இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கத்துக்குட்டியாக கருதப்பட்ட வங்கதேச அணி, இப்போது வலுவடைந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தானில் தொடரை வென்ற கையோடு இப்போது இந்தியாவில் வங்கதேச அணி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
சென்னையில் அஸ்வினுக்கு கடைசி டெஸ்ட்:
தமிழக வீரர் அஸ்வினுக்கு இப்போது 38 வயது. அவர் ஓய்வுக்கான வயதை நெருங்குவதால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் ஆடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் ஆடும் கடைசி டெஸ்ட் என்பதால் அஸ்வினிடம் இருந்து ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களுக்கு மேல் எடுத்துள்ள அஸ்வினுக்கு, உள்நாட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீர்ர் என்ற கும்ப்ளேவின் (476 விக்கெட்கள்) சாதனையை முறியடிக்க இன்னும் 22 விக்கெட்கள் தேவைப்படுகின்றன. இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசினால் அந்த சாதனையை அவர் படைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
வெற்றி முக்கியம் – ரோஹித் சர்மா
இந்த டெஸ்ட் போட்டி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் திறந்த நிலையில் உள்ளது. அதன் இறுதிப் போட்டிக்கு முன்னேற எல்லா அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டியது முக்கியம். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற விரும்புகிறோம். இதில்தான் தற்போது எங்களது கவனம் உள்ளது.
ஒவ்வொரு அணியும் இந்தியாவை வீழ்த்த விரும்புகிறது. அதில் அவர்கள் கொஞ்சம் பெருமை கொள்கிறார்கள். எதிரணி வீரர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. போட்டிகளை எப்படி வெல்வது என்பது பற்றி சிந்திப்பதே எங்கள் வேலை. உலகின் அனைத்து முன்னணி அணிகளுக்கு எதிராகவும் இந்தியா கிரிக்கெட் விளையாடியுள்ளது. எனவே, முற்றிலும் மாறுபட்ட களவியூயங்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
சிறந்த வீரர்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால் அதிக அளவிலான போட்டிகள் இருப்பதால் அது சாத்தியமில்லை. டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல, டெஸ்ட் தொடரின் நடுவில் டி20 தொடரும் நடைபெறுகிறது. எனவே அதற்கு தகுந்தவாறு பந்து வீச்சாளர்களை நிர்வகிக்க வேண்டும். இதற்கு திட்டம் வகுத்துள்ளோம்.
இவ்வாறு ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானம் – ஒரு பார்வை
இந்தியாவின் மிகப் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக சேப்பாக்கம் மைதானம் கட்டப்பட்டது. 1916-ம் ஆண்டு முதல் இங்கு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
7.52 லட்சம் சதுரஅடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், முதலில் ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கிரவுண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.சிதம்பரத்தின் பெயர் இந்த மைதானத்துக்கு சூட்டப்பட்டது. 1934-ம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மெட்ராஸ் மற்றும் மைசூரு அணிகள் மோதின.
2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக 2009-ம் ஆண்டு இந்த மைதானம் நவீன முறையில் மாற்றிக் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை வழங்கிய மைதானம் என்ற பெருமை சேப்பாக்கம் மைதானத்துக்கு உண்டு. 1952-ம் ஆண்டு இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தங்கள் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.