லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.கமல்ஹாசன் மகள் ரஜினி படத்தில் நடிப்பது முக்கியத்துவமாக பேசப்படுகிறது. இந்த படத்தில் அவரை நடிக்க வைக்க முயற்சித்தது யார்? ரஜினியா? கமலா? என்று கேட்டால், அது இயக்குனர் சாய்ஸ் என்கிறார்கள்.
கடந்த ஆண்டு லோகேசுடன் இணைந்து ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன். அப்போது ஏற்பட்ட நட்பு கூலி படத்தில், அவரை நடிக்க வைத்துள்ளது. கதைப்படி, ரஜினிக்கு மகளாக வருகிறார் என்று ஒரு தரப்பும், கேங்ஸ்டர் ஆக வருகிறார் என இன்னொரு தரப்பும் சொல்கிறது. தனது தோழிக்கு முக்கியமான கேரக்டரைதான் லோகேஷ் கொடுப்பார். அடுத்து அவர் கமலை வைத்து இயக்க உள்ள விக்ரம்2வில் கூட ஸ்ருதிஹாசன் நடிக்க வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் வெற்றியில்லை. தமிழில் அவர் நடித்த, புலி, பூஜை, சிங்கம்3, லாபம் போன்ற படங்கள் பெரிதாக போகவில்லை. தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்தாலும் தமிழில் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்பது ஸ்ருதிஹாசன் ஆசையாக இருக்கிறது. மும்பையில் வசிக்கும் ஸ்ருதிஹாசன் தமிழில் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார். அதற்காகவே ரஜினியின் கூலியில் நடிக்கிறார் என தகவல். இப்போது தாய்லாந்து பாங்காக்கில் கூலி படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது அங்கே இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.சில தினங்களுக்கு முன்பு அந்த சிட்டியை வலம் வந்தவர், அங்கே நடக்கும் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திடீரென மேடையேறி பாடியிருக்கிறார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.