அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜெர்மனி மற்றும் ஜப்பானைக் காட்டிலும் இந்தியா மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக் சிஇஓ பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய பலமே அதன் ஜனநாயகம்தான். எனவே மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும் கூட இந்தியா உலகளவில் மிகப்பெரிய கல்வி மையமாக மாறமுடியும். இது, நமக்கு மிகவும் சாதகமான அம்சமாகும்.
உலகளவில் தற்போது இந்திய பொருளாதாரமானது ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நமது பொருளாதாரம் நான்காவது இடத்துக்கு முன்னேறும். அதன்பிறகு மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.
சர்வதேச நிதிய தகவலின்படி, இந்திய பொருளாதாரத்தின் அளவு தற்போது 4.3 டிரில்லியன் டாலராக (ரூ.367 லட்சம் கோடி) உள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை இந்தியப் பொருளாதாரம் விஞ்சிவிடும்.
வரும் 2047-ம் ஆண்டுக்குள் அதாவது நூற்றாண்டு சுதந்திர தினத்தில் நமது நாடு 30 டிரில்லியன் டாலர் (ரூ.2,562 லட்சம் கோடி) பொருளாதார மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
உலகம் முழுவதும் வேலைசெய்யும் வயதுடையவர்களுக்கு இந்தியா ஒரு நிலையான சப்ளையராக இருக்கும். இதுவே நமது மிகப்பெரிய ஒற்றைப் பலமாக அமையும்.