வடிவேலு, உதயநிதி,ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தின் கதை முன்னாள் சபாநாயகர் தனபாலுடைய கதை என்று சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் முன்னாள் சபாநாயகரும் அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தனபாலிடம் பேசினோம். இயல்பாக இனிமையாக பேசினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா குறித்துப் பேசும்போது உணர்ச்சிவசப்படுகிறார். குரல் தழுதழுக்கிறது. இன்றும் அவர்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறார்.
”நான் சேலம் அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ சரித்திரம் படித்துக் கொண்டிருந்த போது எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்த விலகினார். நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். கல்லூரி நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்னை ராமாவரம் தோட்டத்திற்கு சென்று பார்த்தேன். அது போன்று அடிக்கடி எம்.ஜி.யாரை சென்று பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஒரு கட்டத்தில் புரட்சி தலைவர் என் பெயரைச் சொல்லி அழைக்கும் அளவிற்கு நெருக்கமாகி விட்டேன்.
எனது சொந்த ஊர் சேலத்திற்கு அருகில் உள்ள கருப்பூர். நடுத்தரக் குடும்பம். 1977 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ஆர் என்னை சங்கரி சட்டமன்ற வேட்பாளராக அறிவித்தார். அது அதிமுக சந்தித்த முதல் பொதுத் தேர்தல். முக்கியமான தேர்தல். என்னை வேட்பாளாராக்குவார் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்த ஒரே ரிசர்வ் தொகுதி சங்ககிரி தான். தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமோ பொருளாதார வசதியோ கிடையாது. அதைப் பற்றி கவலைப்படாதே என்றார் புரட்சித் தலைவர். கட்சியினரும் தலைவரும் உதவி செய்தார்கள்.
சங்ககிரி தொகுதியும் மக்களும் எனக்கு ரொம்ப புதிது. ஆனால் எம்.ஜி.ஆரும் இரட்டைஇலையும் இருந்ததால் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். வெற்றி பெற்றதும் தோட்டத்தில் தலைவரை சந்தித்தேன். படு உற்சாகமாய் இருந்தார். என்னை மிகவும் வாழ்த்தினார். அந்த தேர்தலை என்னால் மறக்க முடியாது. எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக முதன் முதலில் பதவி ஏற்கிறார். அவர் உயிருடன் இருக்கும் வரை சங்ககிரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றேன். சங்ககிரியில் மட்டும் தொடர்ந்து நான்கு தடவை தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெ. ஜா என இரண்டு அணிகளாக பிரிந்தன. நான் அம்மாவை ஆதரித்தேன். அப்போது அவருடன் வந்த சட்டமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். புரட்சி தலைவருக்கு அடுத்து என்னுடைய முழு விசுவாசம் புரட்சி தலைவியிடம்தான் இருந்தது.
89 சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தோற்று விட்டேன். மீண்டும் நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனபோது அம்மா தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 2001 சங்ககிரியில் நின்று வெற்றி பெற்றபின் அம்மா என்னை ஆதி திராவிட நலத்துறை அமைச்சர், பிறகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பின்னர் உணவுத்துறை அமைச்சர் என அமைச்சரவையில் தொடர்ந்து இடம் கொடுத்தார்.” என்று தன் வாழ்க்கையைத் சொல்லிக் கொண்டிருந்தவரை நிறுத்தினோம்.
” உங்களை ஜெயலலிதா சென்னைக்கு அழைத்து என்ன ஜெயபால் தொகுதி மக்களுக்கு நீங்கள் சாப்பாடு போடுவதில்லை என்று கேட்டதாகவும் ‘அம்மா நான் இரண்டு முறை போட்ட போது யாரும் சாப்பிடவில்லை. நான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் யாரும் வரவில்லை’ என்று நீங்கள் சொல்லி அழுததாகவும் செய்தி வந்ததே?” என்று கேட்டோம்.
”நீங்கள் கேள்விப்பட்ட செய்தியில் பாதி உண்மை பாதி தவறு. அம்மா என்னை சென்னைக்கு அழைத்து பேசியது உண்மை. ஆனால் யாரும் சாப்பிட வரவில்லை என்பது தவறு”
’நீங்கள் சபாநாயகர் ஆனது எப்படி?”
“அமைச்சர் லிஸ்டில் என் பெயர் இல்லை என்று தெரிந்த போது கொஞ்சம் வருத்தம் இருந்தது. ஆனால் என்னை அம்மா சபாநாயகராக்குவார் என்று கனவிலும் எதிர்ப்பார்க்க வில்லை. எப்படி இந்த எண்ணம் அவர்களுக்கு தோன்றியது என்று தெரியவில்லை.சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் என்னை பார்த்து வணக்கம் செலுத்தியது எனக்கு உறுத்தவில்லை. ஆனால் அம்மாவே தினசரி என்னைப் பார்த்து கை எடுத்து கும்பிடும் போது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த போது அம்மா ஒரு நாள் கூப்பிட்டு, ’தனபால் சட்டமன்றத்தை அருமையாக நடத்தி செல்லுகிறீர்கள்’ என்று என்னை பாராட்டியது இன்று வரை மறக்க முடியாதது.
”தலித் சமூகத்தை சேர்ந்தவரை அனைவரும் வணங்க வேண்டும் என்பதற்காக உங்களை சபாநாயகராக்கினார்கள் என்றும் கூறப்படுகிறதே?”
சற்று யோசித்து ”அது எனக்கு தெரியாது. அம்மா என்ன நினைக்கிறார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.
அதனால் அம்மா அப்படி யோசித்தார்களா என்று தெரியவில்லை”
”மாமன்னன் படம் பார்த்து விட்டீர்களா?”
”பார்க்கவில்லை. புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நடித்த படங்களை பார்த்ததோடு அவ்வளவு தான். அதன் பிறகு எந்த சினிமாவும் பார்த்தில்லை. அந்த படத்தின் கதை குறிப்பாக வடிவேலு கேரக்டர் அவர் சபாநாயகர் ஆன கதை உங்களுடையது என்கிறார்கள். படம் பார்த்தவர்கள் நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள்.
என்னை சபாநாயகராக்கிய பெருமை அம்மாவையே சேரும். அந்தப் படம் அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அந்தப் புகழும் புரட்சித் தலைவிக்கே சேரும்”
“இரண்டு பெரிய தலைவர்களிடம் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஒற்றுமை வேற்றுமை என்ன?