No menu items!

ஃபகத் பாசிலுக்கு ADHD நோய் – என்ன நோய் அது?

ஃபகத் பாசிலுக்கு ADHD நோய் – என்ன நோய் அது?

‘மாமன்னன்’, ‘புஷ்பா’, ‘விக்ரம்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த மலையாள நடிகரான ஃபகத் பாசில், தான் ADHD என்ற கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது திரையுலகில் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள கோதமங்கலம் என்ற ஊரில் பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பேசும்போது ஃபகத் பாசில் இதைக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி கூறிய அவர், “பொது நிகழ்ச்சிகளில் எனக்கு சரியாக பேச வராது. சினிமா டயலாக்குகளை மட்டுமே கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்து பேசுகிறேன். நான் பொது நிகழ்ச்சிகளிலும், பேட்டிகளிலும் சரியாக பேசுவதில்லை என்று என் மனைவியும், அம்மாவும் அடிக்கடி கூறுவார்கள். நான் ADHD பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.

இந்த பள்ளியைச் சுற்றி வரும்போது, ADHD என்ற கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை குணப்படுத்த முடியாதா என்று இங்குள்ளவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், சிறுவயதில் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நோயை குணப்படுத்தலாம் என்றார்கள். ஆனால் எனக்கு 41 வயதில் அப்பிரச்சினை வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். ஃபகத் பாசிலுக்கு இப்போது 41 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபகத் பாசிலின் இந்த பேச்சைத் தொடர்ந்து ADHD என்ற கவனச் சிதறல் நோயைப் பற்றிய பேச்சு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ADHD பற்றி பலரும் இணையதளங்களில் தேடி வருகின்றனர்.

ADHD என்றால் என்ன?

ஏடிஎச்டி என்பது ஒரு நரம்பியல் சம்பந்தப்பட்ட கோளாறு ஆகும். அதிகளவு கவனக்குறைவு அல்லது ஹைபர் ஆக்டிவாக செயல்படுவது இந்த நோயின் அறிகுறிகள். உலக மக்கள் தொகையில் 3 முதல் 9 சதவீத மக்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏடிஎச்டி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிக அளவிலான மன அழுத்தத்தையும், மனக்கவலையையும் உணர்வதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குதான் வரும். அதே நேரத்தில் ஒரு சிலருக்கு வயதான பிறகும் வர வாய்ப்புள்ளது.

ADHD நோயின் அறிகுறிகள்

இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் ஓர் அறையில் இருந்து மற்றொரு அறைக்கு காரணமின்றி சுற்றித் திரிவார்கள்.

தூக்கம் சிறிது நேரம்தான் இருக்கும். பெரும்பாலும் தாமதமாக தூங்கி சீக்கிரம் எழுந்துவிடுவார்கள்.

ஏதேனும் ஒரு வேலை கொடுத்து செய்யச் சொன்னால், அதை முடிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக, ஓர் அறையில் இருக்கும் பொருளை மற்றொரு அறையில் இருக்கும் நபரிடம் கொடுக்கச் சொன்னால், அதை புரிந்து அவர்கள் செய்வார்கள். எனினும் அதற்குள் எக்கச்சக்கமான கவனச்சிதறல்கள் இருக்கும். ஆகையால் 1 நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலைக்குப் பல நிமிடங்களை வீணடிப்பார்கள்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என்றால், விளையாட்டுப் பள்ளி, மான்டிஸரி பள்ளி என விளையாட்டு முறை கல்வியானாலும் கூட இவர்கள் கவனமும், உட்கார்ந்து இருக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும்.

பொது இடங்களைப் பொறுத்தவரை, பூங்கா, விளையாட்டு திடல் போன்ற இடங்களில் முழுமையாக ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

பள்ளி வளாகம், தெருக்கள் போன்று காலி இடங்களைப் பார்த்தால் அங்கு ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

சூப்பர் மார்க்கெட், மால் போன்ற இடங்களுக்குக் கூட்டி சென்றால் பெற்றோர்களுடன் இருக்காமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பார்கள்.

ADHD எதனால் வருகிறது?

ADHD பிரச்சினை எதனால் வருகிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் மரபியல், சுற்றுச்சூழல், சமூக காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் விஷயத்தைப் பொறுத்தவரை கர்ப்ப காலத்தில் தாய் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்றவற்றாலும், பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே பிறக்கும் குழந்தை, எடை குறைவாக பிறக்கும் குழந்தை போன்ற காரணங்களாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...