ராக்கெட் ஏவுதளம் என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர் ஸ்ரீஹரிகோட்டா. இப்போது அந்த இடத்தை பிடிக்க இருக்கிறது குலசை எனப்படும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டிணம். குலசையில் 2376 ஏக்கர் பரப்பளப்பில் மிகப் பிரமாண்டமாக அமைய இருக்கும் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்துக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி அரசு நலத்திட்ட பணிகள், பா.ஜ.க. பொதுக்கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று (27-02-2024) தமிழ்நாட்டிற்கு வந்தார். பல்லடத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை முடித்த பிரதமர் மோடி, நேரடியாக ஹெலிகாப்டர் மூலமாக மதுரை சென்றார். அங்கு மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து இன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி இன்று குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
ஏன் இந்தியாவுக்கு இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்?
இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ (ISRO) உலகளவில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று. அதுவும் கடந்த சில வருடங்களில், அமெரிக்கா உட்பட பல முன்னேறிய நாடுகளே ஆச்சரியத்துடன் பார்க்கும் தனித்துவமான சாதனைகள் பலவற்றை இஸ்ரோ செய்திருக்கிறது. அதில் ஒன்று எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) ராக்கெட் தொழில்நுட்பம். இதன்மூலம், பல்வேறு நாடுகளுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான சிறிய சாட்லைட்டுகளை ஒரே விண்கலத்தில் ஏற்றி, விண்வெளியில் மிதக்கவிட்டு வருகிறது, இந்தியா.
இது இப்போது இந்தியாவுக்கு ஒரு பெரிய வியாபார வாய்ப்பாகவும் உருவெடுத்துள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் இஸ்ரோ மூலம் சாட்லைட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது மிகக் குறைந்த செலவாக இருப்பதால் பல நாடுகள் இந்தியாவையே நாடுகின்றன. தினம் தினம் ராக்கெட் ஏவ வேண்டிய நிலை உருவானாலும் ஆச்சரியமில்லை எனும் அளவுக்கு டிமாண்டுகள்.
ஆனால், அத்தனை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஒரு ராக்கெட் ஏவுதளம் இந்தியாவுக்கு போதுமானதாக இல்லை. எனவே, இன்னொரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டிய சூழ்நிலை.
மேலும், சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த ஸ்ரீஹரிகோட்டா சிறந்த ஏவுதளமும் இல்லை. எனவே, இன்னொரு ஏவுதளம் அமைப்பதற்கான இடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தேடி வந்தனர். அவர்கள் கண்ணில் பட்டது குலசேகரப்பட்டிணம். அப்போது, ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டிணம் சிறந்தது என்பதையும் விஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர். (முதலிலேயே இது தெரிந்திருந்தால் இந்தியாவின் முதல் விண்வெளி நிலையம், குலசேகரப்பட்டிணத்தில் அமைந்திருக்கும்)
ஸ்ரீஹரிகோட்டாவில் என்ன பிரச்சினை?
ராக்கெட் ஏவுவதில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை?
தீபாவளிக்கு பட்டாசு போடும்போதே ராக்கெட் வைக்க நாம் பல இடங்கள் தேடுவோம். அந்த ராக்கெட் நேரே மேலே செல்லாமல் திசை மாறி பக்கத்தில் எங்காவது விழுந்து தீ விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவனம்தான் காரணம். அத்தனை குட்டி ராக்கெட்டுக்கே இத்தனை கவனம் தேவை என்றால், பிஎஸ்எல்வி போன்ற பெரிய ராக்கெட்டுகளை ஏவ எவ்வளவு கவனம் தேவை?
விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டில் சிக்கல் ஏற்பட்டு திடிரென கீழ் நோக்கி வந்தால்… அந்த ராக்கெட் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துவிடக்கூடாது என்றுதான் பொதுவாக ராக்கெட் ஏவுதளங்கள் கடற்கரைகளில் அமைக்கப்படுகிறது.
சரி, கடற்கரையாக இருந்தாலும் கடலில்தான் விழும் என்பதற்கு என்ன நிச்சயம்? கடலுக்கு எதிர்பக்கமாக திரும்பி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் விழுந்துவிட்டால்…
இதனால்தான், ராக்கெட் ஏவுதளத்தை கடற்கரையில் அமைப்பதுடன், ராக்கெட் கடல் இருக்கும் திசையில் மேலே சென்று செயற்கை கோள்களை நிலை நிறுத்தும் வகையில் அதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்படும். உதாரணமாக, இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் கிழக்கு நோக்கி பறந்து, கடலுக்கு மேலே உயரும். எனவே, விபத்துகள் ஏற்பட்டால், ராக்கெட் மற்றும் அதன் குப்பைகள் கடலில் மட்டுமே விழும், இதனால் பெரிய பேரழிவு தவிர்க்கப்படுகிறது.
இன்னொன்று ராக்கெட் ஏவுதளத்திற்கு ஏற்ற இடம் என்பது நிலநடுக் கோட்டுப் பகுதிதான். ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. எனவேதான், இந்தியாவின் முதன் விண்வெளி நிலையம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டது. இந்த விண்வெளி நிலையம் இரண்டு ஏவுதளங்களுடன் இயங்குகிறது. 1970களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த நிலையத்தில் இருந்து 1993 முதல் ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. முதலில் பிஎஸ்எல்வி, அதன்பின் ஜிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி எம்கே3 ராக்கெட்டுகளையும் இங்கிருந்து இஸ்ரோ ஏவியது.
ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளதால், இங்கிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் பூமியின் மேற்கு-கிழக்கு சுழற்சியின் கூடுதல் வேகத்தால் எளிதாக விண்ணை அடைகின்றன. இதனால் குறைந்த சக்தி கொண்டு ஏவுகணையை இயக்கும் ஆற்றல் கிடைக்கும். குறைந்த பட்ஜெட்டில் ராக்கெட்டுகளை இந்தியா விண்வெளியில் செலுத்த இதுவும் ஒரு முக்கிய காரணம். மற்ற நாடுகளின் ஏவுதளங்கள் விண்வெளிக்கு போகவே அதிக நேரம் எடுக்கும். எரிபொருளும் கூடும்.
ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசையில் என்ன சிறப்பு?
ஸ்ரீஹரிகோட்டா பெரிய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு ஏற்றதாக இருந்தாலும், இஸ்ரோவின் சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்திற்காக பயன்படுத்த இருக்கும் 500 கிலோ சிறிய ராக்கெட்டுகளை ஏவ பெரிய சவாலாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் பூமியைச் சுற்றி வரும் துருவ சுற்றுப்பாதையில் செலுத்தப்படும் போது ஒரு சவாலை எதிர்கொள்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஒரு ராக்கெட் தென் துருவத்தை நோக்கி பயணிக்கும் போது, அந்த ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அந்நிலையில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் அந்த ராக்கெட் அந்த நாட்டுக்குள் விழும். இந்த அபாயத்தை தவிர்ப்பதற்காக, இப்போது ராக்கெட் நேர்கோட்டில் பறக்காமல், வளைந்த பாதையில் சென்று, திரும்பும் வகையில் ஏவப்படுகிறது. இதனால், கூடுதல் எரிபொருள் செலவு.
மேலும், எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய ராக்கெட்டுகள் அதிக எரிபொருளை இழக்க நேரிடும்போது, விண்கலத்தை சுமந்து செல்லும் அதன் திறன் குறையும். எனவேதான், இந்தியாவில் இருந்து சிறிய ராக்கெட்டுகளை ஒரே நேர்கோட்டில் ஏவக்கூடிய ஒரு மாற்று இடத்தை இஸ்ரோ தேடிக் கொண்டிருந்தது.
தமிழ்நாட்டின் தென் பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டிணம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆம், ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் இருக்கிறது.
இந்த நெருக்கத்தால் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் சுற்றுப் பாதையின் தொலைவு குறையும். இதனால், எரிபொருள் செலவும் குறையும்.
மேலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளின் மீது பறந்துவிடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், கிழக்கு நோக்கித் திருப்பப்படுவது போல் குலசையில் இருந்து ஏவும்போது திருப்பிவிட வேண்டிய அவசியமில்லை. இங்கிருந்து தெற்கு, கிழக்குத் திசையில் எந்த நாடுகளும் ஊரும் இல்லை.
எனவே, குலசையில் இருந்து ஏவப்படும் போது, SSLV போன்ற சிறிய ராக்கெட்டுகளும் இந்திய ஸ்டார்ட்-அப்களால் உருவாக்கப்படும் ராக்கெட்டுகளும் எரிபொருளைச் சேமித்து துருவத்தை நோக்கி நேராகப் பறக்க முடியும்.
விண்வெளி நிலையம் அமைக்க ஸ்ரீஹரிகோட்டாவைவிட இன்னொரு வகையிலும் குலசேகரப்பட்டிணம் சிறந்ததாக உள்ளது. அது…
ராக்கெட்டுகளை ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவினாலும், அந்த ராக்கெட்டின் உதிரி பாகங்கள், தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகேயுள்ள மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்தில்தான் ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் இங்கிருந்து சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல, கிரையோசெனிக் இஞ்ஜினின் எரிப்பொருளான திரவ ஹைட்ரஜனும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுதான் எடுத்துச் செல்லப்படுகிறது. குலசேகரப்பட்டினத்திலிருந்து 40 கி.மீ தொலைவில்தான் காவல்கிணறு உள்ளதால் போக்குவரத்துச் செலவும் நேரமும் குறையும்.
இந்த காரணங்களால்தான் இப்போது குலசேகரப்பட்டிணம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
குலசையில் விண்வெளி நிலையமும் ராக்கெட் உதிரிபாகத் தொழிற்சாலையும் அமைப்பதற்காக, மொத்தமாக 2376 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசால் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
விண்வெளி நிலையத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன லாபம்?
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால் நிச்சயம் இப்பகுதி வணிக ரீதியாக முன்னேறும். குறிப்பாக, இந்த ஏவுதளம் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்கின்றனர். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டே புதிய விண்வெளி கொள்கையை தீட்டி அதற்கான செல்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன், பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
மேலும், குலசேகரபட்டிணம் அருகில் உள்ள தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டுக்கு குலசை விண்வெளி நிலையம் அடுத்த மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.