No menu items!

தோழிக்கு மெசேஜ், கொலை செய்த பிரபல நடிகர்!

தோழிக்கு மெசேஜ், கொலை செய்த பிரபல நடிகர்!

தனது ரசிகரை கடத்தி வந்து, சித்ரவதை செய்து, கொடூரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனை கர்நாடக காவல்துறை கைதுசெய்துள்ளது. அந்த ரசிகர் தனது தோழிக்கு மிக மோசமான செய்திகளை அனுப்பியதால் கோபமாகி தர்ஷன் இதை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தர்ஷனை மிருகமாக மாற்றும் அளவு அந்த ரசிகர் செய்தது என்ன?

கன்னடத் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தர்ஷன். தமிழில் 2000ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான ‘வல்லரசு’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இவரது நடிப்பில் 2001ஆம் ஆண்டு பி.என். சத்யாவின் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான ‘மெஜெஸ்டிக்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இவர் நடித்து வெளியான சில படங்கள் வெற்றிப் படங்களாக அமையவே, கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் தர்ஷன். சேலஞ்சிங் ஸ்டார் என்று ரசிகர்கள் இவரை சொல்கிறார்கள்.

தர்ஷனுக்கு 2003ஆம் ஆண்டில் அவரது உறவினரான விஜயலக்ஷ்மியுடன் திருமணமானது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், இவர்கள் குடும்ப வாழ்க்கை சுமூகமாக இல்லை.

2011 செப்டம்பரில் விஜயலக்ஷ்மி, தன்னைத் தன் கணவர் தர்ஷன் அடித்துத் துன்புறுத்துவதாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கைதுசெய்யப்பட்ட தர்ஷன் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியில் பேசித் தீர்க்கப்பட்டது.

2016இல் தர்ஷனின் நடவடிக்கை குறித்து மீண்டும் விஜயலஷ்மி காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், பவித்ரா கௌட என்ற நடிகையுடன் தர்ஷன் பழகி வந்திருக்கிறார். இதற்கு விஜயலக்ஷ்மி பொதுவெளியிலேயே எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், தான் தன் கணவர் தர்ஷனுடனும் மகனுடனும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜயலக்ஷ்மி, ‘This is Us, With our one and only’ எனக் கூறியிருந்தார். இதற்கு சில மணி நேரங்களிலேயே தான் தர்ஷனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பவித்ரா, ‘One Decade Down, Forever to go’ என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பவித்ரா கவுடா, அவரது கணவர் சஞ்சய் சிங், மகள் குஷி கவுடா ஆகியோர் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி, பவித்ராவைக் கடுமையாகச் சாடியதுடன், இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் நடந்த தினத்தன்று, தர்ஷன் நடித்த Kaatera படத்தின் வெற்றிவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த செய்தியாளர் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சாமி (வயது 33) என்பவர், தான் விரும்பும் நடிகரின் மனைவி இப்படி துன்பப்படுவதைத் தாங்க முடியாமல் பவித்ரா கவுடாவின் சமூக வலைதளக் கணக்குகளுக்கு ஆபாசமாகத் திட்டி செய்திகளை அனுப்பியுள்ளார். இதனால், கோபமான தர்ஷனும் பவித்ரா கவுடாவும் ரேணுகா சாமியை கடத்தி, சித்ரவதை செய்து, கொலை செய்துள்ளனர்.

சித்ரதுர்கா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரேணுகா சாமி. இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், ஜூன் 9ஆம் தேதி முதல் ரேணுகா சாமியை காணவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தேடுதலில் ஏகப்பட்ட காயங்களுடன் ஒரு சாக்கடையில் இருந்து காமாக்ஷிபாளயம் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்தான் தற்போது தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறார். பவித்ரா கவுடாவும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ரேணுகா சாமி சித்ரதுர்காவில் கடத்தப்பட்டு பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகவும், இதில் தர்ஷனுக்கு தொடர்பிருப்பதாகவும் கர்நாடக காவல்துறை கூறுகிறது.

இது தொடர்பாக பெங்களூர் காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜூன் 9ஆம் தேதி நள்ளிரவில் தர்ஷனுக்குச் சொந்தமானதாகச் சொல்லப்படும் ஸ்கார்பியோ கார் ஒன்று, ரேணுகா சாமியின் உடல் கிடைத்த இடத்திற்குச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடத்திவரப்பட்ட ரேணுகா சாமி, கட்டையால் அடித்தே கொல்லப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் எட்டுப் பேர் ரேணுகா சாமி கொல்லப்பட்ட இடத்தில் தர்ஷன் இருந்ததை உறுதி செய்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது தோழியை மிக மோசமாகத் திட்டி சமூக வலைதளங்கள் மூலம் செய்தி அனுப்பியதால், கோபமான தர்ஷன், தன்னுடைய ரசிகர் என்று தெரிந்தும், ரேணுகா சாமியை கடத்திவந்து, சித்ரவதைசெய்து, கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மைசூரில் தங்கியிருந்த தர்ஷன் கைதுசெய்யப்பட்டு பெங்களூருக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, கூடுதல் விசாரணைக்காக அவரை ஆறு நாட்கள் காவல்துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

கொலைசெய்யப்பட்ட ரேணுகா சாமி, அவருடைய பெற்றோருக்கு ஒரே மகன். அவருக்கு சமீபத்தில்தான் திருமணமான நிலையில், அவருடைய மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து தர்ஷனின் பெங்களூர் ஆர்.ஆர். நகர் வீட்டிற்கு பலத்த போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...