அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம், நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 2 ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியாகும் அஜித் படம் என்பதால் படத்துக்கு நல்ல ஓபனிங் இருந்தது. தமிழகம் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றனர். ஆனால், முதல் காட்சி முடிந்த பின் படத்தின் நிலை மாறிவிட்டது.
இது அஜித் படம் மாதிரி இல்லை. கமர்ஷியல் விஷயங்கள் இல்லை. அஜித்துக்கு நல்ல ஓபனிங் இல்லை. பாடல், சண்டைக்காட்சிகள் சரியில்லை என ஏகப்பட்ட ‘இல்லைகள்’ சமூக வலைதளங்களில் வெளியாக, படத்துக்கு தொய்வு ஏற்பட்டது. நேற்று படத்தின் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த நிலையில், இன்று பரவலாக டிக்கெட் கிடைக்கிறது. அதேசமயம், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் டிக்கெட் டிமான்ட் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு பெரிய ஸ்டார் படங்கள் வெளியாகும் போது முதல் நாள் வசூல் எவ்வளவு என்று கேள்வி தவறாமல் எழுப்பப்படும். விடாமுயற்சி வசூல் குறித்து பலரும் பல்வேறு தகவல்களை சொன்னார்கள். லைகா தரப்பில் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்படவில்லை. இதனால், வசூல் எவ்வளவு என்ற குழப்ப நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னையில் நடந்த ‘2 கே லவ்ஸ்டோரி’ படவிழாவில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், விடாமுயற்சி படம் முதல்நாளில் 25 கோடி வசூலித்துவிட்டதாக பேசினார். இன்று வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விடாமுயற்சி படம் ரூ 100 கோடி வசூலை எட்டுமா? அல்லது அந்த தொகையை வசூலிக்க அதிக நாள் எடுத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளன. தமிழ்சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக இருக்கிற அஜித் படத்தின் வசூல் குறைவது, திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களில் மதகஜராஜா வசூல் 60 கோடியை தாண்டியுள்ளது. குடும்பஸ்தன் படமும் நல்ல லாபத்தை கொடுத்துள்ள நிலையில் விடாமுயற்சி படத்தின் வசூல் அஜித்தின் மார்க்கெட்டை தள்ளாட செய்துள்ளது.
இதற்கு முன்பு வெளியான அஜித்தின் துணிவு படம் 250 கோடி வசூலித்த நிலையில், விடாமுயற்சி அந்த எண்ணிக்கையை தொடாது என்று தெரிகிறது. அஜித்தின் போட்டியாளரான விஜய் நடித்த கோட் படம், 450 கோடி வசூலை ஈட்டியது. கடந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் படம், 350 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்தது. இந்த கணக்கு வழக்கு நிலவரம், அஜித்தை, அவர் தரப்பை கவலை கொள்ள செய்துள்ளது.