வருடங்கள் மகாரஷ்டிராவில் ஃபட்னாவிஸ் முதல்வராக இருந்தால் அவர் ஊடகங்களில் அதிக கவனம் பெறுவார். முக்கியத்துவம் பெறுவார். ஏற்கனவே பிரதமர் வேட்பாளர் போட்டியில் யோகி ஆதித்யநாத் இருக்கும் சூழலில் இன்னொரு போட்டியாளரை உருவாக்க மோடி – அமித்ஷா கூட்டணி விரும்பவில்லை என்றே டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.