இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தானும் பேசிக்கொள்வதில்லை என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஹர்பஜன் சிங். இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்த காலகட்டத்தில், அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக ஹர்பஜன் சிங் இருந்தார். 2007 மற்றும் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற போட்டித் தொடர்களில் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஹர்பஜன் சிங் இருந்தார். 2007-ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 7 விக்கெட்களையும், 2011-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் 9 விக்கெட்களையும் ஹர்பஜன் சிங் எடுத்துள்ளார்.
இந்திய ஆணிக்காக ஆடியது மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணிக்காக ஹர்பஜன் சிங் ஆடியுள்ளார். இந்த நிலையில் தானும் தோனியும் பேசிக்கொள்வதில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறியதாவது…
நானும் தோனியும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பேசிக்கொள்வதில்லை. இடைப்பட்ட காலத்தில் நானும் தோனியும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடினோம். அந்த காலகட்டத்தில் தேவைப்பட்டால் மட்டும் போட்டிகளின்போது மைதானத்தில் பேசிக்கொள்வோம். ஆனால் போட்டி முடிந்த பிறகு மைதானத்துக்கு வெளியில் பேசிக்கொள்வதில்லை. எங்கள் சண்டைக்கு என்னிடம் எந்த காரணமும் இல்லை. ஆனால் ஒருவேளை அவருக்கு காரணம் இருக்கலாம். அந்த காரணம் என்ன என்று தெரியவில்லை. ஐபிஎல் தொடரின்போது ஒரு முறைகூட அவர் எனது அறைக்கு வந்ததில்லை. நானும் அவரது அறைக்குப் போனதில்லை.
தோனிக்கு என் மீது ஏதாவது கோபம் இருந்தால், அவர் என்னிடம் கூறியிருக்கலாம். ஆனால் அப்படி ஏதும் கூறவில்லை நானும் அவரிடம் போன் செய்து கேட்கவில்லை. நான் போன் செய்து, அவர் அதை எடுக்காவிட்டால் என்ன செய்வது என்பதால் போன் செய்யவில்லை. நான் ஒருவரை மதித்தால், அவரும் என்னை மதிக்க வேண்டும் என்பது என் கொள்கை. நான் ஒருவருக்கு 2 முறை போன் செய்து இரண்டு முறையும் அவர் எடுக்காவிட்டால், அவர் என்னை மதிக்கவில்லை என்பது அர்த்தம்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.