சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் போதே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் குதிக்க போகிறேன் என நடிகர் விஜய் அறிவித்தது பலரது புருவங்களையும் உயர வைத்தது. வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் மாணவர் சந்திப்பு, தேர்தல் ஆணையத்தில் பதிவு, கொடி அறிமுகம் என அரசியலிலும் சினிமாவிலும் தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
இந்நிலையில் பல்வேறு சிக்கல்கள், தடங்கல்களை கடந்து அவரது கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுக்காக சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள இடம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு பார்க்கிங், 85 ஏக்கரில் மாநாட்டு திடல், 100 அடி கொடுக்கம்பம் என ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பூமி பூஜை நடைபெற்ற நிலையில் தற்போது மாநாட்டுப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து இருக்கிறது.
தவெக மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க தனித்தனியாக பல்வேறு நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உணவு, குடிநீர், கழிப்பிடம், மருத்துவம், பாதுகாப்பு, சிசிடிவி என அனைத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 10,000 மேற்பட்ட பணியாளர்களும் தன்னார்வலர்களும் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக சுமார் 25 குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் தனி தனியாக செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார்.
மாநாட்டு ஏற்பாடுகள் இறுதித் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ள விஜயின் கட் அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநாட்டு நுழைவாயில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. மாநாட்டில் நுழைவாயில் பகுதியில் இரண்டு யானைகள் கால்களை உயர்த்தி சொல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதோடு அதற்கு நடுவில் வெற்றி கொள்கை திருவிழா என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக மாநாட்டு காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்டு அவுட்டுகளுக்கு நடுவே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இடம் பெற்று இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது ஒரு புறம் இருக்க தனது அரசியல் பயணத்தை கட் அவுட் வாயிலாகவே விஜய் வெளிப்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.
காமராஜரின் கல்விக்கான முக்கியத்துவம், பெரியாரின் பகுத்தறிவு, அம்பேத்கரின் சமத்துவம் ஆகியவற்றோடு விஜயின் அரசியல் பயணம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாகவே இந்த கட்ட அவுட்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சிகள் தொடங்கப்பட்டாலும் பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம் நிச்சயம் இடம் பெறும். ஆனால், அண்ணாவை விஜய் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.