யுனிலிவர் குழுமத்தின் சில ஷாம்பூக்களால் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் உண்டாகும் அபாயம் இருப்பதாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வலைதள பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனால் யுனிலீவர் நிறுவனம் அக்டோபர் 2021 வரை தாங்கள் தயாரித்து, விற்ற ஷாம்புகளை திரும்பப் பெற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எந்தெந்தப் பொருட்கள்? என்ன அபாயம் என்பதைப் பார்க்கலாம்.
இதில் ஒரு நல்ல விஷயம். டவ் ஷாம்பு பயன்படுத்தும் அனைவரும் இந்த செய்தியைக் கண்டு பதற வேண்டியதில்லை. திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஷாம்பூ அனைவரும் பயன்படுத்தும் ஷாம்பு வகை இல்லை. இது ட்ரை ஷாம்பு. அதாவது, தண்ணீர் இல்லாமல் தலை குளித்தது போன்ற தோற்றத்தை கொடுக்கும் உலர் ஷாம்பு இது. குளிர் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், அடிக்கடி தலை குளிக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் ஷாம்பூ. இந்த ட்ரை ஷாம்பூ பயன்படுத்துபவர்கள்தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இதை பயன் படுத்துவதும் மிக எளிது. தலைக்கு தண்ணீர் தேவை இல்லை. இந்த ஷாம்பு ஒரு ஸ்பிரே போல இருக்கும். உடலில் செண்ட் அடித்து கொள்வது போல் இதை தலைமுடிக்கு அடிக்க வேண்டும் சில நொடிகளில் இது தலையில் இருக்கும் எண்ணை பிசுக்கை குறைத்து, தலைமுடிக்கு நல்ல பளப்பான தோற்றத்தை கொடுக்கும்.
இந்த ட்ரை ஷாம்பு ஏன் ஆபத்து?
இந்த இந்த ஸ்ப்ரே வகை ஷாம்பூவில் பென்சீன் என்ற ஒரு வகை ரசாயன பொருள் கலந்திருக்கிறது. இது புற்று நோய் வருவதற்கு காரணமாக அமையலாம் என்கிறது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து அமைப்பு. பென்சீன் சுலபமாக ஆவியாகும் தன்மை உடையது. காற்றை விட அடர்த்தி குறைவானது. பிளஸ்டிக், ரப்பர், பூச்சிக்கொல்லிகளின் தயாரிப்பில் பென்சீன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் நோய்களை உருவாக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.
யுனிலிவர் நிறுவனம் டவ் வகை ஷாம்பூகள் மட்டுமில்லாமல், நெக்ஸஸ், சௌவே, டிரெஸ்ஸமே, டிகி ஆகிய ஷாம்பூகளையும் தயாரிக்கிறது. இந்த ஷாம்பூகளிலும் இந்த பிரச்சனை இருப்பதால், 2021 ஆம் ஆண்டுக்கு முன்னால் தயாரிக்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களையும் திரும்ப பெற முடிவு செய்து அறிவித்திருக்கிறது யுனிலிவர் நிறுவனம்.
ட்ரை ஷாம்புகள் இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை இல்லை. இதற்கு முன்னால், பி & ஜி நிறுவனம் அவர்களின் அனைத்து பொருட்களையும் சோதித்து, இதே பென்சீன் அதிகமாக இருப்பதாக பேண்டீன் மற்றும் ஹெர்பல் எசன்ஸ் நிறுவனங்களின் பொருட்களை இதே போல திரும்பப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், இதுவரை ட்ரை ஷாம்புகளில், பயன்படுத்தப்படும் பென்சீன் அளவுக்கு எந்த கட்டுப்படும் விதிக்கவில்லை. ஆனால் பென்சீன் போன்ற ரசாயனப்பொருட்களை தினமும் பயன்படுத்துவதால், உடல் நலம் கேடாகும் என்கிறது.
ட்ரை ஷாம்பூ பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.