நேரம்காலம் பார்க்காமல் உழைப்பதில் ஜப்பானியர்களை மிஞ்ச முடியாது. பணிச்சுமையால் இரவில் நேரம்கழித்து வீட்டுக்கு செல்வதால் பலராலும் அங்கு சரியாக உறங்க முடியவில்லை. இதனால் பல ஊழியர்கள் மதிய நேரத்தில் சற்று கண்ணயர்வது வழக்கம்.
இந்தச் சூழலில் ஜப்பானைச் சேர்ந்த இடோகி கார்ப், கோயோஜு கோஹன் ஆகிய 2 நிறுவனங்கள் இணைந்து தூங்குவதற்கான பெட்டிகளை வடிவமைத்துள்ளன. 2 அடி அகலம் மற்றும் 6 அடி உயரம் கொண்ட இந்த பெட்டிகளுக்குள் ஊழியர்கள் நின்றுகொண்டே சிறிது நேரம் தூங்க முடியும். ஜப்பானிய அலுவலகங்களில் உள்ள இட நெருக்கடியை மனதில் வைத்து இந்த தூங்கும் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
“ஜப்பானிய அலுவலகங்களில் தூங்குவதற்கு வசதி இல்லாததால், பலர் அங்குள்ள கழிப்பறைகளில் தூங்குகின்றனர். இதனால் மற்ற ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க தூங்கும் பெட்டிகளை வடிவமைத்துள்ளோம்” என்று இடோகி நிறுவனத்தின் இயக்குநரான சீகோ கவாஷிமா தெரிவித்துள்ளார். இதனால் ஜப்பானியர்களின் உழைக்கும் ஆற்றல் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
சூடானா ஐரோப்பா – தவிக்கும் மக்கள்
ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் 40 டிகிரி வெப்பம் என்பது மிகச் சாதாரணமான விஷயம். ஆனால் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு 30 டிகிரி செல்ஷியஸே அதிகபட்ச வெப்பம்தான். இந்த சூழலில் இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் உள்ள பல நகரங்களில் கடந்த திங்கள்கிழமையன்று 43 டிகிரி செல்ஷியஸை தொட்டுள்ளது வெயில்.
பொதுவாக வெயில் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்துவரும் இப்பகுதி மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, வானிலை மேம்படும் வரை பள்ளிகளை மூட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மற்ற சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வெயிலின் தன்மைக்கு ஏற்ப அலுவலக நேரத்தை மாற்றியமைக்கவும் அரசு ஆலோசனை கொடுத்துள்ளது. தேவையில்லாமல் வெயிலில் அலையவேண்டாம் என்று மக்களுக்கு எச்ச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பிரான்ஸ், போர்ச்ச்சுக்கல், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வெப்பத்தால் பல இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்துள்ளனர். இந்த வெப்பத்தை ஒரு மிகப்பெரிய அசுரனாக கருதுவதாக அந்நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர் பிரதேசங்களில் உச்சகட்ட வெயில் அடிப்பதைப் போல், வெயிலையே பார்த்துப் பழகிய நம் ஊரில் குளிர் அடித்தால் நன்றாக இருக்கும்.
90-ஐ எட்டுவாரா நீரஜ் சோப்ரா?
ஜூலை 21-ம் தேதியை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் இந்திய விளையாட்டு ரசிகர்கள். ஈகன் (Eugene) நகரில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நீரஜ் சோப்ரா அன்று ஈட்டி எறியப் போவதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த நீரஜ் சோப்ரா, அதன்பிறகு தனது ஈட்டி எறியும் தூரத்தைக் கூட்டிக்கொண்டே போகிறார். சமீபத்தில் ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த போட்டியில் 89.94 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா, வெறும் 6 சென்டிமீட்டர்களில் 90 மீட்டர் சாதனையை தவறவிட்டார். இந்தச் சூழலில் வரும் 21-ம் தேதி நடக்கும் போட்டியில் இந்த இலக்கை அவர் எட்டுவார் என்று எதிர்பார்க்கிறார்கள் விளையாட்டு ரசிகர்கள்.
ஆனால் இந்த டென்ஷனெல்லாம் நீரஜ் சோப்ராவுக்கு இல்லை. “ஒவ்வொரு போட்டியிலும் 100 சதவீதம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதையே என் முக்கிய இலக்காக கொண்டு செயல்படுகிறேன். மற்றபடி தூரத்தைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை.