No menu items!

காஷ்மீர் டைகர்ஸ் – இந்தியாவின் புதிய எதிரி

காஷ்மீர் டைகர்ஸ் – இந்தியாவின் புதிய எதிரி

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சமீபத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் டைகர்ஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காஷ்மீரின் டோடா மாவட்டத்தில்  உள்ள தாரி கோடே என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கடந்த திங்கள்கிழமையன்று  ராணுவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ராணுவத்தின் ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் ஜம்மு காஷ்மீரின் காவல்துறையின் சிறப்பு அதிரடிக் குழுவினர் இணைந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 4 பாதுகாப்பு படை வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 தீவிரவாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்,  வனப்பகுதிக்குள் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தின் 16-வது கார்ப்ஸ் பிரிவின் ஒயிட் நைட்ஸ் படைப்பிரிவு எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது ஜம்முவில் 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு காஷ்மீர் டைகர்ஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

யார் இந்த காஷ்மீர் டைகர்ஸ்?

காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்தைக் கொடுக்கும் 37-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பிறகு, அம்மாநிலத்தில்  தொடங்கப்பட்ட தீவிரவாதம் இயக்கம்தான் காஷ்மீர் டைகர்ஸ்.

மசூத் அசாரின் ஜெய்ஷ் இ மொகம்மத் அமைப்பின் கிளையாக செயல்படும் ஒரு நிழல் அமைப்புதான் காஷ்மீர் டைகர்ஸ். பொதுவாக பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் பெயர் இஸ்லாம் மதத்துடன் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. அந்த அமைப்பின் பெயரில் மதத்துக்கான எந்த அடிப்படைக் குறியீடும் இல்லை. இதன்மூலம் மதச்சார்பற்ற இயக்கமாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்பாகவும் தங்களை காட்டிக்கொள்ள இந்த அமைப்பு முயல்வது தெரிகிறது.

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அரசின் மீது சிலருக்கு எழுந்த வெறுப்பை பயனபடுத்திக்கொள்ளும் வகையில் காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த அமைப்பு முதல் முறையாக  தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட்து. ஸ்ரீநகரில் அந்த தாக்குதலில் 2 போலீஸார் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இதன்பிறகு அடுத்தடுத்து பல தாக்குதல்களை நடத்தி வருகிறது.

கடந்த 32 மாதங்களில் நடந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 48 ராணுவ வீர்ர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெருவாரியான தாக்குதல்களை காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை தாக்குதல்களை நடத்திய இந்த அமைப்பின் தலைவர் யார் என்ற தகவல் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கி, உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. அம்மாநில தலைவர்கள் இதற்காக சட்ட போராட்டங்களையும், மக்கள் போராட்டங்களையும் நட்த்தி வருகிறார்கள். உச்ச நீதிமன்றமும், ‘2024 செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது.  அப்படி தேர்தல் நடந்து காஷ்மீரில் மீண்டும் அமைதி திரும்பிவிடக்கூடாது என்பதற்காக தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பை அழித்து அங்கு ஜனநயாகத்தை மீண்டும் மலரச் செய்யும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.

பல தீவிரவாத அமைப்புகளை வெற்றிகரமாக அடக்கிய இந்திய ராணுவம், காஷ்மீர் டைகர்ஸ் அமைப்பை எப்படி வெற்றிகொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...