No menu items!

Football Super hero Kylian Mbappe: யார் இந்த கிலியான் பப்பே?

Football Super hero Kylian Mbappe: யார் இந்த கிலியான் பப்பே?

இந்த உலகக் கோப்பை ஃபுட்பால் தொடங்கும்போது மூன்று பேரைதான் ஹீரோவாக கால்பந்து ரசிகர்கள் பார்த்தார்கள்.

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் – இந்த மூன்று பேர் ஆட்டம்தான் ஸ்பெஷலாக இருக்கும் என்று ஆர்வமாய் இருந்தார்கள்.

ஆனால் இப்போது இந்த மூன்று சூப்பர் ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளி இன்னொரு சூப்பர் ஹீரோ உருவாகியிருக்கிறார்.

பிரான்ஸ் வீரர் கிலியான் பப்பே.

டிவில அவர் பேரைப் பார்க்கும்போது சட்டுனு படிக்க முடியாது. Kylian Mbappe என்று எழுதப்பட்டிருக்கும் அந்தப் பெயர்ல வர்ற ‘M’ சைலண்ட். எம்மை எடுத்துட்டோம்னா ஈசியா பப்பே என்று சொல்லிவிடலாம்.

இதுவரை நடந்த ஆட்டங்களில் ஐந்து கோல்கள் அடித்திருக்கும் பப்பே, சூப்பர் ஹீரோக்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டிகளில் அதிக கோல்களை அடிப்பவர்களுக்கு ‘Golden Boot’ என்ற தங்க காலணியை பரிசா கொடுப்பாங்க. இப்ப அந்த ரேசில் முதலில் இருப்பது பப்பேதான். மெஸ்ஸி மூன்று கோல்கள் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மெஸ்ஸியைப் போல இன்னும் சிலரும் மூன்று கோல்கள் அடித்திருக்கிறார்கள்.

இன்று கால்பந்து உலகில் பணக்காரராக இருக்கும் பப்பேயின் ஆரம்ப வாழ்க்கை ஏழ்மையிலும் வறுமையிலும்தான் இருந்தது.

பிரான்ஸ் அணி 1998-ம் ஆண்டில் கால்பந்து உலகக் கோப்பையை வென்றபோது 6 மாத குழந்தை.

செல்வச் செழிப்பான பாரிஸ் நகரிலிருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் புறநகர் பகுதியான போண்டிதான் கிலியனின் பூர்வீகம். ஏழைகள் அதிகமாக வசிக்கும் அந்த பகுதி குற்றச் சம்பவங்களுக்கும், வன்முறைகளுக்கும் பெயர்பெற்றது. அதனாலேயே மற்ற பகுதியில் இருந்து வருபவர்கள், போண்டி பகுதியைச் சேர்ந்தவர்களை கொஞ்சம் ஒதுக்கியே வைப்பார்கள்.

பப்பேயின் அப்பா வில்ஃபிரட் கால்பந்து பயிற்சியாளர். அவரது குடும்பத்தினர் காமரூன் நாட்டு வம்சா வழியைச் சேர்ந்தவர்கள். அம்மா ஃபயாசா லமாரி ஒரு கைப்பந்து பயிற்சியாளர். இப்படி வீட்டிலேயே விளையாட்டு இருந்தது.

இவரது குடும்பத்தினர் அல்ஜீரியா நாட்டு வம்சாவழியினர். பெற்றோர் இருவரும் விளையாட்டுத் துறையில் சிறந்தவர்களாக இருந்ததாலோ என்னவோ பப்பேக்கும் சிறு வயதிலேயே விளையாட்டின் மீது, குறிப்பாக தந்தை பயிற்சியாளராக இருக்கும் கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.

6 வயதிலேயே தந்தையிடம் கால்பந்து பயிற்சிகளை பெறத் தொடங்கினார் பப்பே. 10 வயதுக்குள்ளாகவே உள்ளூர் அணியான ஏ.எஸ்.போண்டியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார். அந்த அணிக்காக பல கோப்பைகளை பப்பே வென்று கொடுத்துள்ளார்.

ஃபுட்பால் மீது பப்பேக்கு ரொம்பவே காதல். தூங்கும்போது கூட படுக்கையில் ஃபுட்பாலை வைத்துக் கொண்டுதான் தூங்குவாராம். 24 மணி நேரமும் அவரது ஒரே சிந்தனை ஃபுட்பால்தான்.

கால்பந்துக்கு அடுத்து அவருக்கு பிடித்த விஷயமாக இசை இருந்துள்ளது. 6 வயதுமுதல் 11 வயது வரை இசைப் பள்ளியில் படித்திருக்கிறார். புல்லாங்குழல் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

16 வயதில் சர்வதேச போட்டிகளில் ஆடத் தொடங்கிய பப்பே, 2018-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார்.

2018 உலகக் கோப்பையில் 4 கோல்களை அடித்தார் பப்பே. அப்போது அவருக்கு வயது 19. மிகச் சிறிய வயதில் உலகக் கோப்பையில் கோல் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற சாதனையையைப் படைத்தார். அத்துடன் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பீலேவுக்கு பிறகு மிக இளம் வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

சின்ன வயதில் வறுமையில் வாடினாலும் கால்பந்து ஆட்டங்கள் மூலம் ஏராளமான கோடிகளை சம்பாதித்திருக்கிறார் பப்பே.

அந்தக் கோடிகளை தானே வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் உதவும் வகையில் பல பணிகளை செய்கிறார்.

2018-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றபோது தனக்கு கிடைத்த மொத்த பரிசுப் பணத்தையும் பிரான்ஸ் நாட்டில் உள்ள ஏழைக்குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செயல்படும் தொண்டு நிறுவனத்துக்கு வழங்கினார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொண்டு நிறுவனங்களின் கால்பந்து அணியில், ஏழைக் குழந்தைகளுடன் இணைந்து விளையாடி இளம் வீரர்களை உற்சாகப்படுத்துவார்.

போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் பப்பேயின் ரோல் மாடல். சிறு வயதில் தனது வீட்டில் அவரது படத்தை ஒட்டி வைத்திருந்திருக்கிறார் பப்பே.

இப்போது அதே ரொனால்டோ, “கால்பந்து உலகின் நிகழ்காலமாகவும், எதிர்காலமாகவும் பப்பே இருக்கிறார்” என்று பப்பேயை பாராட்டி பேசியிருக்கிறார்.

இந்த உலகக் கோப்பை கிலியன் பப்பேயின் உலகக் கோப்பையாக மாறிவிட்டது.

நம் ஊரில் விராட் கோலி எப்படி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று இருக்கிறாரோ, அதேபோல் பிரான்ஸ் நாட்டில் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்ற வீரராக எம்பாபே இருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 2 கோடியே 41 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். பிரான்ஸ் அதிபர் மெக்ரானை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

கால்பந்து மைதானத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய வீரர்களில் ஒருவர் கிலியன் எம்பாபே. 2019-ம் ஆண்டில் மொனாகோவில் நடந்த கால்பந்து போட்டி ஒன்றில் மணிக்கு 38 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை அடித்துக்கொண்டே ஓடி சாதனை படைத்துள்ளார் எம்பாபே. இது உலகின் மிகச்சிறந்த ஓட்ட வீரரான உசேன் போல்ட்டின் வேகத்துக்கு இணையாக கருதப்படுகிறது.

ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதைவிட, கொஞ்சம் கொஞ்சமாக அதிக முறை சாப்பிடும் ஸ்டைல் எம்பாபேயுடையது. நாமெல்லாம் நாளொன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், இவர் அதே உணவை 6 வேளை பிரித்துக்கொண்டு சாப்பிடுகிறார். எம்பாபேவுக்கு மிகவும் பிடித்த உணவு மீன். மற்ற கறிகளை அவர் விரும்பிச் சாப்பிடுவதில்லை.

கால்பந்து வீரர்கள் காட்டில் பணமழைக்கு பஞ்சமில்லை என்பது எம்பாபேவுக்கும் பொருந்தும். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர் எம்பாபேதான் என்கிறது ஃபோர்ப்ச் பத்திரிகை. தங்கள் கால்பந்து கிளப்புக்காக ஆட பிஎஸ்ஜி அணி எம்பாபேவுக்கு வருடம் 1,054 கோடி ரூபாயை கொட்டிக் கொடுக்கிறது. மெஸ்ஸி வாங்கும் சம்பளத்தைவிட இது சுமார் 80 கோடி அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...