இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைச் சொல்கிறார்கள் மகன் பிரகாஷும், மகள் லதாவும்…
எம்.எஸ்.வி தன் குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்துகொண்டதே இல்லை. வீட்டில் இருக்கும் சமயத்தில், தன் 7 குழந்தைகளுடன் 8-வது குழந்தையாகவே அவர் மாறியிருப்பார். மகன்களைவிட மகள்களிடம் எம்.எஸ்.விக்கு நெருக்கம் அதிகம். மருத்துவமனைகளுக்கு செல்லும்போது அவர்களைத்தான் உடன் அழைத்துச் செல்வார். கடைசிகாலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், மகள்களில் யாராவது ஒருவர் தன்னுடன் இருப்பதை அவர் விரும்பினார்.
தான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது எம்.எஸ்.வியின் வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறையாவது பழனி, குருவாயூர், திருப்பதி கோயில்களுக்கு செல்வது அவரது வழக்கம்.
டாக்டரிடம் செல்ல மிகவும் தயங்கும் நபர் எம்.எஸ்.வி. எந்த பிரச்சினை வந்தாலும் நாட்டு மருந்துதான் சாப்பிடுவார். பலமுறை கண்ணதாசன் திட்டிய பிறகு அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
எம்.எஸ்.விக்கு பிடித்த ஆண் பாடகர் பிபி.ஸ்ரீநிவாஸ். பெண்களில் அவருக்கு மிகவும் பிடித்த குரல் ஜானகியுடையது. எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்த பாடகி எஸ்.ஜானகி. ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில் அவருக்கு இணையாக பாட முடியவில்லை என்பதற்காக 8 முறை திரும்பத் திரும்ப அந்த பாடலை ரெக்கார்ட் செய்திருக்கிறார் எம்.எஸ்.வி. அதே நேரத்தில் டிஎம்எஸ்ஸின் தமிழ் உச்சரிப்பின்மீது அவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்.
எந்த விருது வாங்கினாலும், ஏற்காட்டில் தங்கியிருக்கும் தன் அம்மாவிடம் சென்று அதைக் காட்டிவிட்டு வருவது எம்எஸ்வியின் வழக்கமாக இருந்தது.
தான் இசையமைக்கும் படங்களின் ரீ ரெக்கார்டிங்கை, எப்போதும் 5-வது ரீலில் இருந்துதான் தொடங்குவார் எம்.எஸ்.வி. அது அவரது செண்டிமெண்ட். அதேபோல் விஜயதசமி தினத்தன்று ஏதாவது ஒரு படத்துக்கு இசையமைக்கத் தொடங்குவதையும் அவர் செண்டிமெண்டாக வைத்திருந்தார்.
டான்பாஸ்கோ பள்ளியில் தனக்கு வழங்கப்பட்ட ஹார்மோனியத்தை கடைசிவரை தன்னுடன் வைத்திருந்தார் எம்.எஸ்.வி. ஒரு நாள் அது காணாமல் போனதும் பதறியிருக்கிறார். கண்ணதாசன் அவரைச் சமாதானப்படுத்தி, பேப்பரில் விளம்பரம் கொடுத்து அந்த ஹார்மோனியத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அந்த ஹார்மோனியம் மீண்டும் கிடைக்கும்வரை உணவு, உறக்கம் இல்லாமல் தவித்திருக்கிறார் எம்.எஸ்.வி.
‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில் இடம்பெற்ற ‘என்னடி ராக்கம்மா’ பாடல் முதலில் சிவாஜிக்கு பிடிக்கவில்லை. அந்த பாட்டு இல்லாமல் படத்தை வெளியிடச் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த பாட்டுதான் படத்தை தூக்கி நிறுத்தும் என்றும் அதை கண்டிப்பாக பட்த்தில் சேர்க்க வேண்டும் என்றும் வாதாடியிருக்கிறார் எம்.எஸ்.வி. அவர் பிடிவாதம் பிடித்த்தால்தான் அப்பாடல் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில் இடம்பெற்றது.
விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இடைக்காலத்தில் பிரிந்தாலும், அவர்களுக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதில்லை. பிரிவுக்குப் பிறகும் ராம்மூர்த்தியின் மகன் எம்.எஸ்.வியின் குழுவில் வயலின் தொடர்ந்து வாசித்து வந்தார் என்பதே இதற்கு சாட்சி.
எஸ்.பி.பிக்கு எம்.எஸ்.வி வைத்திருந்த பெயர் ‘பிளாட்டிங் பேப்பர்’. தான் சொன்னதை புரிந்துகொண்டு அப்படியே பாடுவதால் அந்த பெயரை அவருக்கு வைத்திருந்தார்.
‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெறும் ‘முத்தான முத்தல்லவோ’ பாடலை கோடம்பாக்கம் ரெயில்வே கேட்டில் கார் நின்றுகொண்டிருந்த 40 நிமிடத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். அப்போது அந்த காரில் எம்.எஸ்.வி, கண்ணதாசன், ஸ்ரீதர் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.
நடிகர் சந்திரபாபு, எம்.எஸ்.விக்கு நெருக்கமான நண்பர். சந்திரபாபுவின் கடைசிக்காலத்தில் 3 வேளையும் அவருக்கு எம்.எஸ்.வியின் வீட்டில் இருந்துதான் உணவு கொண்டுசெல்லப்பட்டது.
அம்மாவின் பேச்சை எம்.எஸ்.வி என்றும் தட்டியதில்லை. தேவர் கட்டுக்கட்டாக பணம் கொண்டு வந்து கொடுத்தபோதும், தனது அம்மா சொன்ன வார்த்தைக்காக ‘வேட்டைக்காரன்’ படத்துக்கு இசையமைக்க அவர் மறுத்தார்.
ரஷ்ய பயணத்தின்போது எம்.எஸ்.விக்கு காஸ்ட்யூம் டிசைனிங் செய்து கொடுத்தவர் சந்திரபாபு. அவரது வற்புறுத்தலின் பெயரில் அவர் வடிவமைத்துக் கொடுத்த கோட் சூட்டைப் போட்டுக்கொண்டு, ரஷ்யாவில் எம்.எஸ்.வி வலம் வந்தார்.
எம்.எஸ்.விக்கு வித்யாசாகரை மிகவும் பிடிக்கும். வித்யாசாகரின் அப்பா, எம்.எஸ்.வியிடம் வேலை பார்த்திருக்கிறார்.
சுவர்ணலதாவுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர் எம்.எஸ்.வி.