ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, பாமா, வடிவேலு நடித்த ‘எல்லாம் அவன் செயல்’படம், 2008ம் ஆண்டு வெளியானது. மலையாளத்தில் வெளியான ‘சிந்தாமணி கொலை கேஸ்’ என்ற படத்தின் ரீமேக் இது. ஆனால், தமிழுக்கு தக்கபடி நிறைய மாற்றங்கள் செய்திருந்தார் இயக்குனர். குறிப்பாக, கோர்ட் காட்சிகளும், வடிவேலு காமெடி காட்சிகளும் படத்துக்கு பலமாக இருந்தன. வண்டுமுருகன் என்ற வக்கீல் கேரக்டரில் வடிவேலு கலக்கியிருந்தார். கடுப்பேத்துறார் மை லார்ட் என்று வடிவேலு பேசும் வசனமும், ஜாமீன் வாங்க தத்தளிக்கும் அவரின் உதவியாளர்கள் பேசுகிற வசனமும், வடிவேலுவின் பாடி லாங்குவேஜூம் இன்றும் பிரபலம். தமிழ்சினிமா காமெடிகளில் வண்டுமுருகன் காமெடி முக்கியமானதாக அமைந்தது.
இந்நிலையில், வண்டுமுருகன் மீண்டும் வருவாரா? நீங்களும் வடிவேலும் இணைந்து நடிக்கிற ஐடியா இருக்கிறதா என்று ஹீரோ ஆர்.கேவிடம் கேட்டபோது அவர் கூறியது
‘‘எல்லாம் அவன் செயல் படத்தை பற்றி, அந்த பட காமெடி பற்றி இன்னும் மக்கள் பேசுகிறார்கள். பின்னர், நானும் வடிவேலும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அதற்காக அவருக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால், சில சூழ்நிலைகளால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. அவருக்கும், இயக்குனருக்கும் சின்ன பிரச்னை. அந்த படம் கடைசி நேரத்தில் தொடங்கவில்லை. அதற்குள் வடிவேலு காமெடி டிராக்கை விட்டு, கதை நாயகனாக நடிக்கப்போய்விட்டார். அந்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. இப்போது அவர் மீண்டும் காமெடியனாக நடிப்பதால், மீண்டும் வண்டுமுருகன் வரலாம் அல்லது எங்கள் கூட்டணியில் வேறு படம் வர வாய்ப்பு இருக்கிறது. அவர் நடிக்க வந்தால், மீண்டும் அடுத்த படத்தில் இணையலாம். அந்த அட்வான்சை பயன்படுத்திக்கொள்வேன்.
மேலும் அவர் கூறுகையில் ‘‘ விஜய் உட்பட யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்க வேண்டும். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.அதை வரவேற்க வேண்டும். எனக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் டான்ஸ்ரீடத்தோ என்ற விருது கிடைத்துள்ளது. நான் பல பிஸினஸ் செய்தாலும், சினிமாவிலும் இருக்கிறேன். சென்னையில் ஏவி.எம் ஸ்டூடியோ அருகே பெரிய ஸ்டூடியோ கட்டியுள்ளேன். ஒரு காலத்தில் காரைக்குடியில் இருந்து சினிமா ஆசையில் சென்னை வந்தேன். அப்போது கோடம்பாக்கம், வடபழனியில் ஏகப்பட்ட ஸ்டூடியோக்கள் இருந்தன. இப்போது அவை காணாமல் போய் அங்கே அபார்ட்மென்ட் வந்துவிட்டன. இப்போது இந்த இடங்களில் சின்ன அப்பார்ட்மென்ட்டில் போஸ்ட் புரடக் ஷன் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், நான் பெரிய ஸ்டூடியோ கட்டியுள்ளேன். இரண்டு நாய்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை எடுத்து வருகிறேன். பணக்காரவீட்டில் வரும் பெண் நாய், ரோட்டில் சுற்றும் ஆண் நாய் இடையேயான காதல், மனிதர்களின் ஈகோ என அந்த கதை நகரும், ஆர் கண்ணன் இயக்குகிறார். ஆவண கொலை அனிமல்ஐ கூட விடவில்லை என்பது படத்தின் கரு.