இந்தியாவின் இப்போதைய ஹாட் டாபிக் அம்ரித் பால் சிங். பஞ்சாப்பின் 80 ஆயிரம் போலீஸ்காரர்கள் இவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவரை ஏன் பிடிக்க முடியவில்லை? 80 ஆயிரம் போலீஸ்காரர்கள் என்ன செய்கிறீர்கள்? என்று கோபமாய் பஞ்சாப் உயர் நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது.
யார் இந்த அம்ரித்பால் சிங்?
பஞ்சாப் பிரிவினைவாத இயக்கமான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ (Waris Punjab De) -யின் தலைவர்தான் அம்ரித்பால் சிங். ஒட்டு மொத்த பஞ்சாப் காவல்துறையும் இவரைப் பிடிக்க வரிந்து கொண்டிருக்க அத்தனை பேருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார் அம்ரித்பால் சிங்.
80 ஆயிரம் போலீஸாரின் கண்களில் படாமல் அவர் எப்படி தப்பிச் சென்றார் என்று நீதிமன்றம் ஒருபுறம் கேள்வி எழுப்ப, மறுபுறம் ‘அவர் தப்பிச் சென்றதாக போலீஸார் கூறுவது பொய். போலீஸார் அவரை சட்ட விரோதமாக கைது செய்து வைத்திருக்கிறார்கள்’ என்று அவரது இயக்கத்தினர் புகார் கூறி வருகிறார்கள். இதன் நடுவில் அவரைப் பற்றிய செய்திகளுக்கு வட இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
ஏன் பஞ்சாப் காவல்துறை அம்ரித்பால் சிங்கைத் தேடுகிறது? அதற்கு முன் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்
பஞ்சாபின் அமிர்தசரஸ் ஜல்லபூர் கெரா கிராமத்தில் 1993ஆம் ஆண்டு பிறந்தவர் அம்ரித்பால் சிங். குடும்பத்தினருக்கு துபாயில் போக்குவரத்து பிசினஸ். 20 வயதாகும்போது அம்ரித் பாலும் குடும்பத் தொழிலை கவனிக்க துபாய் சென்றார். இதுவரை அவரது வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட பெரும்பான்மையினர் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சார்ந்தவர்கள். தன் மாநில விவசாயிகள் போராடுவதைக் கண்ட அம்ரித்பால் தானும் போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக டெல்லி வந்தார். போராட்டத்தில் விவசாயிகளுடன் கலந்துக் கொண்டார். அவரது வாழ்க்கை தடம் மாறியது.
விவசாயிகள் போராட்டத்தின்போது அவருக்கு ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. விவசாயிகள் போராட்டத்தின்போது அவர்களுக்கு தோள் கொடுத்து நின்ற இயக்கம்தான் ‘வாரிஸ் பஞ்சாப் தே’. நடிகராக இருந்து பின்னர் சமூக இயக்கங்களில் பங்கேற்ற தீப் சித்து என்பவரால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
20121-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் சீக்கிய இளைஞர்கள் சிலர் தேசிய கொடிக்கு அருகில் நிஷான் சாஹிப் என்ற சீக்கிய மதக் கொடியை ஏற்றிய சம்பவம் நம்மில் பலருக்கு நினைவிருக்கும். ‘வாரிஸ் பஞ்சாப் தே’ இயக்கத்தைச் சேர்ந்த தீப் சித்துதான் இந்தக் காரியத்தை செய்தது. அவர்தான் அந்த இயக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்துபவராகவும் இருந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு தீப் சித்து கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர் விபத்தில் சிக்கி இறந்தார்.
தீப் சித்துவின் திடீர் மரணத்தால் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ இயக்கம் தலைவர் இல்லாமல் நிற்க, அந்த இயக்கத்துக்கு தலைவரானார் அம்ரித்பால் சிங். ஆனால் இது தீப் சித்துவின் சகோதரர் மன்தீப் உள்ளிட்ட பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இல்லாத பலம் ஒன்று அம்ரித்பால் சிங்குக்கு இருந்தது. அவரால் மிகத் தீவிரமாக அனல் பறக்க பேச முடியும். அவர் பேசினால் இளைஞர்கள் மெய்மறந்து கேட்பார்கள். அந்த பேச்சு பலத்தால் அம்ரித்பால் சிங்குக்கு ஆதரவு அதிகரித்தது. இயக்கத்தின் தலைமை பொறுப்பில் நீடித்தார். அவரது வளர்ச்சியை எதிர்ப்பாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
1980 களின் ஆரம்பத்தில் பஞ்சாப் மாநிலத்துக்கு தனி நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய பிந்திரன்வாலேதான் அம்ரித்பால் சிங்குக்கு மானசீக குரு. பிந்திரன்வாலே 1984ஆம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் இந்திய ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியும் தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கடந்த கால வரலாறு.
பிந்திரன்வாலேயை தனது மானசீக குருவாக கொண்டுள்ள அம்ரித்பால் சிங், கொஞ்சம் கொஞ்சமாக மாறும் சந்திரமுகியைப் போல் தனது தோற்றம், நடை உடை மற்றும் பாவனைகளை பிந்திரன்வாலேவைப் போலவே மாற்றினார். பிந்திரன்வாலேவைப் போலவே பேசுவது, அவரைப் போன்றே ஆயுதங்களை தரிப்பது என்று முழுக்க முழுக்க தன்னை ‘பிந்திரன்வாலே 2’-வாக மாற்றிக்கொண்டார். இந்தியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக காலிஸ்தானை உருவாக்க வந்த கடவுளாக பிந்திரன்வாலேவை பூஜித்த சிலருக்கு அம்ரித்பால் சிங்கின் தீவிர சிந்தனைகள் பிடித்துப் போய்விட்டது. அம்ரித்பால் சிங்குடன் கைகோர்த்தனர். குறுகிய காலத்தில் பல இளைஞர்கள் அம்ரித்பால் சிங்கின் இயக்கத்தில் இணைந்தனர்.
ஆரம்பத்தில் இந்த இயக்கத்தை சாதாரணமான இளைஞர் இயக்கமாகத்தான் அரசு கருதியது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப்பின் அமிர்தசரஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தை ‘வாரிஸ் தே பஞ்சாப்’ இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சீக்கிய இளைஞர்கள் சூழ்ந்து தாக்கியபோதுதான் இந்த இயக்கத்தின் தீவிரத்தன்மை ஆட்சியாளர்களுக்கு உறைத்தது.
அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான லவ்பிரீத் சிங் ஒரு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்ததே அந்தத் தாக்குதலுக்கு காரணம் அவரை விடுவிப்பதற்கான போராட்டம் என்று கூறி இதில் பங்கேற்ற சீக்கியர்கள் ஒரு கையில் வாளையும், மற்றொரு கையில் சீக்கியர்களின் புனித நூலையும் ஏந்தியிருதனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களின் கைகளில் புனித நூல் இருந்ததால், அவர்களைத் தாக்கினால் பெரிய கலவரம் வெடிக்கும் என்று பயந்த போலீஸார், அவர்களை கட்டுப்படுத்தவில்லை. இதை சாதகமாக்கிக்கொண்ட அந்த கும்பல் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியது.
இந்த சம்பவத்துக்கு பிறகு அறிக்கை வெளியிட்ட அம்ரித்பால் சிங், காலிஸ்தானை அடைவதே தங்கள் உச்சகட்ட இலக்கு என்று பிரகடனம் செய்தார்.
அதன் பிறகு அம்ரித்பால் சிங் தொடர்பான இடங்களை சோதனையிடத் தொடங்கியது காவல்துறை. ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தது. பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐஎஸ்ஐஎஸ் அவருக்கு உதவுகிறது என்றது இந்திய உளவுத் துறை.
அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இதற்கு வசதியாக பஞ்சாப்பின் 2 நாட்களுக்கு இணைய சேவையும் முடக்கப்பட்டது.
ஆனால் போலீஸாரின் அனைத்து முயற்சிகளையும் மீறி தப்பிச் சென்றுவிட்டார் அம்ரித்பால் சிங்.
ஜலந்தரில் உள்ள டோல்கேட் கேமராவில் கடந்த சனிக்கிழமை பதிவான காட்சிகளை ஆராய்ந்தபோது, மெர்சிடஸ் எஸ்யூவி வாகனத்தில் முன் இருக்கையில் அம்ரித்பால் சிங் அமர்ந்துள்ளார். அதன்பின் இன்னொரு சிசிடிவ் காட்சியில் அவர் மாருதி பிரஸ்ஸா வாகனத்தில் வேறு உடையில் இருக்கிறார். அதன்பின் பாரம்பரிய மத உடையை மாற்றிவிட்டு பேண்ட், சட்டை அணிந்து தலைப்பாகையை மாற்றி மோட்டார் பைக்கில் தப்பிச்சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரைத் தேடும் முயற்சிகள் இன்னும் நீடிக்கிறது.
பிந்திரன்வாலே போல் இந்தியாவுக்கு தலைவலியாக மாறிக் கொண்டிருக்கிறார் அம்ரித்பால் சிங்.