No menu items!

ஓட்டல் வேலை to ஆசிய போட்டிகளில் பதக்கம்

ஓட்டல் வேலை to ஆசிய போட்டிகளில் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முன் எப்போதும் இல்லாதபடி 107 பதக்கங்களை அள்ளி வந்திருக்கிறது இந்தியா. இதில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலப் பதக்கங்கள் அடங்கியுள்ளன. இந்த ஆசிய விளையாட்டில் இந்தியா வென்ற தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைவிட அதிக அளவில் கவனம் பெற்றிருக்கிறது கலப்பு இரட்டையருக்கான 35 கிலோமீட்டர் நடைபயணத்தில் வென்ற வெண்கலப் பதக்கம். இந்த பதக்கத்தை வென்றவர்கள் ராம்பாபு என்ற 26 வயது இளைஞரும், மஞ்சு ராணி என்ற வீராங்கனையும்.

தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைவிட ராம்பாபுவும் மஞ்சு ராணியும்  வென்ற வெண்கலப் பதக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததா என்று கேட்கிறீர்களா? இந்த இருவரில் ராம் பாபு வளர்ந்த சூழலை வைத்துப் பார்த்தால், அவர் வென்ற வெண்கலப் பதக்கம் 10 தங்கப் பதக்கங்களுக்கு இணையானது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பகுவாரா என்ற கிராமத்தில் பிறந்தவர் ராம் பாபு.  அவரது அப்பா ஒரு விவசாயக் கூலி. வருடத்தில் சில மாதங்கள் மட்டும்தான் அவருக்கு வேலை இருக்கும். அப்படி வேலை இருக்கும் மாதங்களிலும் 3 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம்.  அதை வைத்துதான் வீட்டில் உள்ள 6 பேர் சாப்பிட வேண்டும்.  பாதி மாதங்கள் வீட்டில் சும்மாத்தான் இருப்பார். அந்த காலகட்டத்தில் 100 நாள் வேலை திட்டம்தான் அவர்களுக்கு சோறு போட்டது. இந்த வறுமையான சூழலில்தான் ராம்பாபுவுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

ஏதாவது ஒரு விளையாட்டில் தான் சாதிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். ஆனால் கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் என எல்லா விளையாட்டுகளிலும் ஏதாவது சில உபகரணங்களை வாங்க வேண்டி இருந்த்து. ஆனால் அதற்கான காசு ராம்பாபுவிடம் இல்லை. இந்த நேரத்தில்தான் செலவே இல்லாத நடைப்போட்டியில் ஈடுபட்டால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் பேருந்து வசதிகள் அதிகம் இல்லாததால், நடந்து பழக்கப்பட்டவர் அதே பிரிவில் விளையாட்டு வீர்ராக விரும்பியிருக்கிறார்.

அதனாலேயே 6-ம் வகுப்பில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் சேர்ந்திருக்கிறார் ராம் பாபு. அங்கு 2 ஆண்டுகள் படித்த நிலையில் படிப்பில் தன்னால் அவ்வ்வளக சோபிக்க முடியாது என்று உணர்ந்த ராம் பாபு, முழுக்க முழுக்க விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பியிருக்கிறார். ஆரம்பத்தில் அதற்குரிய வசதிகளோ, பயிற்சி மையங்களோ  இல்லாததால், முகநூல் பக்கத்தில் விளையாட்டு பயிற்சி தொடர்பான குழுக்களில் சேர்ந்து அடிப்படைப் பயிற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

தன் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கும் ராம்பாபு, “எங்கள் ஊரில் சரியான விளையாட்டு மைதானம் இல்லை என்பதால் நான் என் 17 வயதில் வாரணாசிக்கு சென்றேன். அங்கு சந்திரபவன் யாதவ் என்ற பயிற்சியாளரை சந்தித்து, எனக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டேன். அவரும் அதற்கு சம்மதித்தார். உள்ளூரில் நான் தங்குவதற்காக 1,500 ரூபாய் செலவில் ஒரு அறையையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

என் அப்பாவுக்கு மாதம் 3000 ரூபாய்க்கு மேல் சம்பாத்தியம் கிடையாது என்பதால் அவரிடம் விளையாட்டு பயிற்சிக்கு பணம் பெற முடியவில்லை. அதனால் நான் உள்ளூரில் ஓட்டல் சப்ளையராக வேலை பார்த்தேன். பயிற்சி இல்லாத நாட்களில் நான் ஊருக்கு வந்து அப்பாவுடன் சேர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டேன். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து நான் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டேன்” என்கிறார் ராம்பாபு.

2021 ஆண்டில் நடந்த தேசிய அளவிலான 50 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நடைப் பந்தயங்களில் ராம் பாபு தங்கப் பதக்கங்களை வெல்ல, அவர் மீது விளையாட்டு மேம்பாட்டு துறையின் கவனம் பதிந்துள்ளது. அதே ஆண்டில் பெங்களூருவில் நடக்கும் பயிற்சி முகாமில் பங்கேற்க ராம் பாபு அழைக்கப்பட்டார். இந்திய ராணுவத்திலும் அவருக்கு வேலை கிடைத்தது.

இப்போது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றதால், அவர் மேலும் கவனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால் ராம்பாபுவின் இப்போதைய கவனம் எல்லாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான்.

அவரது கடும் உழைப்புக்கு அங்கும் வெற்றி கிடைக்கும் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...