நீங்கள் சென்னையில் வசிப்பவரா?… அதிலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் வசிப்பவரா?…. அப்படியென்றால் சென்னை பெருநகரத்தின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் செயல்திட்டம் குறித்த அறிக்கையை அவசியம் படிக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் வரும் 2027-ம் ஆண்டுக்குள் சென்னையில் கடற்கரைப் பகுதிகளில் 100 மீட்டர் தூரம் வரையிலான நிலப்பரப்பு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சிகரமான செய்தியை இந்த அறிக்கை சொல்கிறது.
காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி ஒரு பக்கம் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் கோடைக்காலத்தில் அதிக அளவிலான வெயில் அடிப்பதற்கும், மழைக்காலத்தில் மழையின் அளவு அதிகரித்து வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதற்கும் இந்த கால்நிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது.
இந்த சூழலில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது பற்றிய செயல்திட்ட அறிக்கையை சென்னை பெருநகர மாகராட்சி தயாரித்துள்ளது. சி40 அமைப்பு மற்றும் நகர்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை நடத்தி இந்த அறிக்கையை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்:
அடுத்த 5 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 7 சென்டிமீட்டர் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், வரும் 2027-ம் ஆண்டுக்குள் சென்னை கடற்கரை பகுதிகளில் சுமார் 100 மீட்டர் தூரம் வரையிலான நிலப்பரப்பை சென்னை இழக்கும். இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது 2100-ம் ஆண்டுக்குள் சென்னை மாநகராட்சியின் 67 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு கடலில் மூழ்கிவிடும். இது சென்னை மாநகராட்சியின் மொத்த நிலப்பரப்பில் 16 சதவீதமாகும். இப்படி நடந்தால் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழப்பார்கள்.
மழைக்காலங்களில் எதிர்பாராத அளவு மிக அதிக மழை பெய்தால் சென்னையில் உள்ள சுமார் 30 சதவீதம் இடம் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் இருக்கிறது. இதில் 500 குடிசைப் பகுதிகளாவது கடுமையாக பாதிக்கும். 80 குடிசைப்பகுதிகளில் 5அடி வரை தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு உள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 28 பேருந்து நிறுத்தங்களும், 4 புறநகர் ரயில் நிலையங்களும், 18 மெட்ரோ ரயில் நிலையங்களும், 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மழைநீரால் சூழப்பட வாய்ப்புகள் உள்ளன.
காலநிலை மாற்றத்துக்கான முக்கிய காரணியாக கரியமில வாயு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2018-ம் ஆண்டில் 14.38 மில்லியன் டன் கரியமில வாயு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சராசரியாக 1.9 டன் கரியமில வாயு வெளியேற காரணமாக இருந்துள்ளார்கள்.
வறட்சிக் காலங்களில் மெட்ரோ தண்ணீரை மட்டுமே நம்பியிருக்கும் 53 சதவீத குடும்பங்கள் தண்ணீருக்காக பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
இப்படி அதிர்ச்ச்சியான பல விஷயங்களை தகவல்களை வெளியிட்டுள்ள சென்னை பெருநகர மாநகராட்சி, இந்த ஆபத்துகளை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை பொதுமக்களிடமும் கேட்டுள்ளது. இப்போதே நாம் விரைந்து செயல்பட்டால், வரப்போகும் ஆபத்துகளை ஓரளவாவது சமாளிக்கலாம்.