No menu items!

ராகுல் காந்திக்கு சிறை – பறிபோன எம்.பி. பதவி

ராகுல் காந்திக்கு சிறை – பறிபோன எம்.பி. பதவி

“ஒரு விஷயத்தை சொல்லுங்கள்….நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி..எப்படி இவர்கள் எல்லோருக்கும் மோடி என்ற பொதுப் பெயர் இருக்கிறது… எப்படி எல்லா திருடர்களும் மோடி என்ற பொதுப் பெயரை வத்திருக்கிறார்கள்?” (“But tell me one thing…Nirav Modi, Lalit Modi, Narendra Modi…how come they all have Modi as common name. How come all the thieves have Modi as the common name?”) – 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி பேசியது இது.

இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. ராகுல் காந்தியின் தரப்பில் ஜாமீன் கேட்கப்பட்டது நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியிருக்கிறது.

சிக்கல் இங்கு முடியவில்லை.

நமது சட்டத்தின்படி நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டப் பேரவை உறுப்பினரோ குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ தண்டனைப் பெற்றால் அவரது உறுப்பினர் பதவி பறி போகும். அது மட்டுமில்லாமல் அவர் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது.

இதன் அடிப்படையில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி இப்போது பறிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை ராகுல் காந்தியின் மேல் முறையீடு உயர் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ எம்.பி. பதவி ரத்து என்பது திரும்பப் பெறப்படும்.

அரசியல் ரீதியாக இது காங்கிரசுக்கும் ராகுல் காந்திக்கும் ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து பேச அனுமதிக்கப்படாத நிலையில் எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமில்லாமல் லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய கருத்துக்களுக்கு விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம். அடுத்த வருடம் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதற்குள் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் ரத்தாகவிடில் அவரால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது.

இது அரசியல் சதி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.

கர்நாடாகவில் ராகுல் காந்தி பேசியதற்கு குஜராத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. வழக்கு நடந்து முடிந்து தீர்ப்பு வெளியாகும் நிலையில் தீர்ப்புக்கு தடை வாங்கப்பட்டு நீதிபதி மாற்றப்படுகிறார். புதிய நீதிபதி நியமிக்கப்படுகிறார். இப்போது இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. அரசியல் சதி இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார் அவர்.

2019 நாடளுமன்றத் தேர்தலில் கேரளாவில் வயநாடு தொகுதியிலிருந்து வெற்றிப் பெற்றார் ராகுல் காந்தி. இப்போது அவருடைய தேர்தல் அரசியல் கேள்விக் குறியாகியிருக்கிறது.

ராகுலைதான் பிரதமர் வேட்பாளாராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. ராகுல் தேர்தலில் நிற்க முடியாமல் போனால் காங்கிரசுக்கு பலம் குறையும் என்பது ஒரு பார்வை.

இது போன்று ராகுல் காந்தியைத் தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருப்பது அவருடைய பலத்தைதான் கூட்டும் என்பது இன்னொரு பார்வை.

இந்த உடனடி தகுதி நீக்க சட்டம் வருவதற்கு காரணம் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.

2013 செப்டம்பர் மாதம் லல்லு பிரசாத் யாதவ் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு வர இருந்தது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு சில நாட்கள் முன் ஒரு சட்டத் திருத்தத்தை இந்தக் கூட்டணி கொண்டு வந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் உடனடி தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்பதுதான் அந்த சட்டத் திருத்தம்.

அந்த சட்டத் திருத்தத்தை கிழித்தெறிய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி சட்டத் திருத்ததை தீவிரமாக எதிர்த்தார். அவரது எதிர்ப்பால் அந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவில்லை.

ஒரு வேளை அந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டிருந்தால் இன்று ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...