விஜய், ஜெனிலியா, வடிவேலு நடித்த சச்சின் படம், 20 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகி, வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்து அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சூர்யா நடித்த காக்ககாக்க, ரஜினியின் கபாலி மற்றும் கிழக்கு சீமை ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்வதாக கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார்
சென்னனையில் நேற்று நடந்த சச்சின் ரீ ரிலீஸ் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் மற்றும் டான்ஸ்மாஸ்டர் ஷோபி ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் தாணு பேசுகையில் ‘‘அந்த காலத்தில் வரிசையாக ஆக் ஷன் படங்களில் விஜய் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஜான் மகேந்திரன் சொன்ன கதை பிடித்து போனதால் அவரை விஜயிடம் அனுப்பினேன். அவருக்கு கதை பிடிக்க சச்சின் உருவானது. அந்த சமயத்தில் வந்த லாபத்தில் ஒரு பகுதியை விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கொடுக்க சென்றேன். அவர் வாங்க மறுத்துவிட்டார். இப்போது புத்தம் புது பொலிவுடன் சச்சின் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. புதுப்படங்கள் பாணியில் டிரைலர் கட், லிரிக்கல் வீடியோ வெளியிட்டோம். தமிழகம் மட்டுமல்ல, ஐரோப்பா, அரபு நாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடி, முன்பை விட 10 மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது. இப்போதும் 350க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடுகிறது. பாடல்களுக்கு மக்கள், ரசிகர்கள் ஆடுவது மகிழ்ச்சி. அடுத்து ராஜிவ்மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை ரீ ரிலீஸ் பண்ணப்போகிறேன். அதற்கடுத்து கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க, மற்றும் ரஜினியின் கபாலி, எவர்கீரின் வெற்றி படமான கிழக்குசீமையிலே ஆகிய படங்களையும் ரீ ரிலீஸ் செய்யப்போகிறேன். சச்சின் ரீ ரீலீஸ் வெற்றி விழாவில் படக்குழுவை அனைவரையும் அழைத்து பாராட்டப்போகிறேன்’’ என்றார்
விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ‘‘நான் விஜய்சாருக்காக முதலில் இசையமைத்த படம் சச்சின். அதில் இடம் பெற்ற வாடி வாடி, குண்டு மாங்கா தோப்புக்குள்ள, கண்மூடி திறக்கும்போது போன்ற பாடல்கள் இன்றும் ஹிட். நான் எந்த நாட்டில் இசை கச்சேரி நடத்தினாலும் இந்த பாடல்களை பாடுகிறேன். இப்போதும் தியேட்டர்களில் அந்த பாடலுக்கு மக்கள் ஆடுவது மகிழ்ச்சி. அந்த பாடல் உருவானவிதம், ஒளிப்பதிவாளர் ஜீவா என்னை பாட சொன்னது உள்ளிட்ட பல மலரும் நினைவுகள் இப்போது வருகின்றன. இந்த பாடல்களின் வெற்றிக்கு மறைந்த கவிஞர் நா.முத்துகுமாரும் ஒருவர். அவரை நான் இப்போது நினைத்து கண் கலங்குகிறேன். ஒரு பாடலுக்கு எழுத வேண்டும் என்று சொன்னால், என் ஸ்டூடியோ வருவார். ட்யூன் சொல்ல, சொல்ல வரிகளை தருவார். எங்கள் கூட்டணியில் பல பாடல்கள் வெற்றி பெற்றன. அவரையும், ஒளிப்பதிவாளர் ஜீவாவையும் இழந்தது பெரிய வருத்தம். பல ஆண்டுகளாக என்னை ஹீரோ ஆக்க முயற்சிக்கிறார் தாணுசார். ’’ என்றார்