No menu items!

விசிக மதுவிலக்கு மாநாட்டில் திமுக! – முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன்!

விசிக மதுவிலக்கு மாநாட்டில் திமுக! – முதல்வரை சந்தித்த பின் திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அவருடன் விசிக நிர்வாகிகளும் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ அழைப்பிதழைக் கொடுத்தார்.

முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தோம். முதல்-அமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது இது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.

அக்டோபர் 2-ம் தேதி விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம். விசிக சார்பில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ள மதுவிலக்கு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வீடியோ குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசவில்லை. திமுக – விசி கூட்டணி உறவில் எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்ல. நாங்கள் கூட்டணியில் உறுதியாகவே இருக்கிறோம். தேர்தலுக்கும் முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆட்சியில் பங்கு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மதுவிலக்கு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து, பிணைத்து பார்க்க வேண்டாம். மதுவிலக்கு தமிழ்நாட்டில் வரவேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என முதல்-அமைச்சர் தெரிவித்தார். நிர்வாக சிக்கலை கருத்தில்கொண்டு படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் எனவும் கூறினார்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக, இந்த மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று திருமாவளவன் அழைப்பு விடுத்தது அரசியல் களத்தில் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து மறைமலைநகரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பேசிய திருமாவளவன், “தமிழகத்தில் இதற்கு முன் யாரும் கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தினார்களோ, இல்லையோ; 2016ல் கூட்டணி ஆட்சி என்ற குரலை விசிக உயர்த்தியது. ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது வேறு; தொகுதி பங்கீடு என்பது வேறு. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, 1999ல் விசிக முன்வைத்த முழக்கம். நான் முதன் முதலில் நெய்வேலியில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது, ‘கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மனிதனுக்கு அதிகாரம் வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தேன். இதை சொல்கிற துணிச்சல் விசிகவுக்கு உண்டு.” என்று பேசியிருந்தார்.

இதனால் திமுக கூட்டணியில் விரிசலா என்ற விவாதங்கள் எழுந்தன. இதற்கிடையில் திருமாவளவன் ’ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு’ பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்புக் குரல்கள் எழும்பின. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...