அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் 24-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தா நகரில் நடக்கிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க ஆர்வம் காட்டும் வீரர்கள்…
ரிஷப் பந்த்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கிய வீரரான தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அவர் ஓய்வு பெறும் நேரத்தில் மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டுகிறது. அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைத்திருக்கும் முக்கிய வீரர் ரிஷப் பந்த்.
கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி அணிக்கு ஆடியுள்ள ரிஷப் பந்த், முதல்முறையாக ஏலப் பட்டியலில் வந்துள்ளார். அவரை 25 கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையைப் போலவே பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகளும் எந்த விலை கொடுத்தாவது அவரை வாங்க தயாராக உள்ளது. அதனால் அவர் குறிப்பிட்ட பட்ஜெட்டை மீறிச் சென்றால், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும்.
டெவன் கான்வே:
ஐபிஎல் ஏலத்துக்கு முன் 5 வீரர்களை தக்கவைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெவன் கான்வேயை மட்டும் தக்கவைக்கவில்லை. கான்வேயைப் பொறுத்தவரை அவர் அதிரடி தொடக்க ஆட்டக்காரராகவும், விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து அவர் பல போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடியுள்ளார். அதனால் இந்த ஏலத்தின்போது ரைட் டு மேட்ச் கார்டை பயன்படுத்தி டெவன் கான்வேயை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்க வாய்ப்புகள் உள்ளன.
ஜேம்ஸ் ஆண்டர்சன்:
குறைந்த விலைக்கு ஒரு மூத்த வேகப்பந்து வீச்சாளர் சென்னை அணிக்கு தேவைப்படுகிறார். இதனால் அணிக்கு ஒரு வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பதுடன் பட்ஜெட்டிலும் பெரிய பாதிப்பு இருக்காது. அந்த இடத்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் நிறைவேற்றுவார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கையாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், 2 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலையுடன் இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கிறார். அவரை வாங்க பல அணிகள் முன்வராது என்பதால் அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கோ அல்லது குறைந்த விலையிலோ வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருக்கிறது.
மார்கஸ் ஸ்டாய்னிஸ்:
எப்போதுமே அதிரடியாக பேட்டிங் செய்யும் ஆல்ரவுண்டர்களை வாங்கிப் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வழக்கம். இந்த முறை அந்த தேவையை நிறைவேற்ற ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மார்க்கஸ் ஸ்டாய்னிஸுக்கு சிஎஸ்கே குறிவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்ட சுந்தர்
பெயரில் சென்னை இருந்தாலும், ஒரு தமிழக வீரர்கூட சிஎஸ்கே அணியில் இல்லை என்பது ரசிகர்களின் மிகப்பெரிய குறையாக உள்ளது. இந்த குறையை சரிசெய்ய இம்முறை ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வாங்க முடியாமல் போனால் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஈடுபடும்.