ஓவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு சம்பவம் நம்மை உலுக்கிப் போட்டிருக்கும் அப்படி தனுஷ் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அழகான கவிதையாகவும், படமாகவும் எடுத்திருக்கிறார்.
கிராமத்தில் சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவநேசன் கேட்டரிங் படித்து முடிக்கும் அவரது மகன் முருகன், வெளிநாட்டில் பெரும் பணக்காரரான விஷ்ணு வர்தனின் ஃபைவ் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டில் வேலைக்கு சேர்கிறார். இங்கு அவரது திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன. இது விஷ்ணுவர்தனின் மகன் அஸ்வினுக்கு -க்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. முருகனின் மீது காதல் வயப்படும் தனது இளைய மகள் மீராவுக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறார் விஷ்ணு வர்தன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். எனினும் ஒரு மரணத்தால் ஹீரோ எடுக்கும் முடிவு அஸ்வினுக்கு முருகனின் மீது பகையை ஏற்படுத்துகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இட்லி கடை படத்தின் திரைக்கதை.
தனுஷ் கிராமத்து இளைஞனாக, நகரத்து பின்னணி வாலிபராகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அப்பாவின் இட்லி கடை பாசம், கிராமத்து மனிதர்களின் உறவுகள் என்று உணர்ச்சிப் பூர்வமான காட்சிகளில் அசத்தியிருக்கிறார் தனுஷ்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல்வேறு காட்சிகளில் வெற்றிகரமாக ஜொலிக்கிறார். கிராமத்து வாழ்க்கையை இடலி கடையை பின்னணியாக வைத்து வெற்றி பெற்றவர் பெரிய தொழிலபதிபரிடம் வேலை பார்க்கும் அந்த இளைஞர் பாத்திரமும் அதன் பின்னணியையை ஒட்ட வைக்க முடியவில்லை.
அருண் விஜய்யை பாராட்டியே ஆக வேண்டும். தனி கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நெகடிவ் சாயல் உள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறைவில்லாமல் பாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
ராஜ்கிரண் கிராமத்து மனிதராக வாழ்க்கையை அழகாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அந்த எபிஷோட்ஸ் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. அதையே இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கலாமோ என்கிற ஏக்கத்தை கொடுத்திருப்பது இயக்குனராக தனுஷ் வெற்றி பெற்றதையே காட்டுகிறது.
பெரும் கோடீஸ்வரராக சத்யராஜ், ஷாலினி பாண்டே மிடுக்காக வருகிறார்கள். கிராமத்திற்குள் அவர்கள் காலடி வைக்கும் காட்சிகள் ஏனோ தானோ என்று படமாக்கப்பட்டிருக்கிறது. இது படத்தை ஒட்ட வைக்க உதவவில்லை.
வசனத்திலும், காட்சியமைப்பிலும் இயக்குனராக தனுஷ் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார். இடைவேளைக்குப் பிறகு படம் திரைக்கதையில் தடுமாற்றத்துடன் செல்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் சுகம். அதுவும் இரண்டாப் பாதியில் வரும் பாடல் ஆட்டம் போட வைக்கும் ரிதம். கிரண் கவுஸிக்கின் ஒளிப்பத்திவு சிறப்பாக இருக்கிறது. கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்தது அழகினும் அழகு.
குடும்பத்தினரோடு பார்க்கலாம்.