கொடைக்கானல் பகுதியில் மலைப்பள்ளத்தாக்குகளுக்கு இடையே இருக்கும் கிராமம் வெள்ளக்கெவி. இந்த கிராமத்தை பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் குளிர் பிரதேசத்தை உருவாக்கும் நோக்கத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதிருந்து அங்கு பழங்குடிமக்கள் பலரும் வாழ்ந்து வருகிறார்கள். அன்றைய காலம் தொட்டு இன்று வரைக்கும் அங்கு வாழும் மக்களுக்கு பல அடிப்படை வசதி இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
குறிப்பாக மக்களின் மருத்துவ அவசரத்துக்கு எந்த ஒரு வசதியும் இல்லாத சூழலில், பல நேரங்களில் சிகிச்சைக் கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுவது தொடர் நிகவாக இருந்து வருகிறது. அப்படிபட்ட வெள்ளகெவி கிராமத்திற்கு ஓட்டு கேட்க வரும் ஆளும் கட்சிக்காரர், காவல்துறை இருவருக்குமிடையே மோதல் உருவாகிறது. அதில் நாயகனை பழி தீர்க்க காத்துக்கொண்டிருக்கிறார் காவல் அதிகாரி. இந்த நிலையில் நாயகனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அவரை மலைக்கீழ் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போது பல இன்னல்கள் குறுக்கிடுகின்றன. என்ன நடந்தது என்பதை திகிலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தமிழ் தயாளன்.
வெள்ளக்கெவி கிராமமும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் மிகவும் உருக்கமாக, உண்மைத்தனமோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். நாயகனாக ஆதவன் அப்படியே மலைகிராம மனிதனாக மாறி நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தோடு வாழ அவர் கொடுத்திருக்கும் அர்ப்பணிப்பை காட்சிகளில் பார்க்க முடிகிறது.
அவர் மனைவி மந்தாரை வேடத்தில் ஷீலா ராஜ்குமார் நெஞ்சை கலங்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் வினோதன் ஷீலா இருவர் மட்டுமே தெரிந்த முகங்கள் மற்றபடி படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகங்கள் ஆனால் அவர்களையும் அழகாக நடிக்க வைத்து நம்மை படத்தில் ஒன்ற வைக்கிறது இயக்குனரின் திரைக்கதை.
பயிற்சி மருத்துவராக வரும் ஜாக்குலின் நம் நெஞ்சை கவர்கிறார். நல்ல நடிப்பு. காமன்மேன் கணேஷ் அரசியல்வாதியாக வந்து நிமிர்ந்து நிற்கிறார்.
ஜெகன் ஜெயசூர்யாவின் ஒளிப்பதிவு வேற எநத செயற்கை ஒளியையும் நம்பாமல் அந்த மலைக்காட்டில் படம் பிடித்து நம்பகத்தன்மையைத் தருகிறது.
பாலசுப்ரமணியன், ராஜா ரவிவர்மாவின் இசையில் வைரமுத்து, யுகபாரதி, வினையனின் பாடல்கள் கருத்துடன் ஒலிக்கின்றன. அன்றாடம் போகுதய்யா அஞ்சாறு சவப்பெட்டி.. அஞ்சாண்டுக்கு ஒரு முறை வருதய்யா வாக்கு பெட்டி என்ற வரிகள் வலி நிறைந்திருக்கிறது. படத்தில் சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் படத்தின் நோக்கத்தினால் அது தெரியவில்லை.
திரைப்படங்கள் என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்லா, இன்னும் விடியாமல் இருக்கும் பொழுதுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொல்வதற்காகவும் பயன்படுத்தலாம் என்பதை இயக்குனர் தமிழ் தயாளன் நிரூபித்திருக்கிறார்.