No menu items!

Inida Vs Pak – அஸ்வினின் சட்டை அறை!

Inida Vs Pak – அஸ்வினின் சட்டை அறை!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு வெற்றி பெற்றுத் தந்ததற்காக விராட் கோலியை நேற்று நாள் முழுக்க கொண்டாடி தீர்த்தாகிவிட்டது. இது அஸ்வினைக் கொண்டாட வேண்டிய நேரம். பாகிஸ்தானுக்கு எதிராக தன் முழு ஆற்றலையும் காட்டி விராட் கோலி ஆடியதாலேயே இந்தியாவுக்கு வெற்றி வசமானது என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அதே நேரத்தில், மிக முக்கியமான கட்டத்தில் முகமது நவாஸின் பந்தை அஸ்வின் கையாண்ட விதமும் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்பதை மறக்க முடியாது.

பேட்டிங் களத்துக்குள் அஸ்வின் நுழைந்த நேரத்தில் இந்தியாவின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கடைசி 8 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவை என்ற நிலையில், வெற்றிக்கான அனைத்து விஷயங்களையும் செய்கிறார் கோலி. கடைசியில் இந்தியாவின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ரன்கள் தேவை. இந்த நேரத்தில் சற்று வைடாக நவாஸ் வீசிய பந்தை அடிக்க முயன்று விக்கெட்டைக் காவு கொடுக்கிறார் தினேஷ் கார்த்திக்.

கார்த்திக்கின் இந்த விக்கெட் இந்தியாவை இடியெனத் தாக்குகிறது. கடைசி பந்தில் 2 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆடுவதற்காக உள்ளே அனுப்பப்படுகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின். பதற்றம் நிறைந்த டக் அவுட்டில் இருந்து பதற்றமான பிட்சுக்கு இடம் மாறுகிறார் அஸ்வின். எதிர்புறத்தில் நின்ற விராட் கோலி, பந்து வீசும் முகமது நவாஸ், பாகிஸ்தான் வீரர்கள் என எல்லோர் முகத்திலும் பதற்றம். ஆனால் இந்தச் சூழலிலும் எந்தவித பதற்றத்தையும் வெளிக்காட்டாமல் ‘வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்ற முகபாவத்துடன் பிட்சுக்குள் நுழைகிறார் அஸ்வின்.

தினேஷ் கார்த்திக்குக்கு வீசிய அதேபோல் சற்று வைட் பந்தை வீசுகிறார் நவாஸ். வேறு எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும், பதற்றத்தால் அதை அடித்து விரட்டத்தான் நினைப்பார்கள். அதற்கு முந்தைய பந்தில் தினேஷ் கார்த்திக்கூட அதைத்தான் செய்தார். ஆனால் அஸ்வின் நிலை மறக்கவில்லை. நவாஸின் கையை விட்டு பந்து வெளிப்படும்போதே, அது வைடாகத்தான் இருக்கும் என்று நினைத்து மெல்ல நகர்கிறார். அஸ்வினின் கணிப்பு தவறவில்லை. அந்த பந்து ‘வைட்’ ஆகிறது.

அடுத்த பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவை. இப்போதும் எல்லோர் முகத்திலும் பதற்றம். ஆனால் வழக்கம்போல் அஸ்வின் பதறவில்லை. மிக நிதானமாக யோசித்து, ஆனால் வேகமாக பேட்டை சுழற்றி, அதை பவுண்டரிக்கு விளாசுகிறார். வெற்றி இந்தியாவின் வசமாகிறது. ஆக விராட்டின் வேகத்துக்கு இணையாக அஸ்வினின் நிதானத்துக்கும் அன்றைய வெற்றியில் பங்கு இருக்கிறது.

அந்த கடைசி 2 பந்துகளில் மட்டும் அஸ்வின் தவறு செய்திருந்தால், கோலியின் புயல் வேக ஆட்டம் வீணாகி இருக்கும். பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியைச் சந்தித்திருக்கும். ஆனால் அஸ்வினின் நிதானம், அவரை மட்டுமின்றி அணியையும் காப்பாற்றியது.

கிரிக்கெட்டில் தனது முழு ஆற்றலையும் காட்டுவதுடன் சமயோசிதமாகவும் ஆடுவது அஸ்வினுக்கு ஒன்றும் புதிய விஷயமல்ல. ஏற்கெனவே பல முறை அதை அவர் வெளிக்காட்டி உள்ளார். 2019-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய அஸ்வின், மிக முக்கிய தருணத்தில் மங்கட் (பந்துவீச்சாளர் பந்தை வீசும் முன்பே ரன் எடுக்க ஓடும் நான் ஸ்டிரைக்கரை அவுட் ஆக்கும் முறை) முறையில் ஜாஸ் பட்லரை அவுட் ஆக்கி தனது அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு செஷன் முழுக்க (30 ஓவர்களுக்கும் மேல்) பந்துகளை உடலில் வாங்கி விக்கெட்டைப் பறிகொடுக்காமல் நின்று ஆட்டத்தை டிரா செய்து கொடுத்துள்ளார் அஸ்வின். இப்படி பல போட்டிகளில் தனது அனுபவ அறிவால், இந்திய அணிக்கும், தான் சார்ந்த அணிகளுக்கும் அவர் வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். தோல்விகளில் இருந்தும் அணியைக் காத்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு கிடைத்த மிக முக்கிய வீரராக அஸ்வின் உள்ளார்.

அஸ்வினுக்கு சிறு வயதில் ஒரு வழக்கம் இருந்துள்ளது. ஒரு கிரிக்கெட் போட்டியில் தாஅன் சிறப்பாக ஆடியதாக அவருக்குத் தோன்றினால், அந்த போட்டியில் அணிந்த சட்டையை வீட்டில் ஒரு அறையில் மாட்டி வைப்பார். அவ்வாறு முக்கிய போட்டிகளில் அணிந்த சட்டைகளை மாட்டி வைப்பதற்காகவே அவரது வீட்டில் ஒரு அறை உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் அணிந்த சட்டையும் அந்த அறைக்குள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...