No menu items!

கால்பந்து உலகக் கோப்பை: இந்தியாவுக்கு வழி என்ன?

கால்பந்து உலகக் கோப்பை: இந்தியாவுக்கு வழி என்ன?

கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றது அந்நாட்டு ரசிகர்களுக்கு எந்த அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோ, அதே அளவு மகிழ்ச்சியை இந்திய ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. மெஸ்ஸியின் வெற்றியைக் கொண்டாடும் விதமான பதிவுகளை இந்திய விளையாட்டு ரசிகர்களின் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. கேரளாவைச் சேர்ந்த கால்பந்து ரசிகர் ஒருவர், 1,000 பேருக்கு பிரியாணி கொடுத்து அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடி இருக்கிறார்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஒரு நாடான அர்ஜெண்டினா வெற்றி பெற்றதற்கே இந்த அளவு சந்தோஷப்படும் நம் நாட்டு ரசிகர்கள், இந்திய அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றால் எந்த அளவுக்கு சந்தோஷப்படுவார்கள். உலகக் கோப்பையை வெல்லக்கூட வேண்டாம், அப்போட்டியில் பங்கேற்கும் ஒரு அணியாக தேர்வு பெற்றாலே எந்த அளவுக்கு சந்தோஷப்படுவார்கள் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுகிறது.

இப்படி இந்தியர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் வரும் 2026-ம் ஆண்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்கேற்க என்ன செய்ய வேண்டும்?

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரை மொத்தம் 32 அணிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிலை இதுவரை இருந்தது. இதில் ஆசிய அணிகளுக்கு 5 அல்லது 5 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. ஆசிய நாடுகளிடையே தகுதிச் சுற்று போட்டிகளை நடத்தி, அதில் வெல்லும் நான்கைந்து அணிகள் மட்டும் உலகக் கோப்பை கால்பந்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஆனால் அடுத்த முறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 32 அணிகளுக்கு பதிலாக 48 அணிகள் இந்த உலக கோப்பையில் பங்கேற்கலாம். அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவில் இருந்து உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதிபெறும் நாடுகளின் எண்ணிக்கை 8 அல்லது 9-க (ஆஸ்திரேலிய கண்டத்தையும் சேர்த்து) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு வாய்ப்புகள் உள்ளன.

கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை தரவரிசையில் இந்தியா 106-வது இடத்தில் இருக்கிறது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை 19-வது இடத்தில் இருக்கிறது. இந்த தரவரிசையின்படி 2023 நவம்பர் முதல் 2024 ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஆசியாவின் இரண்டாவது சுற்று தகுதிப் போட்டிக்கு இந்தியா நேரடியாக தகுதிபெற முடியும். இந்த தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 36 அணிகள் 9 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். இதில் அதிக புள்ளிகளைப் பெறும் அணிகள் அடுத்த தகுதிச் சுற்றுக்கு முன்னேறும். எனவே இந்த தொடரில் இந்தியா சிறப்பாக ஆடினால்தான் 2026-ல் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆடும் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.

ஆசியாவைப் பொறுத்தவரை ஜப்பான், தென் கொரியா, ஈரான், சவுதி அரேபியா போன்ற அணிகளையெல்லாம் இந்தியா வென்றதில்லை. கடந்த 2018-ம் ஆண்டுமுதல் ஒமான், சிரியா, சீனா போன்ற நாடுகளிடம் இந்திய அணி டிரா செய்ததே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கடந்த காலங்களில் தரவரிசையில் தங்களைவிட கீழே உள்ள தஜிகிஸ்தான், மாலத்தீவு போன்ற அணிகளிடம்கூட இந்தியா தோற்றுள்ளது.

சர்வதேச கால்பந்து போட்டிகளைப் பொறுத்தவரை ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய வீரர்களுக்கு அடுத்ததாக சர்வதேச போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரராக இந்தியாவின் சுனில் சேட்ரி இருக்கிறார். இருந்தபோதிலும், அவருக்கு இணையாக வேறு வீரர்கள் இல்லாததால் இந்திய அணி சர்வதேச அளவில் அதிக வெற்றிகளை குவிக்கவில்லை. அத்துடன் இந்திய கால்பந்து சம்மேளனத்தில் உள்ள கோஷ்டி அரசியலும் இந்திய அணி கால்பந்து விளையாட்டில் முன்னேறாததற்கு காரணமாக இருக்கிறது. இந்த தடைகளையெல்லாம் கடந்து அடுத்த உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அளவுக்காவது இந்திய கால்பந்து அணி முன்னேற வேண்டும் என்பதே ரசிகர்களின் கனவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...