ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட்பேட்அக்லி கடந்த வாரம் வெளியாகி, இன்னமும் ஓடிக்கொண்டு இருக்கிறது. சென்னை நட்சத்திர ஓட்டலில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா நடத்திவிட்டார்கள். சரி, உண்மையில் இந்த படம் வெற்றி படமா? தோல்வி படமா? தப்பித்துவிட்டதா? என விசாரித்தோம்
‘‘கடந்த சில ஆண்டுகளாக அஜித்துக்கு நேரம் சரியில்லை. விஸ்வாசம் படத்துக்குபின் அவர் பெரிய வெற்றி கொடுக்கவில்லை. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, விடாமுயற்சி படங்கள் வெற்றி பட வரிசையில் சேரவில்லை.எனவே, குட்பேட் அக்லி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மார்க்ஆண்டனி என்ற வெற்றி படத்துக்குபின் ஆதிக் இயக்கும் படம் என்பதால், இன்னும் எதிர்பார்ப்பு வந்தது. அதற்கேற்ப, படத்தின் டீசர், டிரைலர் நன்றாக இருந்தது
பெரிய போட்டி இல்லாமல், கடும் எதிர்ப்புகள் இல்லாமல், கடந்த வாரம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான தியேட்டரில் குட்பேட் அக்லி வெளியானது. படத்துக்கு நல்ல ஓபனிங். அதனால், சிலநாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை அள்ளிவிட்டதாக, வினியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் அறிவித்தார். படக்குழுவும் வெற்றி விழாவை நடத்தினர். ஆனாலும் இந்த படம் வெற்றி படமா என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது.
தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர் என 3 தரப்புக்கும் லாபத்தை கொடுத்தால்தான், அது வெற்றி படம், பெரிய லாபத்தை கொடுத்தால் பிளாக்பஸ்டர். குட்பேட்அக்லியை பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு ஆரம்பத்தில் லாபம் இல்லை. அஜித்தின் அதிக சம்பளம், சரியான வியாபாரம் இல்லாத நிலையில், படத்தை பல கோடி நஷ்டத்தில் வெளியிட்டதாக தகவல். அதை தயாரிப்பாளர்களான மை த்ரி நிறுவனம் மறுக்கவில்லை. அதே போல் தமிழகத்தில் படத்தை பெரிய தொகைக்கு வாங்கவெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இதுவரை லாபம் கிடைக்கவில்லை. நஷ்டமே என தகவல். தமிழக தவிர மற்ற மாநிலங்களில் படம் வெளியானது. அங்கே தோல்வியை தழுவியது. வெளிநாடு நிலவரம் சரி வர தெரியவில்லை. ஆகவே, கூட்டிக்கழித்து பார்த்தால் குட்பேட் அக்லி வெற்றி படம் அல்ல
சென்னையில் நடந்த நன்றி அறிவிப்பு விழா நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் மட்டுமே தயாரிப்பாளர் பேசினார். படத்தின் வசூல், வெற்றி குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் பேசியவர்கள் அஜித்தை புகழ்ந்தார்கள். படத்தின் வெற்றி குறித்து, லாபம் எவ்வளவு, இதுவரை வசூலித்த தொகை இவ்வளவு என தெளிவாக பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த நிகழ்ச்சிக்கு ஹீரோயினாக நடித்த திரிஷா, கவுரவ வேடத்தில் நடித்த சிம்ரன் உட்பட பலர் கலந்துகொள்ளவே இல்லை. இன்றுவரை தமிழகத்தில் குட்பேட் அக்லி 120 கோடி வசூலித்து இருக்கலாம். சில நாட்களாக வசூல் ரொம்பவே குறைந்துவிட்டது. இனி பிக்அப் ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.ஆக, கூட்டி கழித்து பார்த்தால் இந்த படம் அஜித்தின் வெற்றி பட வரிசையில் சேர வாய்ப்பில்லை.