ஆளுநர் உரைக்கு முன் தேசிய கீதம் பாடப்படாததை கண்டித்து சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. இது அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை ஆகும். இதன்படி உரை நிகழ்த்துவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை சட்டப்பேரவைக்கு வந்தார்.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய கீதம் பாட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால் ஆளுநர் உரைக்கு பிறகே தேசிய கீதம் பாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிருப்தி தெரிவித்து, தனது உரையைப் படிக்காமலேயே ஆளுனர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சபாயாகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.
அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
இதைத்தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. ஆளுநர் பதவிக்கு எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை. முந்தைய ஆண்டுகளைப் போல இம்முறையும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் சென்றிருக்கிறார்.
ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என பேரவைத் தலைவர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தை ஆளுநர் கூறி வெளியேறி இருக்கிறார். தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மிகுந்த மரியாதை கொண்டுள்ளது” என்றார்.
ஆளுநர் மாளிகை விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் பாரதத்தின் அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பில் வகுக்கப்பட்டுள்ள முதலாவது அடிப்படைக் கடமையாகும். அது அனைத்து சட்டப்பேரவைகளிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடப்படுகிறது.
இன்று ஆளுநர் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் பேரவையிடம் அதன் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக முதலமைச்சர், சட்டப்பேரவை சபாநாயகர் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.
இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அப்பட்டமாக அவமதிக்கும் செயல்களுக்கு உடந்தையாக இருந்து விடக்கூடாது என்பதால் ஆளுநர் கடும் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம்
முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்திருந்த அதிமுக எம்எல்ஏக்கள், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை முன்வைத்து ‘யார் அந்த சார்?’ பேட்ஜ் அணிந்து, கையில் பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவை வெளியே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “கவர்னர் புறக்கணித்துச் செல்லவில்லை. அவர் உரையாற்றக் கூடாதென்று திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். கவர்னர் உரை காற்றடித்த பலூன்போன்று இருப்பதை தவிர உள்ளே முக்கியமான கருத்து எதுவும் இல்லை. கவர்னர் உரையில் தி.மு.க. அரசு சுய விளம்பரம் தேடி உள்ளது. 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லை. பேசியதையே பேசுகிறது திமுக அரசு” என்றார்