தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈவிகேஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பல ஆண்டுகள் பதவி வகித்தவர். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த அவரது மகன் திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66,575 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஜூன் ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சிகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சு விட கஷ்டப்படுவதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இளங்கோவன் உடல்நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர் மீண்டும் குணமடைந்து வருவார். வருகின்ற 9 ஆம் தேதி சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் அவர் குரலைக் கேட்ட ஆவலுடன் இருக்கிறோம். மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்புவார். மருத்துவர்களும் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு ஏற்கனவே பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருந்தது. இடையில் அவருக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் தற்போது சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்றார்.