No menu items!

புத்தகம் படிப்போம்: தமிழ்நாட்டில் தள்ளாடும் மதுவிலக்கு!

புத்தகம் படிப்போம்: தமிழ்நாட்டில் தள்ளாடும் மதுவிலக்கு!

டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குவது, காலையில் 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை, 500 மதுக்கடைகள் மூடல், கள்ளச் சாராய சாவுகள், மீண்டும் கள்ளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற விவாதம் என மது கடந்த சில மாதங்களாகவே பேசுபொருளாக இருந்து வருகிறது. ஆனால், வரலாற்றை பார்த்தால் இப்போது மட்டுமல்ல மது எப்போதும் பேசுபொருளாகவே இருந்து வந்துள்ளது. இந்த மது என்கிற விஷயம் தமிழ்நாடு அரசியலில் வகித்திருக்கும் பாத்திரத்தை, அதன் சமூக வரலாற்றுப் பின்னணியோடு விவரிக்கும் புத்தகம் இது.

மது விலக்கு பற்றி 1980 தொடங்கி தொடர்ந்து பேசியும் போராட்டங்கள் நடந்தியும் வரும் பாமகவும், கடந்த சில ஆண்டுண்டுகளாக குரல் கொடுத்துவரும் மதிமுக வைகோவும் மட்டுமல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாறிமாறி தமிழகத்தை ஆட்சி செய்துவரும் திமுகவும் அதிமுகவும்கூட மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றுதான் பேசி வருகின்றன. ஆனால், இவர்களுக்கும் முன்பே 1920 முதலே தேர்தல் அரசியலை மையப்படுத்தியே மதுவிலக்கு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்கிற அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் செய்தியுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம்.

ஆம், தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதத்தில் இருக்கும் விவகாரம் மதுவிலக்கு. இந்த நீண்ட நெடிய காலகட்டத்தில் மதுவிலக்கு விவகாரத்தைச் சுற்றி இயங்கிய அரசியல், வரலாறு உட்பட அனைத்துப் பரிமாணங்களையும் விரிவாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’, ‘திராவிட இயக்க வரலாறு’ ஆகிய பரவலான கவனத்தைப் பெற்ற அரசியல் புத்தகங்களை எழுதியுள்ள ஆர். முத்துக்குமார் இந்நூலை எழுதியுள்ளார்.

இந்நூலில் மது விலக்கு தொடர்பாக ஆர். முத்துக்குமார் மேற்கொண்டுள்ள தேடல் பயணம் சுதந்திரப் போராட்ட காலகட்டம் வரைக்கும் செல்கிறது. இதன்மூலம் அதிகம் பேசப்படாத பல அரசியல் தகவல்களை இந்தப் புத்தகத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். 1921ல் சென்னை மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்ற செய்தியிலிருந்து இன்றைய தேர்தல் களநிலவரம் வரைக்கும், மதுவிலக்கு கோரிக்கை துணைகொண்டு தேர்தல் நிலவரங்களையும் சேர்த்து அலசுகிறார், ஆர். முத்துக்குமார்.

காந்தியின் நிர்மாணத் திட்டம், காந்தி – இர்வின் ஒப்பந்தம், பிராமணர் – பிராமணர் அல்லாதார் போராட்டம், ராஜாஜியின் துணிச்சலான முயற்சிகள், காங்கிரஸ் நடத்திய களப் போராட்டங்கள், மத்தியில் ஆட்சியாளர்களாக இருந்த இந்திரா காந்திக்கும் மொரார்ஜி தேசாக்கும் இடையேயான முரண்பாடுகள், மத்திய அரசின் ஆய்வுக் கமிட்டிகள் உட்பட பல நுட்பமான தகவல்களையும் இந்நூலில் தேடி தொகுத்துத் தந்துள்ளார்.

காந்தி – ராஜாஜி காலம், ஓமந்தூரார் – அண்ணா காலம், கருணாநிதி காலம், எம்.ஜி.ஆர். காலம், கருணாநிதி – ஜெயலலிதா காலம், போராட்ட காலம் என ஆறு பகுதிகளாக பிரித்து, தமிழ்நாட்டின் மதுவிலக்கு அரசியலை காலவரிசைப்படி விவரிக்கிறது இந்தப் புத்தகம். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் ஒன்றாக மதுவிலக்கு இருந்தபோது அந்த விவகாரத்தை ராஜாஜி கையிலெடுத்ததன் பின்னணியைக் காந்தி – ராஜாஜி காலம் விவரிக்கிறது. சென்னை மாகாணத்தில் மது விலக்கு அமலுக்கு வந்தது, அதை கடைபிடிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் உட்பட பல பிரச்சினைகள் இப்பகுதியில் அக்காலகட்ட செய்தித்தாள் ஆதாரங்களுடன் காட்டப்பட்டுள்ளது. பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைப்பதற்கு இராஜாஜி கையில் எடுத்த கேடயமே மதுவிலக்கு என்பதை, காந்தி – ராஜாஜியின் பேரனான ராஜ்மோகன் காந்தியின் பதிவிலிருந்து எடுத்துக்காட்டியிருப்பது சிறப்பு. ராஜாஜி காலம் முதல் அண்ணா ஆட்சிக் காலம் வரை தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டத்தில் கள்ளச் சாராயமும் புழக்கத்தில் இருந்தையும் சுட்டிக் காட்டுவது மற்றொரு சிறப்பு.

ராஜாஜிக்குப் பிறகு டி. பிரகாசம் தொடங்கி அண்ணா வரை இருந்த பல்வேறு முதல்வர்களின் காலத்தில் மதுவிலக்கு கடைபிடிக்கப்பட்ட விதத்தை ஓமந்தூரார் – அண்ணா காலம் பகுதி விவரிக்கிறது. சேலம் உட்பட நான்கு மாவட்டங்களில் ராஜாஜி கொண்டு வந்த மதுவிலக்கைச் சென்னை மாகாணம் முழுவதிலும் கொண்டு வந்ததோடு, அதனால் எழுகின்ற வருவாய் இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கை என்றுகூறி, பள்ளிக்கூடங்களை மூடாமல், சமூக நீதியையும் பாதுகாத்திட்ட ஓமந்தூராரின் சமூகத் தொண்டையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறது இப்பகுதி.

அடுத்தது கருணாநிதி காலம்; தமிழ்நாட்டு மதுவிலக்கு வரலாற்றில் திருப்புமுனை காலகட்டம். 1971ஆம் ஆண்டு ஏன் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்தார் என்பதை அலசும் இப்பாகம், அதற்கு ராஜாஜி, காயிதே மில்லத் காட்டிய எதிர்ப்புகளையும் விவரிக்கிறது. 1971இல் மதுவிலக்கைக் கருணாநிதி தளர்த்தியபோது, அதற்கு வாழ்த்து சொன்ன ஒரே கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்பதும், “திமுகவைச் சேர்ந்தவர்களோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ சாராய உற்பத்தித் தொழிலில் ஈடுபடமாட்டார்கள்” என அன்று கருணாநிதி கொடுத்த வாக்குறுதியும் இன்றைய தலைமுறை அறியாதது.

இதன்பின்னர், தேர்தல் வரும்போதெல்லாம் அரசியல் கட்சிகள் மதுவிலக்கை அமல்படுத்துவோம், தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்போம் என்ற கவர்ச்சிகரமான கோஷத்துடன் களமிறங்குவதும், ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியைச் சுலபமாக மறந்துவிடுவதுமாகத்தான் தமிழக அரசியல் வரலாறு இருந்து வருகிறது. கருணாநிதிக்குப் பிறகு வந்த எம்.ஜி.ஆர். மது விலக்கைத் தளர்த்தியதுடன் டாஸ்மாக் என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு வந்த கருணாநிதி ஆட்சியில் மலிவு விலை மது அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் மலிவு விலை மது ஒழிக்கப்பட்டது; ஆனால், சில்லறை மதுபான விற்பனையில் அரசு நிறுவனமான டாஸ்மாக் ஈடுபடுத்தப்பட்டது.

கடைசிப் பகுதியான ‘போராட்ட காலம்’ விவரிப்பது சமீப ஆண்டு நிகழ்கள். 1980கள் தொடங்கி நடைபெற்று வரும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள், சசிபெருமளின் மரணம், அது தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் போன்றவற்றைப் பற்றி பேசுகிறது இப்பகுதி.

மதுவிலக்கு விவாகரத்துக்குள் மறைந்திருக்கும் அரசியல் என்ன? உண்மையிலேயே மதுவிலக்கைக் கொண்டுவர முடியாதா? அதற்குள் மறைந்திருக்கும் சிடுக்குகளையும் சிக்கல்களையும் அவிழ்ப்பது எப்படி? மது விலக்கு அமலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? போன்ற அத்தனை கேள்விகளுக்குமான பதில் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. மது விலக்கு பற்றி மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றை தெரிந்துகொள்ளவும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

நூல்: மதுவிலக்கு – அரசியலும் வரலாறும்; ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார்; விலை ரூ. 150; வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், தொலைபேசி: 7200050073; மின்னஞ்சல்: [email protected]

ஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...