ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், லிஜோமோல்ஜோஸ், லாஸ்லியா நடித்த படம் ஜென்டில்வுமன். சென்னையில் நடந்த இந்த படவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ராஜூமுருகன், த.செ.ஞானவேல் கலந்துகொண்டு காரசாரமாக பேசினர். ராஜூமுருகன் பேசியதாவது
‘‘இயக்குனர் ஜோஷ்வாவுக்கு இது முதல் படம். பாடலாசிரியர் யுகபாரதியின் தம்பிகளில் இவரும் ஒருவர். நான் அவருக்கு சீனியர். இந்த படத்துக்கு பாடல்களை எழுதிக்கொடுத்தது மட்டுமல்ல, வசனமும் எழுதியிருக்கிறார் யுகபாரதி. கோவிந்த்வசந்தா இசையமைத்துள்ளார். உதவி இயக்குனர்களுக்கான சங்கமும் யுகபாரதியின் வீடு. அங்கே அவ்வளவு பேர் கூடியிருப்பார்கள். அண்ணி அவர்களுக்கு சுக்குகாப்பி போட்டுக்கொடுத்தே டயர்டு ஆகிவிடுவார்கள். சினிமா பண்ண விரும்பும் உதவி இயக்குனர்களுக்கு இலக்கியமும், பயணமும், அரசியலும் முக்கியம். அது கொடுக்கும் அனுபவம் முக்கியம். அது இல்லாதவர்கள் வெளிநாட்டு படங்களை பார்த்து மொக்கையாக படம் எடுப்பார்கள். அவர்கள் ரொம்ப காலம் பீல்டில் நிலைத்து நிற்கமாட்டார்கள். ஒரு காலத்தில் அவர்களின் படைப்பு எலும்பு கூடு ஆகிவிடும். இந்த விஷயங்களை 3 விஷயங்களை எடுத்துக்கொள்பவர்கள் ஜெயிப்பார்கள். இப்படிப்பட்ட அனுபவத்தை, வாசிப்பு பழக்கத்தை உதவி இயக்குனர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கிறார் யுகபாரதி. அந்த பட்டறையில் இருந்து வந்தவர் ஜோஷ்வா. அதனால், முக்கியமான விஷயத்தை இந்த படம் பேசும் என நினைக்கிறேன். ஒரு அடர்த்தியான விஷயத்தை, 20 நாட்களில் படப்பிடிப்பை முடித்து இருக்கிறார் இயக்குனர். ஜென்டில்மேன் பற்றி பேசுகிறோம். இந்த படம் ஜென்டில்வுமன் பற்றி பேசுகிறது.
இந்த படம் சென்சார் பிரச்னையில் சிக்கியது. என் படங்களுக்கும் இப்படி சிக்கி இருக்கிறது. அதனால், இயக்குனர் எனக்கு போன் செய்தார். என் அனுபவத்தில், நீங்க இதையெல்லாம் பண்ணுங்க என்றேன். இங்கே அனைத்தையும் புனிதப்படுத்துகிறார்கள். நான் உன்னை சமமாக நடத்துறேன் என்று சொல்பவர்கள், என் பொண்டாட்டியை சமமாக நடத்துறேன் என்று சொல்பவர்கள். நான் ஜாதி பார்க்கமாட்டேன். நான் வீட்டுல அனைவரையும் கூப்பிடுவேன் என்று சொல்பவர்களை மட்டும் நம்பவே கூடாது. அவன்தான் ரொம்ப டேஞ்சர் ஆன ஆளு.
இன்றைக்கு சமூகம் மாறிவிட்டது, டிஜிட்டலுக்கு போய்விட்டோம். ஆனால், நாம் அரசியல், தனி மனித உணர்வுகளில் தேங்கிவிட்டோம். ஜெய காந்தன்,ருத்ரைய்யா, மகேந்திரன் போன்றவர்கள் நிறைய புரட்சி செய்துவிட்டார்கள். நாம் அதற்குபின் எதையும் செய்யவி்ல்லை. இன்னும் பின்னோக்கி போய்க்கொண்டு இருக்கிறோம். நாங்கள் புனிதப்படுத்துகிறேன் என்று சொல்பவர்கள் இந்திய சமூகத்தின் எதிரிகள். பெண்களை கடவுளாக பார்க்கிறோம் என்பார்கள். நீ எதுக்குடா கடவுளாக பார்க்குறீங்க. அவர்களை மனுஷியாக பாருங்க. கடவுளாக பார்க்கிற சமூகம் ஆபத்தானது. இந்த படத்தில் நல்ல கருத்தை சொல்கிறது. இந்த மாதிரியான படங்களுக்கு பணம்போட்டு எடுப்பவர்கள் குறைவு. இயக்குனர் ஜோஷ்வாக்கு முக்கியமானதாக இருக்கும்’ என்றார்
த.செ.ஞானவேல் பேசியது ‘என்னுடைய ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக சிறப்பாக நடித்தவர் லிஜோமோல்ஜோஸ். அவரை இப்போது மேடம் என்று பலர் பேசுகிறார்கள்.நான் அவரை என் கதாநாயகியாக, சிறந்த நடிகையாகவே இன்னமும் பார்க்கிறேன்.எதுக்கு இந்த தலைப்பு என்று இயக்குனரிடம் கேட்டேன். கதைக்காகவா? அல்லது பரபரப்பு ஏற்படுத்தவா என்றேன். ஸ்ட்ரீயோ டைப்பை உடைக்க இந்த தலைப்பு என்றார். நான் வாழ்க்கையே ஸ்ட்ரீயோ டைப்பில் ஓடுகிறது. இந்த வயதில் படிக்கணும், இந்த வயதில் கல்யாணம் செய்யணும். இந்த வயதில் செத்துபோகணும்னு நினைக்கிறார்கள். அதை உடைப்பது சாதாரணம் அல்ல. நான் பத்திரிகையாளராக இருந்தபோது அப்படிப்பட்டதை உடைத்தேன். ஒரு காலத்தில் கற்பு குறித்து குஷ்பு சொன்னது பரபரப்பானது. அவர் தவறு என்று பலர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது இந்தியாவில் எய்ட்ஸ் பாதிப்பில் இந்தியாவில் 2வது இடத்தில் இருப்பது தமிழ்நாடு என்று கட்டுரை எழுதினேன்.