No menu items!

இஸ்ரேல் – ஈரான் போர்! –  இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இஸ்ரேல் – ஈரான் போர்! –  இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தங்கள் நாட்டின்  மீது ஈரான் ஏவுகணை வீசியதற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது இஸ்ரேல். அப்படி இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டுக்கு அமெரிக்காவும், ஈரானுக்கு சில வளைகுடா நாடுகளும் ஆதரவளிக்கும் என்று சொல்லப்படுகிறது. மொத்தத்தில் வளைகுடா நாடுகளை போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று பார்ப்போம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் ஏற்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள இந்த சூழலிலேயே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் எண்ணெய் விலைக்கு   கச்சா எண்ணெய் அளவுகோலாக உள்ளது. இப்போது அதன் விலை 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ஒரு பேரல் 74.40 டாலர்களாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின்போது இது 5 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை மேலும் உயர்ந்தால், கடந்த சில மாதங்களாக அதிகரிக்கப்படாமல் இருந்து வரும் பெட்ரோல் டீசலின் விலை அதிகரிக்கும்.  இது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

யாருக்கு ஆதரவு?

இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் நட்பு நாடாக இருந்து வருகிறது. இரு நாடுகளுடனும் இந்தியா நல்லுறவைப் பேணி வருகிறது. இந்தியாவுக்கு அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக ஈரான் இருக்கிறது. ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி சமீபத்தில் விமான விபத்தில் உயிரிழந்தபோது இந்தியா ஒரு நாள் துக்கம் அனுஷ்டித்தது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம் இந்தியாவுக்கு மிக முக்கியமான துரைமுகமாகும். இந்தத் துறைமுகத்தின் உதவியுடன், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் வர்த்தகம் செய்ய இந்தியா, பாகிஸ்தான் வழியாகச் செல்ல வேண்டியதில்லை. இரு நாடுகளும் 2015-ல் கைகோர்த்து சபாஹரில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி துறைமுகத்தை மேம்படுத்தியது. இப்போது இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர் தொடங்கினால், இரானின் முழுக் கவனமும் இஸ்ரேல் பக்கம் திரும்பும். சபாஹர் போன்ற திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்படும். இதன் விளைவாக அத்திட்டம் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

மறுபுறம் கடந்த 1948-ம் ஆண்டுமுதல் இஸ்ரேல் அரசுடனும் இந்தியா நெருக்கமாக இருந்து வருகிறது. ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் ஒன்றாக இஸ்ரேல் உள்ளது.

இப்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், ஏதாவது ஒரு நாட்டின் பக்கம் நின்றாக வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இஸ்ரேல் பக்கம் நின்றால். அது ஈரானுடனான நல்லுறவை பாதிக்கும். அதேநேரத்தில் ஈரானுடன் சேர்ந்தால் அது இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களை பாதிக்கும். அதனால் ராஜீய ரீதியாக உறுதியாக ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

அன்னியச் செலாவணி

வளைகுடா நாடுகளில் இப்போது லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஈரானில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 10,000 பேரும் இஸ்ரேலில் 20,000 பேரும் வசிக்கின்றனர். அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாங்கள் சம்பாதிக்கும் பெரும் தொகையை இந்தியாவுக்கு அனுப்புகின்றனர். இப்போது வளைகுடா பகுதியில் போர் மூண்டால் அங்கு இந்தியர்கள் இருப்பதில் சிக்கல் ஏற்படும். அவர்கள் அனுப்பும் பணமும் குறையும். இது இந்தியாவின் அன்னிய செலாவணியை கடுமையாக பாதிக்கும்.

வெளியுறவு அமைச்சகம் 17வது மக்களவையில் சமர்ப்பித்த அறிக்கைப்படி, டிசம்பர் 2023 வரை, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா பெற்றுள்ளது.

போர் ஏற்பட்டால், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதும், பின்னர் அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...