இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 83.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1940-ம் ஆண்டு பிறந்தவர் சுந்தர்ராஜன் பத்மநாபன். 1959-ம் ஆண்டு இந்திய ராணுவ அகாடமியில் பட்டம் முடித்த அவர் ராணுவ பீரங்கிப் படைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரி, புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பட்டம் பெற்றுள்ளார். இந்தியா பங்கேற்ற பல்வேறு போர்களில் பீரங்கிப் படையில் பணியாற்றியுள்ளார். ராணுவ வட்டாரத்தில் செல்லமாக ‘பேடி’ என்று அழைக்கப்பட்டார்.
இந்தியாவின் பல்வேறு படைப்பிரிவுகளில் பணியாற்றியுள்ள பத்மநாபன், கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டுவரை இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றியுள்ளார். 43 ஆண்டுகள் பணிக்குப் பிறகு 2002 டிச.31-ம்தேதி ஓய்வு பெற்றார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சென்னையில் வசித்துவந்த அவர், வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
சென்னை அடையாறில் உள்ள பத்மநாபனின் வீட்டில், அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் சார்பில் அமைச்சர் சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, தென்சென்னை எம்.பி., தமிழச்சி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ராணுவத்தின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் ப்ரார் உள்ளிட்ட முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.