No menu items!

திருமண விழாக்களை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் – மு.க. ஸ்டாலின்

திருமண விழாக்களை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் – மு.க. ஸ்டாலின்

2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் “இவ்வாண்டு 1,000 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்“ என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை (ஜூலை 2) 32 இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள், பூஜை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில்கள் சார்பில் இன்றைய தினம் முதற்கட்டமாக, 576 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் இந்த இனிய திருமண விழாக்களை நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று எனக்கு பத்து நாளைக்கு முன்னால், என்னிடத்தில் ஒப்புதல் பெற்று இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசுத் துறைகளைப் பொறுத்தவரைக்கும், எந்தத்துறையில் நான் அதிகமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றால், இந்த அறநிலையத் துறையில் தான் அதிகமாக கலந்து கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் பணியின் காரணமாக பல நிகழ்ச்சிகளுக்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாத காரணத்தினால் முதலமைச்சர் அறைக்கு அருகிலேயே செய்தியாளர் சந்திப்பு அறை இருக்கிறது. அந்த அறையில் காணொளி காட்சியின் மூலமாக சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுண்டு. அந்த நிகழ்ச்சியில் கணக்கெடுத்துப் பார்த்தாலும், இந்தத் துறைதான் முதலிடத்தில் நிற்கிறது.

அதே நேரத்தில் “அறநிலையத் துறை சார்பில், இந்த நான்காண்டுகளில் எத்தனை திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது” என்று நானே சேகர்பாபுவிடம் கேட்டேன். 1,800 என்று அவர் சொன்னார். இன்றைக்கு மட்டும் 576 திருமணங்கள். எந்த விபரத்தைப் பற்றி கேட்டாலும் அவர் ஆயிரத்தைத் தாண்டிதான் சொல்கிறார். மொத்தத்தில் 2,376 திருமணங்களை நடத்தி, அந்த குடும்பங்களை இன்றைக்கு ஒளியேற்றி வைத்திருக்கக்கூடிய துறைதான் சேகர்பாபு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய அறநிலையத் துறை! என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த 2376 திருமணங்களில் 150 திருமணங்களை நானே தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறேன்.

நம்முடைய திராவிட மாடல் அரசில், இந்து சமய அறநிலையத் துறை மகத்தான வளர்ச்சியை கண்டிருக்கிறது! அதற்காக நேரம் காலம் பார்க்காமல், ஆன்மீக அன்பர்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், அடியாருக்கு அடியார் போல் உழைத்துகொண்டிருக்கிறார் நம்முடைய சேகர்பாபு. அதனால்தான், பக்தர்கள் போற்றும் அரசாக தொடர்ந்து சாதனை படைத்துக்கொண்டு இருக்கிறோம்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டிருக்கும் சாதனைகளில் முக்கியமானவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு, மூன்றாயிரத்து 177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். சாதனையில் சாதனையாக புகழ்மகுடத்தில் வைரமாக இருக்கக்கூடிய சாதனை இந்த சாதனை.

அடுத்து, 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.7 ஆயிரத்து 701 கோடி மதிப்பீட்டிலான 7 ஆயிரத்து 655.75 ஏக்கர் நிலங்களை மீட்டிருக்கிறோம். இதோடு, 2 லட்சத்து 3 ஆயிரத்து 444 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 ஆயிரம் திருப்பணிகள், 12 ஆயிரத்து 876 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள மாநில ஆலோசனைக்குழு அனுமதி, ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை, தொன்மை மாறாமல் புனரமைத்து பாதுகாக்கும் வகையில், ரூ.425 கோடி மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள 5 ஆயிரம் கோயில்கள் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள 5 ஆயிரம் கோயில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி, ஆடி மாதத்தில், அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்களை, கட்டணமில்லாமல் ஆன்மீகப் பயணமாக அழைத்து சென்றிருக்கிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை செயல்படுத்தி, இதுவரைக்கும் 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணிநியமன ஆணை, 12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை, அன்னைத் தமிழில் வழிபாடு செய்யும் திட்டத்தை 295  திருக்கோயில்களில் செயல்படுத்தியிருக்கிறோம்.

ஒருகால பூஜைத் திட்டத்தில் பயன்பெற்று வந்த திருக்கோயில்களின் வைப்பு நிதி, ஒரு லட்சத்திலிருந்து, 2 லட்சமாகவும், இப்போது, 2 இலட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு, 18 ஆயிரம் திருக்கோயில்கள் பயன்பெற்று வருகிறது.

இந்த திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் தலா ரூ.10 ஆயிரம் வீதம் 900 மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறோம்.

அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் நலன் காக்கும் வகையில், அவர்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள், குடியிருப்புகள், பொங்கல் கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஆண்டுதோறும் முழு உடற்பரிசோதனைத் திட்டம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் பொங்கல் கருணைத் தொகை என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்.

30 திருக்கோயில்களில், நாள் முழுவதும் திருவமுது வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வு வழங்கப்பட்டு, 935 நபர்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த 1,342 பணியாளர்கள், பணி வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளனர்.  இந்த வரிசையில்தான் இதுவரைக்கும் 2376 திருமணங்களை, கட்டணமில்லாமல், சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி நடத்தி வைத்திருக்கிறோம்.

எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்துடன், நம்முடைய திராவிட மாடல் அரசு செய்யும் இதுபோன்ற சாதனைகளை, வெறுப்பையும் – சமூகத்தை பிளவுப்படுத்தும் எண்ணங்களையும் கொண்டவர்களாக இருக்கக்கூடியவர்கள் இதைப் பார்த்து சகித்துக் கொள்ள முடியவில்லை. பக்தி என்ற பெயரில் பகல்வேஷம் போடுகின்றவர்களால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையான பக்தர்கள், நம்முடைய ஆட்சியின் ஆன்மீகத் தொண்டை பாராட்டுகிறார்கள்.

ஆதரவற்ற அவதூறுகளைப் பற்றி நாம் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. என்னுடைய பணி மக்கள் பணி, என்ன தேவை என்பதை புரிந்து, அறிந்து அதற்குரிய பணியை ஆற்றுவதுதான் என்னுடைய பணி. இதையெல்லாம் நான் பார்த்து கவலைப்படுகிறேன் என்று தயவுசெய்து யாரும் நினைக்கவேண்டாம். இவைகளெல்லாம் எனக்கு ஊக்கம்; இவைகளெல்லாம் எனக்கு உற்சாகம். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள் – கிண்டல் செய்யுங்கள் – கொச்சைப்படுத்துங்கள் – விமர்சனம் செய்யுங்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நாங்கள் தயாராக இல்லை.

திருநாவுக்கரசர் மொழியைக்கேற்ப, “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று நாம் தொடர்ந்து, உண்மையான பக்தர்களின் நலனுக்காக செயல்படுவோம் என்று அந்த உணர்வோடு, இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை நான் வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து வளங்களும் பெற்று மணமக்கள் சிறப்பாக வாழ்ந்திடவேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மையோடு நீங்கள் வாழ்ந்திடவேண்டும். இன்பமான வாழ்க்கை வாழுங்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள். என்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். இதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.! அந்த வேண்டுகோளை நிறைவேற்றக்கூடிய வகையில், நம்முடைய புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய, வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய் வாழுங்கள் என்று வாழ்த்தினார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞானபாலய சுவாமிகள், திருவண்ணாமலை ஸ்ரீனந்தல் மடாலய ஆதீனம் தவத்திரு ஆதி சிவலிங்காச்சார்ய குரு சுவாமிகள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் த.வேலு, தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், ஜெ. கருணாநிதி, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் எம்.மகேஷ்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...