பஞ்சாப்பின் இப்போதைய ஹாட் டாபிக் அம்மாநில முதல்வர் பக்வந்த் மானின் திருமணம்தான். ஜுக்னு (இதற்கு மின்மின்மிப் பூச்சி என்று அர்த்தம்) என்று பஞ்சாப் மக்களால் செல்லமாக அழைக்கப்படும் பக்வந்த் மானின் திருமணம் இன்று சண்டிகரில் நடைபெற்றது. எளிய முறையில் இந்த திருமணம் நடந்தாலும், அங்கு நடந்த விசேஷங்களைப் பற்றித்தான் வட இந்திய தொலைக்காட்சிகள் பெரிதாக பேசி வருகின்றன.
சண்டிகரில் உள்ள பக்வந்த் மானின் இல்லத்தில் எளிய முறையில் நடந்த இந்த திருமணத்துக்கு மானின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கோ, பஞ்சாப்பின் முக்கிய தலைவர்களுக்கோ அழைப்பில்லை. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் சில முக்கிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
திருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு இந்திய மற்றும் இத்தாலிய வகை உணவுகள் பரிமாறப்பட்டன. 8 வகை சாலட்கள், 3 வகை பிரியாணி மற்றும் புலாவ்கள், 6 வகை இனிப்புகள், பாயசம், ஐஸ்கிரீம், பாஸ்தா வகைகள் என திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளின் பட்டியல் விருந்தாளிகளை திக்குமுக்காட வைத்தது.
பகவந்த் மானுக்கு பிடித்த நிறம் மஞ்சள். இதனால் அவரது திருமண விழா பந்தலில் பல்வேறு அலங்காரங்களுக்கு மஞ்சள் நிறம்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது. மானும் மஞ்சள் நிற தலைப்பாகையையே அணிந்திருந்தார்.
பக்வந்த் மானுக்கு இது இரண்டாவது திருமணம். முன்னதாக இந்தர்பிரீத் சிங் என்பவரை மான் திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்தில் மானுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
2015-ம் ஆண்டில் மானை விட்டு குழந்தைகளுடன் இந்தர்பிரீத் சிங் கனடாவுக்கு சென்றார். குடும்பத்துக்கு அதிக நேரத்தை செலவிட முடியாததால் மனைவியைப் பிரிந்ததாக மான் சொல்கிறார். அதே நேரத்தில் மானின் குடிப்பழக்கத்தால் அவரது மனைவி பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
மான் மனைவியைப் பிரிந்து தனிமையில் இருப்பதால், அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மானின் தாயார் ஹர்பல் கவுர் நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். அதனால்தான் இந்த திருமணத்துக்கு மான் சம்மதித்துள்ளார்.
பக்வந்த் மானை தற்போது மணந்துள்ள குர்ப்ரீத் கவுர் ஒரு டாக்டர்.
திருமணம் இப்போது நடந்தாலும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக மணமகள் குர்பிரீத்தின் மாமா தெரிவித்துள்ளார். அதனாலேயே பக்வந்த் மானின் பதவியேற்பு விழாவிலும் குர்பிரீத் கவுர் பங்கேற்றுள்ளார்.
இது காதல் திருமணம் அல்ல என்றும் மானின் அம்மா பெண் பார்த்து நடத்திவைக்கும் திருமணம் என்றும், இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்கெனவே நெருக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.