கொரோனா பரவலால் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் பொருளாதாரம் ஆட்டம் கண்டது. தொற்று குறையத் தொடங்கியதும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள முயற்சித்த போது ரஷ்யா- உக்ரைன் போர் அதை மேலும் மோசமடைய செய்தது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட முன்னேறிய நாடுகளே இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், “பிரச்சினை முடிந்துவிடவில்லை; மோசமான நிலை இனி தான் உள்ளது. 2023ஆம் ஆண்டில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைக்கக்கூடும்” என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது பலரையும் கலக்கமடையச் செய்துள்ளது.
இந்த மந்த நிலையால் யாருக்கு என்ன பாதிப்பு? இந்தியா இதனால் பாதிக்கப்படுமா?
அதற்கு முன்பு… பொருளாதார மந்தநிலை என்றால் என்ன? என்று சுருக்கமாக பார்ப்போம்.
பொருளாதாரம் என்பது பண சுழற்சியின் மூலமே நடக்கிறது. இந்த சுழற்சியில் நாம் அனைவருமே பங்கெடுத்துள்ளோம். உதாரணமாக, தீபாவளிக்கு துணி எடுத்து ஒரு தையல்காரரிடம் கொடுத்து தைக்கிறோம்; அதற்கு கூலியாக அந்த தையல்காரருக்கு 500 ரூபாய் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். தையல்காரர் அந்த 500 ரூபாய்க்கு பையனுக்கு தீபாவளி பட்டாசு வாங்குவார். பட்டாசு கடைக்காரர் 500 ரூபாயை கொண்டு போய் தன் வீட்டிற்கு ‘ஸ்வீட்’ வாங்குகிறார். ‘ஸ்வீட்’ கடைக்காரர் அதை மளிகைக் கடைக்காரருக்கு கொடுப்பார். இப்போது 500 ரூபாய் நான்கு பேரிடம் கை மாறி நான்கு பேருக்கும் உதவியிருக்கிறது. 4X500 = 2000 ரூபாய்க்கான வியாபாரம் நடந்துள்ளது. இதுவே முதல் நபர், வருமானம் குறைந்து, அதனால் தீபாவளிக்கு துணி எடுக்காமல், அந்த 500 ரூபாயை செலவிடாமல் வைத்திருந்தால்…. மீதமுள்ள மூன்று சுழற்சியும் நடைபெறாது. தையல்காரர் மகனுக்கு பட்டாசு வாங்கிக் கொடுக்க முடியாது, பட்டாசு கடைக்காரர் வீட்டுக்கு ஸ்வீட் வாங்கிக்கொண்டு செல்ல முடியாது, மளிகைக் கடைக்காரருக்கு ஸ்வீட் கடைக்காரர் பணம் கொடுக்க முடியாது.
பணம் தேங்கி சுழற்சி நடைபெறாமல் இருக்கும் இந்நிலைதான் மந்தநிலை. இதையே இன்னும் பெரிய அளவில் ஒரு நாட்டின் பொருளாதாரத்துடன் புரிந்துகொண்டால், ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவை சந்திக்கும். உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்தால் அது நாட்டின் பொருளாதார சரிவு. ஜிடிபி என்பது முதலீடுகள், வேலை வாய்ப்புகள், வர்த்தக வரவுகள், பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. மந்தநிலையில் இந்த அனைத்து துறைகளுமே சரிவில் இருக்கும். நாடு திவாலாகிவிடும் நிலைக்கு தள்ளப்படும். இப்போது இலங்கையில் நடப்பது இதுதான்.
மக்களின் வாங்கும் சக்தி குறையும், விற்பனை குறையும்; அதனால் உற்பத்தி குறைக்கப்படும், அதன் தொடர்ச்சியாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். இதனால்தான், உலக அளவில் 2023ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.
நடப்பு ஆண்டில் (2022) உலக ஜிடிபி 3.2 % வளரும் என்றும் 2023ஆம் ஆண்டில் வளர்ச்சி 2.7 சதவீதமாக இருக்கும் என்றும் ஐஎம்எஃப் கணித்துள்ளது. மேலும், பணவீக்கம் 9.5 சதவீதத்தை எட்டும் என்றும், 2008இல் ஏற்பட்ட சர்வதேச நிதியியல் நெருக்கடியை விடவும், 2020 கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட மந்தநிலையை விடவும், இப்போது மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் 2026 வரையிலான காலகட்டத்தில் சர்வதேச பொருளாதாரத்தின் மதிப்பை 4 டிரில்லியன் டாலர் வரையில் குறைத்துள்ளது.
ஐஎம்எஃப் சாா்பில் 11-10-2022 அன்று வெளியிடப்பட்ட உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான உலகளாவிய வளர்ச்சிக் கணிப்புகளைக் குறைத்துள்ள ஐஎம்எஃப், பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தை கொள்கை வகுப்பாளர்கள் தவறாகக் கையாண்டால், உலகளவில் கடுமையான மந்தநிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர், “உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு தொழில்நுட்ப மந்தநிலையில் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சீனா மற்றும் யூரோவைப் பயன்படுத்தும் 19 நாடுகளின் பொருளாதாரங்கள் எவ்வாறு உள்ளன, அது உலகெங்கிலும் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன என்பதையும் ஐஎம்எஃப் அறிக்கை விவரிக்கிறது.
கார்ப்பரேட் அமெரிக்காவும் வால் ஸ்ட்ரீட்டும் ஏற்கனவே சரிவில் உள்ளன. பணவீக்கம், அதனால் உயரும் கடன் வட்டி விகிதங்கள் நுகர்வோர் செலவின சக்தியைக் குறைக்கின்றன, வீட்டுச் செயல்பாடுகளும் குறைந்து வருகின்றன. பெட்ரோல் விலையில் சமீபத்திய மூன்று மாத சரிவு நுகர்வோருக்கு பணவீக்கத்திலிருந்து சிறிது நிவாரணம் அளித்தது என்றாலும், ஒபெக் பிளஸ் எனப்படும் சர்வதேச கார்டெல் கடந்த வாரம் அறிவித்த எண்ணெய் உற்பத்திக் குறைப்புக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரலாம் என்ற கவலை உள்ளது. 2021இல் 5.7 சதவீதமாக இருந்த அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, 2022இல் 1.6 சதவீதமாகவும், 2023இல் ஒரு சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவில், கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருவது அதன் பொருளாதாரத்தை சரிவை நோக்கி இழுத்துச் செல்கின்றது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் சீனா கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது. பணக்கட்டுப்பாடு உள்ள வீட்டு உரிமையாளர்கள் முடிக்கப்படாத சொத்துக்களுக்கான கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கின்றனர். இதனால் சீனாவின் வங்கித் துறை நெருக்கடிக்கு உள்ளாகும் என ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. 2021இல் 8.1 சதவீதமாக இருந்த சீன பொருளாதார வளர்ச்சி, 2022இல் 3.2 சதவீதமாகவும், 2023இல் 4.4 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா எரிசக்திக்காக ரஷ்யாவை பெரிதும் நம்பியுள்ளது. இதனால் எரிவாயு விலைகளில் கடுமையான அதிகரிப்பை எதிர்கொள்கிறது. எரிசக்தி விலைகள் பற்றிய நிச்சயமற்ற தன்மை உற்பத்தி நடவடிக்கைகளை குறைத்துள்ளதுடன் ஐரோப்பாவின் பல பொருளாதாரங்களை ஆட்டிப்படைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி -0.3%, பிரான்ஸ் 0.7%, இத்தாலி-0.02% பிரிட்டன் 0.3% என்ற அளவில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பொருளாதாரம் சர்வதேசத் தடைகளை எதிர்கொண்டாலும் கணித்ததை விட சிறப்பாக உள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 3.4 சதவீதமாகவும், 2023இல் 2.3 சதவீதமாகவும் சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் 1.6% வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் வளர்ந்த நாடுகளில் 2021இல் 5.2 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2022இல் 2.4 சதவீதமாகவும், 2023இல் 1.1 சதவீதமாகவும் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகின் 5ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாகத் திகழும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2021இல் 8.7 சதவீதமாக இருந்த நிலையில், அது சற்று குறைந்து 2022இல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், 2023இல் அது 6.1 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. ஐஎம்எஃப் கணிப்பில் இந்தியா மட்டுமே அதிகபட்சமாக 6.1% வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஎம்எஃப் கணித்துள்ள மந்தநிலை பணக்கார நாடுகளின் ஏழைகளையும் ஏழை நாடுகளையும் அதிகம் பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் இதன் பாதிப்புகள் ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டன. எடுத்துக்காட்டாக ஆடை ஏற்றுமதி கடந்த மாதம் மட்டும் 3.5% குறைந்துள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி 17% சரிந்துள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தி அளவு கடந்த ஜூலை மாதம் 2.4% குறைந்த நிலையில், கோர் எனப்படும் முக்கியமான துறைகளின் வளர்ச்சி சரியும் விகிதம் ஆகஸ்டில் 3.3%ஆக இருந்தது. இது அதன் முன்னரான 9 மாதங்களில் இல்லாத அளவு குறைவாகும். ஜிஎஸ்டி வரிவசூல் அளவிலேயே மந்த நிலையின் தாக்கத்தை தெளிவாக காண முடிகிறது. கடந்த ஏப்ரலில் 1.68 டிரில்லியன் ரூபாயாக இருந்த ஜிஎஸ்டி வரிவசூல் தற்போது 1.45 டிரில்லியனாக சரிந்துள்ளது.