டொவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரில்லர் படம் “ஐடென்டிட்டி”. இப்படத்தை அகில் இயக்கியிருந்தார். தமிழகத்திலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், சென்னையில் படம் குறித்து டொவினோ, திரிஷா, இயக்குனர் அகில் ஆகியோர் பேசினர்.
இயக்குனர் அகில் பேசும்போது, “தமிழ்நாட்டிலும் எங்கள் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு நாளும் கலெக்சன் உயர்ந்து வருகிறது. ஒன்றரை வருடம் கஷ்டப்பட்டு கதை, ஆக்சன் காட்சிகள் எடுத்தோம். அதை ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் டொவினோ தாமஸ் பேசும்போது, “2020-ம் ஆண்டில் இருந்து இந்த படத்துக்காக உழைத்தோம். இது சீரியஸ் கதை என்றாலும், ஷூட்டிங் ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. என்னுடைய எந்தப்படம் தமிழில் வெளியானாலும், தமிழ் ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு தருகிறார்கள். இன்னும் நல்ல தமிழ்ப்படங்களைத் தொடர்ந்து தருவேன். மலையாள படங்களுக்கு சமீபத்தில் தமிழ்நாட்டில் வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி.
என் படம் 100 கோடி, ஆயிரம் கோடி வசூலிக்க வேண்டும் என்பது பற்றி யோசிப்பது இல்லை. அது தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பது, என் படங்கள் ஓட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே தமிழ் பார்ப்பேன். கேரளாவில் அனைத்து மொழி படங்களும் ஓடுகிறது. அந்த பாணி தமிழகத்திலும் வருகிறது. கொரானாவுக்குபின் மொழி ரீதியான பாகுபாடு குறைந்து, இந்தியன் படங்கள் என்ற புது விஷயம் உருவாகி உள்ளது’’ என்றார்.
நடிகை திரிஷா பேசும்போது, ‘‘நான் மீடியாவை சென்னையில் தமிழ்ப் படங்களுக்காகச் சந்தித்துள்ளேன், முதல் முறையாக, ஒரு மலையாளப் படத்திற்காக சந்திக்கிறேன். பொதுவாகவே மலையாளப்படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக உள்ளது. இதை நான் நிறைய முறை சொல்லியுள்ளேன், எனக்கு மலையாளப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். நிறைய மரியாதை உள்ளது. வருடத்திற்கு ஒரு மலையாளப் படம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து இருந்தேன். அந்த நேரத்தில் இந்த வாய்ப்பு வந்தது. ஐடென்டிட்டி டீமிற்கு மிகப்பெரிய நன்றி.
மிக புத்திசாலித்தனமான திரைக்கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குனர் அகில் கதை சொன்ன விதமே பிரமாதமாக இருந்தது. டொவினோ பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம். அகில் சிரித்துக் கொண்டே இருந்தாலும் மிக சீரியஸாக வேலை செய்வார்.இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது.