’விக்ரம்’ வெற்றி கமலுக்கு புதுத்தெம்பை கொடுத்தது போல், ‘ஜெயிலர்’ ரஜினி க்ளூகோஸ் ஏற்றியது போல் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இதனால் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்திற்கு அதிக எதிர்பார்பு உருவாகி இருக்கிறது.
இந்தப்படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரமாக ரஜினி மும்பையைச் சேர்ந்த டான் ஆக நடித்திருக்கிறார்.
லால் சலாமில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில்தான் இடம்பெறுகிறதாம்.
அதேபோல் க்ளைமாக்ஸில் ரஜினி கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் திரைக்கதை நகர்கிறதாம்.
ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன்பாகவே எடுத்து முடித்துவிட்டார் ஐஸ்வர்யா. இந்த காட்சிகளை ஹைதராபாத், சென்னை என மிக ரகசியமாக ஷூட் செய்திருக்கிறார்கள்.
மொய்தீன் பாய் ரஜினி, இரண்டு இளம் கிரிக்கெட் வீரர்களான விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்திற்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க உதவுகிறார். பிறகு அவர்களுக்கு என்ன நேர்கிறது என கதை அரசியலுடன் பயணிக்குமாம்.
லால் சலாம் ஒரு அரசியல் நெடி கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்கிறார்கள். லஞ்சம், அநீதிக்கு எதிராகப் போராடுகிற ஒரு புரட்சிகரமான தலைவரை சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் லால் சலாம்.
மேலும் இப்படத்தில் இந்திய கிரிக்கெட்டின் ஹீரோவாக கொண்டாடப்பட்ட கபில்தேவ் ரஜினியுடன் தோன்ற இருக்கிறாராம்.
தெலுங்கு சினிமாவை குறிவைக்கும் தமிழ் ஹீரோக்கள்!
விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படம், நேரடி தெலுங்குப் படத்தின் வசூலை விட அதிகம் கல்லா கட்டியது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் டப் செய்யப்பட்ட ‘பிச்சைக்காரன் 2’ படமும் பாக்ஸ் ஆபீஸில் கலக்கியது.
இதனால் தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து இப்போது தமிழ் கமர்ஷியல் ஹீரோக்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
விஜயின் ‘லியோ’வுக்கு தெலுங்கு சினிமாவில் எதிர்பார்பு இருக்கிறது. காரணம் லோகேஷ் கனகராஜின் கைதி, விக்ரம் என இரண்டுப் படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் ‘லியோ’ தெலுங்கு டப் உரிமை 22 கோடிகளுக்கு போயிருக்கிறது. தெலுங்கில் விஜய் படத்திற்கு கிடைத்த அதிகப்பட்ச விலை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவை தாங்கள் தத்தெடுத்த நட்சத்திரமாகவே தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதனால் ‘கங்குவா’விற்கு பெரிய எதிர்பார்பு நிலவுகிறது. இதனால் இதன் தெலுங்கு உரிமை சுமார் 30 கோடி வரை பெரிதாகும் என்கிறார்கள்.
அடுத்தடுத்து சுமாரான படங்களைக் கொடுத்த ரஜினியின் ஜெயிலர் படத்தின் தெலுங்கு உரிமையைக் குறைந்த விலைக்கு கேட்டனர். ஆனாலும் 15 கோடிக்கு விலைப்போனது. இதை வாங்கியவர்களுக்கு இப்போது நல்ல லாபம்.