இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மகன் யுவராஜ் சிங்குக்கு எதிராக செயல்பட்டதாக யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர்ர் யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங். பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான யோக்ராஜ் சிங், ஒரு கட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடிக்க போராடினார். ஆனால் அப்போது அவருக்கு பதில் கபில்தேவ் அந்த வாய்ப்பை கைப்பற்றினார். அப்போது மண்டல வாரியாக வீரர்கள் தேர்வு நடந்தது. வடக்கு மண்டலத்தில் இருந்து ஒரு வேகப்பந்து வீச்சாளரைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் அந்த ஒரு வாய்ப்பு கபில்தேவுக்கு கிடைத்தது. பிற்காலத்தில் கபில்தேவ் இந்தியாவின் கேப்டனாக, யோக்ராஜின் கிரிக்கெட் கனவு தகர்ந்தது.
இதனால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த யோக்ராஜ் சிங், பின்னர் தனது மனதை மாற்றிக்கொண்டார். தன்னால் சாதிக்க முடியாததை, தன் மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று வைராக்கியம் பூண்டார். தனது மகன் யுவராஜ் சிங்குக்கு மிக தீவிரமாக கிரிக்கெட் பயிற்சி அளித்தார். அவரும் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக உருவானார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளரான யுவராஜ் சிங், 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி சாதனை படைத்தார். அந்த தொடர் முழுக்க சிறப்பாக ஆடிய அவர், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரின் நாயகன் விருதையும் வென்றார்.,
இருப்பினும் அந்த தொடரில் யுவராஜ் சிங்கை விட்டு, தோனியை இந்தியாவின் கேப்டனாக நியமித்ததை யுவராஜ் சிங்கின் அப்பா யோக்ராஜ் சிங் அப்போதே விமர்சித்தார். அன்றில் இருந்து அவர் தொடர்ச்சியாக தோனியை விமர்சித்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனியும், யுவராஜ் சிங்கும் விலகிய பிறகும் அவரது கோபம் நீடிக்கிறது.
இந்த சூழலில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் யோக்ராஜ் சிங் கூறியிருப்பதாவது:
நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் தனது முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும். தோனி மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்தான். ஆனால், அவர் எனது மகனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார். தற்போது அதுதொடர்பான எல்லா விஷயங்களும் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதை என் வாழ்க்கையில் மன்னிக்கவே முடியாது.
இரண்டு விஷயங்களை நான் என் வாழ்க்கையில் செய்யமாட்டேன். ஒன்று, எனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர்களை அணைக்கவும் மாட்டேன். அது எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி. அல்லது என் குழந்தைகளாக இருந்தாலும் சரி.
தோனி எனது மகன் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையையே அழித்து விட்டார். யுவராஜ் இன்னும் ஒரு 4 அல்லது 5 ஆண்டுகள் விளையாடி இருப்பார். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக் கூட இதற்கு முன் ஒரு பேட்டியில் இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார் எனக் கூறி இருந்தார்கள். ஆனால் தோனி அவர் தொடர்ந்து ஆட ஒரு கேப்டனாக வாய்ப்பு வழங்கவில்லை.