தங்கம் விலை கடந்த 8 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?’ இந்த வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்குமா? தங்கம் வாங்குபவர்கள் காத்திருக்கலாமா அல்லது இப்போதே வாங்குவது சிறந்ததா?
தங்கம் விலை வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
சர்வதேச சந்தை காரணமாக 8 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சி 4 நாட்கள் இருந்தது. இந்நிலையில், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தில். அதில் அவர் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பால் தங்கம் விலை இன்னும் வேகமாகவும் அதிரடியாகவும் குறையத் தொடங்கியது.
கடந்த 8 நாட்களில் ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை 3920 ரூபாய் குறைந்திருக்கிறது. இந்த வீழ்ச்சியை பயன்படுத்திக்கொள்ள நாடு முழுவதும் மக்கள் புறப்பட்டதன் விளைவு, ஒவ்வொரு நகைக் கடையும் திருவிழா போல காட்சி அளிக்கிறது. அடுத்த சில மாதத்தில் திருமண சீசனும் பண்டிகை காலமும் தொடங்க உள்ளதும் இதற்கு காரணம்.
தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் பங்குச்சந்தையிலும் நகைக் கடை பங்குகள் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒரே நாளில் 13.3%, 1.5 வருடத்தில் 401% அதிக லாபம்.
தங்கம் விலை தொடர்ந்து குறையுமா?
‘அமெரிக்கப் பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 2.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மார்ச் காலாண்டின் 1.4 சதவீத வளர்ச்சியை ஒப்பிடும் போது பெரும் வளர்ச்சியாகும். இதேபோல் அமெரிக்காவின் நுகர்வோர் செலவின குறியீடான PCE Price Index 3.7 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் மக்களுக்கு பாதுகாப்பான முதலீடுகள் தேவைப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.
அமெரிக்கப் பொருளாதார தரவுகள் தங்கம் விலையை மாற்றக்கூடிய திறன் கொண்டது. எனவே, மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் காரணமாக தங்கம் மீதான டிமாண்ட் குறைந்துகொண்டே வந்து இன்று சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை மந்த நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சரிவும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2 நாட்களாக கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து வந்த நிலையில் இன்று 15 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்த தங்கம் விலை சரிவு இந்த வாரத்துடன் முடிவடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது” என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.
தங்கம் வாங்க எது சரியான நேரம்?
“சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கிட்டத்தட்ட நேற்றைய விலை அளவான 2374 டாலரில் உள்ளது. ஆனால், அமெரிக்க சந்தை வர்த்தக நேரத்தில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சனிக்கிழமையும் இந்திய ரீடைல் சந்தையில் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 150 ரூபாய் குறைந்து 64,150 ரூபாயாக உள்ளது. இதுவே 24 கேரட் தங்கம் விலை 170 ரூபாய் குறைந்து 69,980 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து 51,320 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை சரிவு இந்த வாரத்துடன் முடிவடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், தங்கம் வாங்க திட்டமிடுவோர் இக்காலகட்டத்தைப் பயன்படுத்துவது சரியானதாக இருக்கும்” என்பதுதான் நிதி ஆலோசகர்களின் அட்வைஸாக உள்ளது.