நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாரதிராஜாவின் இணை இயக்குநர், பாக்யராஜின் கதை விவாதக் குழுவில் முக்கிய இடம்பெற்றிருந்தவர், ஏ.ஆர். ரஹ்மானின் நண்பர், டிஜிட்டல் திரைப்படப் பள்ளி முதல்வர், ‘திரைப்படத் தமிழ்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர், பல திரைப்படக் கல்லூரிகளில் கௌரவப் பேராசிரியர் என பல பன்முகம் கொண்டவர், வி. ஜெயப்பிரகாஷ். ‘சாதி சனம்’, ‘குச்சி ஐஸ்’, ‘உலகம்மை’ உட்பட பல படங்கள் இயக்கியவர். ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்காக ஜெயப்பிரகாஷை சந்தித்தோம்.
சிறந்த திரைக்கதை என்றால் தமிழ் சினிமாவில் இன்றும் உதாரணமாக பேசப்படுபவர் பாக்யராஜ்தான். அவரது கதை விவாதக் குழுவில் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். திரைக்கதை உருவாக்கத்தில் பாக்யராஜ் பாணி என்ன? அவருடன் நீங்கள் இருந்த காலங்களில் உருவான படங்கள் உதாரணத்துடன் சொல்ல முடியுமா?
ஒரு சினிமாவின் அடிப்படை பலம் என்பது கதைதான். இப்போதெல்லாம் பல இயக்குநர்கள் அதற்கு மெனக்கெடுவதே இல்லை. அதுதான் இன்று தமிழ் சினிமாவில் பலவீனமாகவும் இருக்கிறது. நான் பாக்யராஜுடன் இருந்த காலகட்டம் தமிழ் சினிமாவில் கதை இலாகா என்ற துறை முக்கியமானதாக இருந்த நேரம்.
அப்போதெல்லாம் ஒரு சினிமா கதைக்கான விவாதம் என்பது ஒரு வருடம்கூட நடைபெறும். 10 – 15 பேர் அந்த விவாதத்தில் உட்காருவாங்க. ஒரு சிறிய மாநாடு மாதிரி இருக்கும் அந்த கூட்டம். ஒரு கதையை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கி, அதை பல கோணங்களில் அணுகி செப்பனிட்டு என்று மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்வாங்க. அதன் காரணமாத்தான் 100 நாள், 200 நாள், 300 நாட்கள் என்றெல்லாம் அப்போது படங்கள் ஓடியது.
இதில் பாக்யராஜ் சிறப்பு என்பது பாமரர்களுக்கு மிக நெருக்கமான கதைகளைத்தான் அவர் தேர்வு செய்வார். அதன் பிறகு அதை எவ்வளவு எளிமையாக சொல்ல முடியும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார். கதையில் பார்வையாளர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது என்றால், ஒரு லாஜிக் பாயிண்ட் இடிக்கிறது என்றால், அதை படத்தில் ஒரு கதாபாத்திரம் கேட்பது போல வைத்து, அதற்கு பதிலும் சொல்லிவிடுவார். அதனால் பார்வையாளர்கள், அட நாம நினைத்ததை இவர் பேசிவிட்டாரே என்று படத்துடன் நெருக்கமாகிவிடுவார்கள். அதுபோல் அவர் படங்களில் இடைவேளை மிக முக்கிய திருப்பத்துடன் இருக்கும். இண்டர்வெல்லில் வேளியே வரும் பார்வையாளர்கள், இனி என்ன நடக்கும் என ஆவலுடன் பேசிக்கொண்டிருபார்கள். அந்தளவு மக்களின் பல்ஸ் தெரிந்தவர் பாக்யராஜ்.
எனக்கு நடிப்பிலும் ஆர்வம் உண்டு என்பதைத் தெரிந்துகொண்ட பாக்யராஜ், ‘ஆராரோ ஆரிரரோ’ படத்தில் என்னை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார். அவருக்கு அடுத்த இடத்தை எனக்குக் கொடுத்திருந்தார்.
வெளிவர இருக்கும் உங்கள் ‘உலகம்மை’ படம் எப்படி வந்திருக்கு?
‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் நாவல் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படத்தை எடுத்துள்ளேன். இப்போது கொழுந்துவிட்டு எரியும் சாதிய பிரச்சினையை ஒரு கிராமத்தின் பின்புலத்தில் இந்த நாவல் பேசுகிறது. படம் நன்றாக வந்திருக்கிறது. இளையராஜா இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம்.
இளையராஜாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படியிருந்தது?
பாக்யராஜுக்கு அப்புறம் பாரதிராஜாவிடம் ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தேன். ‘நாடோடித் தென்றல்’, ‘கருத்தம்மா’, ‘கிழக்குச் சீமையிலே’, குஷ்பு நடித்த ‘கேப்டன் மகள்’, படங்களில் இணை இயக்குநராக பணியாற்றினேன். பாரதிராஜாவுடன் இருந்த ஐந்து ஆண்டுகளிலும் சினிமா குறித்த பரந்துபட்ட அனுபவம் எனக்குக் கிடைத்தது.
பாரதிராஜாவுடன் இருந்த காலங்களில் தான் இளையராஜாவுடன் அறிமுகம். ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’ இந்த இரண்டு படங்களுக்கும் இசை இளையராஜாதான். அப்போது ஒரு இணை இயக்குநராக தூரத்தில் இருந்து அவர் இசையமைப்பதை பார்த்துள்ளேன். இப்போது நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
எப்போதும் இளையராஜாவிடம் இசைக்காக சென்றால், முதலில் நீங்கள் படத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள். அதைப் பார்த்துவிட்டு அதற்கு நான் தேவைப்பட்டால் செய்கிறேன் என்பார். அது ஒரு நுழைவுத் தேர்வு மாதிரி. எனக்கும் அதைத்தான் சொன்னார். அதன்படி படத்தை எடுத்து முடித்ததும் அவருக்கு போட்டு காட்டினேன். முழுவதும் பார்த்தார். முடிந்த பின்னர், செய்வதா வேண்டாமா என்று விவாதம் நடக்கும் என்று எதிர்பார்த்து தயாராக காத்திருந்தேன். ஆனால், படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், “நாளைக்கு வேலையை ஆரம்பிச்சிருவோம்” என்றுவிட்டு போய்ட்டார். அவர் உடனே அங்கீகரித்ததே எனக்கு முதல் விருது மாதிரி இருந்தது.
இந்த படத்துக்காக 12 நாட்கள் அவர் பின்னணி இசை அமைத்தார். அவர் இசையை சேர்த்த பிறகு படத்தை பார்த்த எனக்கு, உயிரற்ற பொருளுக்கு உயிர் கொடுத்த மேஜிக் மாதிரி இருந்தது.
‘உலகம்மை’ இளையராஜா இசையமைக்கும் 1415ஆவது படம். ஆனாலும், முதல் படம் மாதிரி அவ்வளவு சிரத்தையுடன் செய்தார். இந்த தொழில் மேல் அவருக்கு தீவிரமான ஒரு பக்தி இருக்கிறது. தினமும் காலையில் 7 மணிக்கு ஸ்டுடியோவுக்குள் அவர் கார் நுழைந்துவிடுகிறது. 9 மணிக்கு நாம் போகும்போது பாதி வேலையை முடித்திருப்பார். அவர் காலை உணவுக்கு போகும்போது, “இதெல்லாம் செய்திருக்கிறேன்; போய் பாருங்க” என்பார். போய் என்ன நடந்துள்ளது என்று பார்த்தால் மெய் மறந்து போய்விடுவோம்.
பாடல்கள் காட்சி பற்றி நாம் விளக்கி முடித்ததும் உடனே அந்த பாட்டுக்கான பல்லவியை அவரே சொல்லி விடுகிறார். அதற்கு பின்னர்தான் கவிஞர்களை அழைத்து இந்த கருத்து பாடல் எழுத வேண்டும் என்கிறார். பாடலாசிரியர்களிடம் அவர் விளக்கி சொல்வதைப் பார்த்தால் இயக்குநர்களே ஆச்சரியமாவார்கள்.
வெற்றிவெற்றி பெற வாழ்த்துக்கள்