4 ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, 7 மாதங்களில் நிறைவேற்றப் போகிறார்களா என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் இரவு பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று, கோயிலை மீட்டெடுத்தார்.
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில்தான் சூப்பர் முதல்வராக இருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஏறத்தாழ ரூ.5.38 லட்சம் கோடி கடன் வைத்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று ஒரு திட்டம் தொடங்கியிருக்கிறார். பெயர் வைப்பதில் ஸ்டாலினுக்கு இணையாருமில்லை. 46 பிரச்சினைகள் பொதுமக்களுக்கு இருப்பதாக 4 ஆண்டுகள் கழித்து கூறுகின்றனர். அவற்றை 45 நாட்களில் தீர்த்து வைப்பார்களாம். 4 ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாததை 7 மாதத்தில் நிறைவேற்ற முடியுமா? மக்களிடம் ஆசையைத் தூண்டி, வாக்குகளைப் பெறவே இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
அதிமுக அரசு சிறந்த நிர்வாகத்துக்காக பல விருதுகளைப் பெற்றது. அண்ணாமலையார் கோயில் குடமுழுக்கு அதிமுக ஆட்சியில் சிறப்பாக நடந்தது, கிரிவலப்பாதையை ரூ.64 கோடியில் மேம்படுத்தினோம், யாத்திரி நிவாஸ், புறவழிச்சாலை, தடுப்பணைகள், 3 அம்மா மருந்தகம், தாலிக்குத் தங்கம் என மக்களுக்கான பல்வேறு திட்டங்கள், பணிகளை செயல்படுத்தினோம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்திருக்கிறார்கள். இவ்வாறு பழனிசாமி பேசினார்.