இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20-ம் தேதி உதய்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 29 வயதான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இதைத்தவிர 2019-ல் உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். காமன்வெல்த், ஆசிய போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் ஜூனியர் அளவிலும் பல பட்டங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை சிந்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். திருமணம் உதய்பூரில் நடைபெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சிந்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
“இரு குடும்பங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே நெருக்கம் உள்ளது. ஆனால் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த ஒரு மாதமாகத்தான் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் முதல் சிந்து பல்வேறு பாட்மிண்டன் தொடர்களில் பங்கேற்க உள்ளதால் டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நட்த்த முடிவு செய்தோம்” என்று பி.வி.சிந்துவின் அப்பா பி.வி.ரமணா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பி.வி.சிந்துவும் வங்கட தத்தா சாயும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நட்பாக இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு போட்டிகளின்போது அவர்கள் ஒன்றாக பயணம் செய்துள்ளனர். சில மால்களுக்கும் அவர்கள் இருவரும் ஒன்றாக செறுள்ளது ஏற்கெனவே செய்தியாகி உள்ளது. அதனால் இது காதல் திருமணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
யார் இந்த வெங்கட தத்தா சாய்?
பி.வி.சிந்துவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் வெங்கட தத்தா சாய் போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவரது தந்தை, ஜி.டி. வெங்கடேஷ்வர் ராவ், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்து, இந்திய வருவாய் சேவையில் (ஐஆர்எஸ்) பணிபுரிந்தார். வெங்கட தத்தா சாய் லிபரல் அண்ட் மேனேஜ்மென்ட் கல்வி அறக்கட்டளையில் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸில் டிப்ளமோ முடித்திருக்கிறார். 2018-ல் ஃபிளேம் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் துறையில் BBA முடித்து, அதைத் தொடர்ந்து சர்வதேச தகவல் நிறுவனத்தில் டேடா சயின்ஸ் படித்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்தும் அவர் பணியாற்றியுள்ளார்.