மராட்டிய மாநிலத்தில் இருந்து இயங்கி வரும் தன்னார்வ நிறுவனம், ‘மக்களாட்சிக்கான வாக்கு’ (Vote for Democracy). இந்த அமைப்பு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை கடந்த 22ஆம் தேதி வெளியிட்டது. அதில் வெளியான தகவல்கள் அதிர்ச்சிகரமானவை.
‘Conduct of Lok Sabha Elections 2024’ என்னும் தலைப்பிலான அந்த அறிக்கையில், தேர்தல் முடிந்ததும் அறிவிக்கப்பட்ட வாக்குப் பதிவை விட கூடுதலாக வாக்குகள் பின்னால் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் பாஜக 79 தொகுதிகளில் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அப்படி முறைகேடு நடந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்காக பாஜக இந்த முறைகேட்டைப் பயன்படுத்தியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இது எந்தளவு உண்மை? வாக்குப் பதிவில் முறைகேடு செய்ய முடியுமா?
இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள, விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியும் விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார், “2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அவற்றில் முக்கியமானது வாக்குப் பதிவு சதவீத உயர்வு. அதன் விளைவாக பாஜக 79 இடங்களில் வெற்றி பெற்றது என்ற தகவலை ‘வோட் ஃபார் டெமாக்ரஸி’ அமைப்பு இப்போது அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவு நாளில் இரவு 7 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 62.19% வாக்குப் பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், பின்னர் அது 69.72% என தேர்தல் ஆணையத்தால் மாற்றப்பட்டது. இரண்டுக்கும் இடையே 7.53% வித்தியாசம் இருந்தது. அப்போதே இதுகுறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் கடிதங்களையும் அனுப்பின. ஆனால், தேர்தல் ஆணையம் எந்தவொரு சரியான விளக்கத்தையும் தரவில்லை.
இப்போது ‘வோட் ஃபார் டெமாக்ரஸி’ அறிக்கையின்படி தமிழ்நாட்டில் இறுதி வாக்குப்பதிவில் அதிகரித்துக் காட்டப்பட்ட 7.53% வாக்குகளின் விளைவாக பாஜகவின் வாக்கு சதவீதம் இருமடங்காக அதிகரித்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அந்த 7.53% வாக்குகள் உயர்வு பாஜகவை 8 இடங்களில் 2-வது இடத்தையும், 12 இடங்களில் 3-வது இடத்தையும் பெற வழிவகுத்தது. தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுகிறது என்ற மாயத் தோற்றத்தை இது உருவாக்கியது. அதற்காக வலுவான பிரச்சாரம் பாஜகவினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாஜக 23 இடங்களில் போட்டியிட்டு 48,80,354 வாக்குகளைப் பெற்றது. பாஜக போட்டியிட்ட 23 இடங்களில் 7.53% உயர்வைக் கணக்கிட்டால் 27,64,917 வாக்குகள் வருகிறது. அதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் பாஜகவின் வாக்குகள் 21,15,436 ஆகக் குறையும். அப்படி குறைத்துவிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட அனைத்து 2 மற்றும் 3 ஆவது இடங்களையும் பாஜக இழக்கும்.
உண்மையில் இந்த உயர்வின் பெரும்பகுதி பாஜக போட்டியிட்ட இந்த 23 இடங்களில்தான் நடந்துள்ளது. 20 இடங்களில் பாஜக எந்த வகையிலும் சாத்தியமில்லாத எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றுள்ளது” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2019இல் பாஜக 3.63% வாக்குகளை மட்டுமே பெற்றது என்பதை கவனத்தில் கொண்டால் இந்த வாக்கு சதவீத உயர்வு நம்பக்கூடியதாக இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள செய்திகள் பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் பாலசுப்பிரமணியன் முத்துசாமி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில், “இந்நேரம் மன்மோகன் சிங் பிரதமராக இருந்திருந்தால் அவர் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருப்பார். ஆனால், ஒன்றுமே நிகழவில்லை என்பது போல இந்திய ஊடகங்கள் கடந்து சென்றுவிட்டன. எதிர்க்கட்சிகள் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. அன்னா ஹசாரே என்னும் ஆர்மி ஹவில்தாரை மஹாத்மா காந்தியென புகழ்ந்தெழுதிய தமிழ் அறிவுஜீவிகள் இன்று அரசியல் பேசுவது மஹா பாவம் எனக் காணொளிகள் வெளியிடுகின்றனர். இத்தனைக்கும் இந்த அறிக்கை இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது. இது தொடர்பாக ஜூலை 26ஆம் தேதி ‘த வயர்’ ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
‘Vote For Democary’ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் சாராம்சம் இதுதான். வாக்குப் பதிவு நடந்து முடிந்த அன்று, ஒவ்வொரு வாக்கு இயந்திரமும் இறுதியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை அறிவிக்கும். அது இயந்திரம் என்பதால், எண்ணிக்கை ஒரு பொத்தானை அமுக்கியதும் வெளிவந்து விடும். அது பின்னர் form -17 என்னும் அறிக்கையாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சில வாக்கு மையங்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், வாக்கு எண்ணிக்கைகள் மாறலாம். கடந்த காலங்களில், இந்தப் பிரச்சினை 1%க்கும் குறைவாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்தத் தேர்தலில் கூடுதலாகப் பதிவான வாக்கு சதவீதம் 4.72%.
2024 தேர்தலில் பதிவான வாக்குகளை விட 4.65 கோடி வாக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது 4.72% அதிகமான வாக்குகள்.
பல கட்டங்களாக நடந்த தேர்தல்களில், 3.2% முதல் 6.32% வரை அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் உச்சபட்சமாக ஆந்திராவில் 12.54%, ஒடிஷாவில் 12.48% ஆக உயர்ந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மாநில ஆட்சிகளும் மாறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
15 மாநிலங்களில், 79 பாராளுமன்ற தொகுதிகளில், பா.ஜ.க வென்ற வாக்குகளை விட, தேர்தல் கமிஷன் கூடுதலாகச் சேர்த்த வாக்குகள் அதிகம் என்னும் ஒரு தரவை இந்த நிறுவனம் முன்வைக்கிறது. இந்தக் கூடுதல் வாக்குகள் இந்த 79 தொகுதிகளில் கிடைக்காமல் இருந்திருந்தால், பாஜகவின் எண்ணிக்கை இதே அளவு குறைந்திருக்கலாம்.
கேரளத்தில் சுரேஷ் கோபி 85606 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். கேரளத்தின் எல்லாத் தொகுதிகளிலும் தேர்தல் நாளில் பதிவானதை விட சராசரியாக 85606 வாக்குகள் அதிகம் பதிவானதாக தேர்தல் கமிஷன் சொல்லியிருக்கிறது. இது விசாரித்து உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று. ஒரு வேளை, இந்தக் கூடுதல் வாக்குகள் சேர்க்கப்படாமல் இருந்திருந்தால், பாஜக 240 இடங்கள் பெறாமல், 161 பெற்றிருக்குமோ என்னும் ஐயம் எழுகிறது.
பாஜக 161 பெற்றிருந்தால், எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு இந்த இடங்கள் கிடைத்திருந்தால் கதையே மாறிருக்கும். இப்போதைக்கு vote For democracy நிறுவனம் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் தேவை” எனக் கூறியுள்ளார்.
தேர்தல ஆணையம் பதில் சொல்லுமா?