தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா தொடர்பாக அதிமுக அரசியல் பேசுவது வேதனையாக உள்ளது. தமிழ்நாட்டில் எது செய்தாலும் அரசியலாகவே பார்க்கப்படுகிறது. நாங்களும், திமுகவும் எதிரும் புதிருமான சித்தாந்ததில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் பெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரும், ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான கலைஞரின் நாணயம் வெளியிட்டதில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நாங்கள் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு எம்ஜிஆர் நாணயம் வெளியிட அதிமுக அரசு கோரிக்கைவைத்த போது மத்திய அரசு அனுமதி வழஙகியது. இரண்டு ஆண்டுகள் கழித்து விழாவை நடத்தினார்கள். மத்திய அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. 2017ஆம் ஆண்டு கலைஞர உடல் நலம் குன்றியிருந்தபோது அவரது உடல்நிலை குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். நாங்க எதிரும் புதிருமாக இருந்தாலும், ஒரு தலைவரை மதிப்பதை அரசியல் நாகரிகமாக கருதுகிறோம். கலைஞருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விரும்பும் போது அதற்கு தமிழக பாஜக சார்பில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது கடமையாகும்.
ஆனால் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசையும் பாஜகவையும் எடப்பாடி பழனிசாமி குறைகூறுகிறார். கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடத்தியதைப்போல, ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்த அதிமுக விரும்பினால் அனுமதி தரப்படும். நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆர். நாணயத்தை இவர்களே வெளியிட்டு கொண்டது ஒரு பெருமையா?குடியரசு தலைவர் வெளியிட்டு அதை பிரதமர் வாங்கி இருக்க வேண்டும். அது தான் அவருக்கு பெருமை. தி.மு.க. அதை சரியாக பயன்படுத்தி கொண்டது.
கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா மாநில அரசு நடத்திய விழா ஆகும். மத்திய அரசு சார்பில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும்போது அவருடன் கருணாநிதிக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தவே நிகழ்ச்சியில் பங்கேற்றேன்
ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சித்தாந்த ரீதியாக திமுக, பாஜ.,வுக்கு வித்தியாசங்கள் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளுக்காக விவசாயியின் மகனாக கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிடு போட்டதை பெருமையாகத்தான் பார்க்கிறேன்.
வாஜ்பாய் உடனும் அவர்கள் கூட்டணி அமைத்திருந்தனர். பா.ஜ., பற்றி தவறான பிரசாரம் தமிழகத்தில் பரப்பப்படுவதாக அப்போது கருணாநிதி கூறியிருந்தார். என் வயதைவிட அவருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. எத்தனை இடங்களில் கருத்து வேறுபாடுகளை நான் வெளிப்படுத்தினாலும், அவரது 100வது ஆண்டில் அவருக்கு மரியாதை செய்வதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவிடமும் சென்றுள்ளேன். அதேபோல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடமும் செல்வேன். தமிழகத்திற்காக பணியாற்றியவர்களை பார்க்கக்கூடாது என சொல்வது தவறு. நான் யார் காலிலும் விழவில்லை; கூனிகுருகி நிற்கவில்லை; மூன்றடி தள்ளி நிற்கவில்லை. கம்பீரமாக நிமிர்ந்து சென்று, முதுகெலும்பு வளையாமல் சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வந்துள்ளேன்; அதற்காக பெருமைப்படுகிறேன்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எனக்கு அனுபவம் இல்லை எனப் பேசியுள்ளார். கருணாநிதிக்கு கும்பிடு போடுவது தவறில்லை. பன்முகத் திறன் கொண்ட கருணாநிதியை கும்பிட்டதில் எந்த தவறும் இல்லை. ஒருவரது காலில் விழுவது தான் தவறு. முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சசிகலா முன்பு எவ்வாறு நிற்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையில் நான் தரகர் என பழனிசாமி கூறுகிறார். கள்ள உறவு என்று கொச்சையான வார்த்தையை தெரிவித்துள்ளார். ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதி போன்று, அவரது பேச்சு இல்லை. பாஜக கூட்டணி மாமன், மச்சான் கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதிமுக, திமுக பாஜக பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் – மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் – மச்சான் தான். அவர் மாமன் – மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்.
திமுகவை எதிர்க்கிற ஒரே அரசியல் கட்சி பாஜக தான். மக்கள் எல்லோரும் எங்களை விரும்புகின்றனர்; பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என நினைக்கின்றனர். எந்த பங்காளியுடனும் போகப்போவதில்லை. 2024ல் பா.ஜ.,வின் கூட்டணி மக்கள் முன்பு அற்புதமாக நிற்கின்றது. கூட்டாட்சி என சொல்லியாச்சு; பங்காளி என சொல்வதை விட எங்கள் கூட்டணி மாமன் – மச்சான் கூட்டணி. பங்காளிகள் வேண்டாம். அக்கா, தங்கை, மாமன், மச்சான் என எல்லோரும் இணைந்து தமிழகத்தை வளப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கின்றது.
மாமன் – மச்சான் கூட்டணி என்றால் வேற்றுமையில் ஒற்றுமை. அதில் ஜாதி, மதம், இனம் கிடையாது. அதுவே பங்காளி என்றால் ஒரே இனம். எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம். 2026 தேர்தலில் அரசியல் களத்தை இந்த மாமன் – மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.