No menu items!

கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?

கணேசமூர்த்தி எம்.பி. தற்கொலை ஏன்? தேர்தலில் சீட் கிடைக்காததால் விரக்தியா?

தனது வீட்டில் தென்னை மரங்களுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த பூச்சிக் கொல்லியைப் பருகி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தி இன்று அதிகாலை மரணமடைந்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்த கணேசமூர்த்தி, வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவிலிருந்து மதிமுக வந்த கணேசமூர்த்தி

கணேசமூர்த்தி (வயது 77) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னிமலை குமாரவலசு பகுதியை பூர்வீகமாக கொண்டவர். 1947 ஜூன் 10 அன்று பிறந்தார். அவரது தந்தையின் பெயர் அவிநாசி கவுண்டர், தாயார் சாரதாம்பாள். இவருக்கு பாலாமணி என்று மனைவி இருந்தார். தமிழ் மீது அதிக பற்று கொண்ட அவர், தனது மகளுக்கு தமிழ் பிரியா என்றும், மகனுக்கு கபிலன் என்றும் பெயரிட்டார்.

விவசாயத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் என்ற போதும் தியாகராயர் கல்லூரி பிஏ, பின்னர் சென்னையில் சட்டம் படித்தவர். தியாகராயர் கல்லூரியில் பயிலும் போதிருந்தே மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் கணேசமூர்த்திக்கும் நல்ல நட்பு ஏற்படத் தொடங்கியது. பள்ளி நாட்களிலேயே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட கணேசமூர்த்தி கல்லூரி நாட்களில் அக்கட்சியில் மாநில மாணவர் அணி இணை அமைப்பாளர் ஆனார். பேரறிஞர் அண்ணாவை அடிக்கடி சந்தித்துப் பேசுமளவு நெருங்கிப் பழகிய அபிமானியாக வலம் வந்தார்.

1976இல் அவசரநிலை காலத்தில் தலைவர்களை கைது செய்த சிறையில் அடைத்த போது மாணவர் திமுக சார்பில் தீவிரமாக கழக பணியாற்றினார் கணேசமூர்த்தி. 1984இல் இந்திய அரசியல் சட்ட ஆட்சி மொழி பிரிவு இணைப்பு போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றார்.

1984இல் ஈரோடு மாவட்ட திமுக செயலாளரான கணேசமூர்த்தி, 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எம்.எல்.ஏ. ஆன 2 ஆண்டுகளிலேயே 2 கால்நடை மருத்துவமனைகள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு வேளாண் கிடங்கு ஆகியவற்றை தொடங்க காரணமாக இருந்தார். கீழ்பவானி பாசன பகுதிகள் புஞ்சை பாசனத்திற்கு தண்ணீர் விடும் போது, நஞ்சை பயிர் செய்தால் தண்டத் தீர்வை விதிக்கப்பட்டு வந்தது. அந்த தண்டத் தீர்வையை கடும் சிரத்தை மேற்கொண்டு நீக்கினார். இவை எல்லாம் ஈரோட்டு மக்களுக்கு அவர் மீதும், அவர் பணியின் மீதும் நன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்தது.

1993ஆம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது, அவரது தீவிர ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் பதவியையும் பொருட்படுத்தாமல் திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவில் இணைந்தார். அன்று முதலே மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் வைகோவுக்கு பக்கபலமாகவும் தொடர்ந்து இருந்து வந்தார். தீவிர ஈழ ஆதரவாளரான கணேசமூர்த்தி, பொடா வழக்கிலும் சிறை சென்றுள்ளார். 2002இல் பொடா சட்டத்தில் தனது ஈரோடு இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி, 555 நாட்கள் சிறையில் இருந்தார்.

1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பழநி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட கணேசமூர்த்தி வெற்றிபெற்றார். அதன்பின், 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளகோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 மக்களவை தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட கணேசமூர்த்தி தோல்வி அடைந்தார். 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு இடம்தான் ஒதுக்கப்பட்டது. அந்த ஒரு இடத்தை கணேசமூர்த்திக்கு தான் வைகோ கொடுத்தார். அந்தளவு வைகோவுக்கு மிக நெருக்கமாக இருந்தார் கணேசமூர்த்தி. 2019 தேர்தலில் வெற்றிபெற்றார்.

மூன்று முறை எம்.பி.யாக இருந்துள்ள கணேசமூர்த்தி, கோவை – திருப்பதி மற்றும் ஈரோடு – கோவை மின்சார ரயில்கள் இயங்க முக்கிய காரணமாக இருந்தார். தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய உரிய ஆணை பெற்று தரப்பட்டதிலும் இவரது பங்கும் உண்டு. அதேபோல் தாராபுரத்தில் மூடி கிடந்த கூட்டுறவு நூற்பாலையைத் திறக்க கோரி பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். இந்த பணிகள் மற்றும் தொடர் மக்கள் நலப் போராட்டங்கள் மூலம் கடந்த 30 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் மதிமுகவிற்கென தனிச் செல்வாக்கை உருவாக்கியிருந்தார். வைகோ உள்ளிட்ட மதிமுகவைச் சேர்ந்த அனைவருமே தேர்தலில் தோல்வியுற்றபோதும்கூட, மதிமுக சார்பில் வெற்றிப் பெற்றுக் காட்டியவர் கணேசமூர்த்தி. திமுகவில் இருந்து மதிமுக வந்த பல முன்னணி தலைவர்கள் மதிமுகவில் இருந்து வெளியேறி மீண்டும் திமுகவில் இணைந்தபோதும் கூட கடந்த 30 ஆண்டுகளாக வைகோவின் தீவிர ஆதரவாளராகத்தான் வலம் வந்தார் கணேசமூர்த்தி.

கணேசமூர்த்தி ஏன் தற்கொலை செய்தார்?

மதிமுகவில் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி, 2019 தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிவின்படி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். இதனால், கணேசமூர்த்தி திமுக உறுப்பினராக மாறிவிட்டதால், அவரிடம் இருந்த மதிமுக பொருளாளர் பதவி திரும்ப பெறப்பட்டு செந்திலதிபனிடம் வழங்கப்பட்டது. பொருளாளர் பதவி இல்லாத நிலையில், இந்த முறையும் மதிமுக சார்பில் போட்டியிட தனக்குதான் வைகோ வாய்ப்பு வழங்குவார் என்று கணேசமூர்த்தி எதிர்பார்த்திருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

இதனிடையே, சென்னிமலை முருகன் கோயில் தொடர்பாக இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கணேசமூர்த்தி கருத்து தெரிவிக்காத நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக மதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. தன்னிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறுமாறு வைகோவிடம் கணேசமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். அதற்கு வைகோ மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கணேசமூர்த்தியிடம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வைகோ சரிவர பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, ஈரோடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வைகோவிடம் கணேசமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், திமுக கூட்டணியில் இந்த முறை மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தன்னை தேர்தல் பணியாற்றவாவது வைகோ அழைப்பார் என கணேசமூர்த்தி எதிர்பார்த்து இருந்தார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், திருச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கும் மதிமுக தலைமையிடம் இருந்து கணேசமூர்த்திக்கு அழைப்பு வரவில்லை. `வைகோபோல எனக்கும் துரை வைகோ மகன்தானே… என்னை ஏன்? திருச்சி மாநாட்டுக்கு அழைக்கவில்லை’ என சகாக்களிடம் வேதனை தெரிவித்துள்ளார், கணேசமூர்த்தி. ஆனாலும், விஷம் அருந்தும் முன்பு ஈரோடு திமுக வேட்பாளர் பிரகாஷ் அறிமுகக் கூட்டத்தில் கணேசமூர்த்தி கலந்துகொண்டார்.

இந்நிலையில், மார்ச் 24 அன்று காலையில் கணேசமூர்த்தி திடீரென விஷம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரது வயிற்றின் செரிமான உறுப்புகள் சுத்தம் செய்யப்பட்ட பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது இருதயத் துடிப்பு குறைந்தது. சுயநினைவு இழந்து வந்தார். இதையடுத்து கோவையில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அங்கு செயற்கை இருதய நுரையீரல் செயல்பாடுகளுடன் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.

நான்கு நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், அவரது முக்கிய உடல் உறுப்புக்கள் சீராக செயல்படுவதில் சிக்கல் நீடித்தது. ரத்த அழுத்தம், அவ்வப்போது குறைந்து வந்தது. இதையடுத்து இன்று காலை 05.05 மணிக்கு இருதயம் செயலிழந்து உயிர்பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த கேஎம்சிஎச் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கு என்பதால், ஈரோடு போலீசாரிடம் உடற்கூராய்வுக்காக உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்குப் பின், அவரது சொந்த ஊரான சென்னிமலை குமாரவலசுக்கு இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வாய்ப்பு கொடுக்காததால் தற்கொலையா?

‘கடந்த சில மாதங்களாக மதிமுகவில் தனது முக்கியத்துவம் குறைந்ததுடன், வைகோவும் சரியாக தன்னிடம் பேசுவதில்லை என்ற மன வருத்தத்தில் இருந்த கணேசமூர்த்தி, இந்த தேர்தலில் சீட்டும் மறுக்கப்பட்ட நிலையில் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்’ என்கிறார்கள் கணேசமூர்த்தியின் ஆதரவாளர்கள்.

ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதை மறுத்துள்ளார்.

கோவையில் கணேசமூர்த்தி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு மார்ச் 24ஆம் தேதி வைகோவும் துரை வைகோவும் நேரில் சென்று நலம் விசாரித்தனர். அப்போது, கணேசமூர்த்தியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் என்ன என்று செய்தியாளர்கள் துரை வைகோவிடம் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த அவர், “கணேசமூர்த்தியை சந்தித்த போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவரிடம் பேசினேன். தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காதது குறித்து கணேசமூர்த்தி என்னிடம் எந்த கவலையும் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

இந்நிலையில், கனேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, இன்று கோவை வந்த வைகோ கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது, “சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவிக்கபட்டு இருந்தது. அப்பொழுது இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று என்னிடம் கூறி இருந்தார். ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்றும் சொல்லியிருந்தார்.

நானும் கணேசமூர்த்தியும் உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம். கொள்கையும் லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் கனேசமூர்த்தி. ஆனால், சில நாட்களாகவே அவர் மிகவும் மன அழுத்ததில் இருப்பதாக என்னிடம் ஈரோடு மாவட்ட கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள்.

எம்.பி.சீட் கிடைக்காததால் இறந்தார் என்று பலர் கூறி வருகின்றனர். இதனை நான் ஒரு சதவிகிதம் கூட ஏற்க மாட்டேன். அது உண்மையல்ல” என்று வைகோ கூறினார்.

வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ பின்னால் சென்றவர், வாரிசு அரசியலால் வீழ்த்தப்பட்டுள்ளது துயரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...