பில்கிஸ் பானுவின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததை உச்ச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்லது. இதன்மூலம் அவர்கள் 11 பேரும் மீண்டும் சிறை செல்லவுள்ளனர்.
பில்கிஸ் பானு வழக்கின் பின்னணி
2002 குஜராத் கலவரத்தின்போது, அகமதாபாத்துக்கு அருகில் இருக்கும் ரந்திக்பூர் கிராமத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 11 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின்போது அவரது 3 வயது மகளும் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர். பில்கிஸ் பானுவுக்குக் கொலை மிரட்டல்களும் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத பில்கிஸ் பானு, தனக்கு நியாயம் கிடைக்க தொடர்ந்து போராடினார். மனித உரிமை ஆர்வலர்கள் பலர் அவருக்கு துணையாக இருந்தனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. 2008-ம் ஆண்டில் வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலை செய்த குஜராத் அரசு
14 ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் சிறையில் இருந்த நிலையில், 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ், குஜராத் அரசு அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கியது. இதையடுத்து 11 பேரும் கடந்த 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. 11 பேருக்கும் குஜராத் அரசு தண்டனைக் குறைப்பு வழங்கியதற்கு எதிராக பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர் சுபாஷினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லோல், லக்னோ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரூப் ரேகா வர்மா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:
விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ” குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், அம்மாநில அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்” என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் மீண்டு சிறைக்குச் செல்வது உறுதியாகி உள்ளது.